https://republictn.com/

மூன்றாம் தேதி இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் மருத்துவ கனவோடு நீட் நுழைவுத் தேர்வை எழுதியிருந்தனர். ஆனால் தேர்வு முடிந்த சில நாட்களிலேயே வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாகக் கூறப்படும் அதிர்ச்சி தகவல் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தேசிய தேர்வு முகமைக்கு புகார்கள் குவிந்ததைத் தொடர்ந்து, ராஜஸ்தான் காவல்துறையின் சிறப்பு செயல்பாட்டு குழு விசாரணையை தொடங்கியது.

ஆரம்பக்கட்ட விசாரணையில், தேர்வுக்கு சில நாட்களுக்கு முன்பே வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்களில் ரகசிய மாதிரி வினாத்தாள்கள் பரவியதாக தெரியவந்துள்ளது.

அந்த மாதிரி வினாத்தாளில் இருந்த சுமார் 410 கேள்விகளில், 120 கேள்விகள் நீட் தேர்வின் உண்மையான வினாத்தாளுடன் ஒத்திருந்ததாகவும் விசாரணை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரத்தின் தீவிரத்தையும், பல மாநிலங்களை கடந்த நெட்வொர்க்கையும் கருத்தில் கொண்டு, மத்திய அரசு இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றியது. பின்னர் சிபிஐ நடத்திய தீவிர விசாரணையில், வினாத்தாள் கசிவு வெளிப்புறத்திலிருந்து மட்டும் நடைபெறவில்லை; தேர்வு அமைப்புக்குள்ளேயே சில அதிகாரிகள் மற்றும் நிபுணர்களின் பங்கு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததாக கூறப்படுகிறது.

விசாரணையின் மையமாக மகாராஷ்டிரா லாத்தூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வேதியியல் பேராசிரியர் பி.வி. குல்கர்ணி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் தேசிய தேர்வு முகமையின் வினாத்தாள் தயாரிப்பு மற்றும் மராத்தி மொழிபெயர்ப்பு குழுவில் நிபுணராக பணியாற்றியதாக கூறப்படுகிறது.

தனது பொறுப்பை தவறாக பயன்படுத்தி, தேர்வுக்கு முன்பே சில வினாக்களை நினைவாற்றல் மூலம் சேகரித்து வெளியே கொண்டு வந்ததாகவும் விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது.

அவருக்கு உதவியாக லாத்தூரில் இயங்கி வரும் பிரபல நீட் பயிற்சி மையத்தின் நிறுவனர் சிவராஜ் முடைகாப்கர் இருந்ததாகவும் கூறப்படுகிறது. கிராமப்புற பின்னணியிலிருந்து தொடங்கி, சிறிய வகுப்பறையில் ஆரம்பிக்கப்பட்ட அவரது பயிற்சி மையம் பின்னர் மகாராஷ்டிரா முழுவதும் பல கிளைகளுடன் பெரிய கல்வி நிறுவனமாக வளர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2025 நீட் தேர்வில், இவரது பயிற்சி மையத்தில் படித்த பல மாணவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனைகளில் சேர்ந்ததாகவும் கூறப்படுகிறது. தேர்வுக்குப் பிறகு வெளியான மாதிரி வினாத்தாளில் இருந்த கேள்விகள் அசல் தேர்வுடன் பெருமளவில் பொருந்தியதால் சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை தொடங்கப்பட்டது.

சிபிஐ சோதனைகளில், சம்பந்தப்பட்ட நபர்களின் மொபைல் போன்களில் வினாத்தாள் கேள்விகள் மற்றும் தேர்வு வினாக்கள் பொருந்தியதாக கூறப்படும் தகவல்கள் கண்டறியப்பட்டதாகவும், அதனுடன் தொடர்புடைய வீடியோக்களும் சிக்கியதாகவும் விசாரணை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் வேதியியல் மட்டுமல்லாது இயற்பியல் மற்றும் தாவரவியல் வினாத்தாள்களும் இதே முறையில் கசிந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதில் சில ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள், இடைத்தரகர்கள் மற்றும் தனிநபர்கள் தொடர்புடையவர்கள் எனவும், அவர்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் வழியாக வினாத்தாள்களை பகிர்ந்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

இந்த வழக்கில் பண பரிமாற்றங்கள், இடைத்தரகர்கள் வலையமைப்பு மற்றும் பயிற்சி மையங்களின் பங்கு குறித்து சிபிஐ தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

மொத்தத்தில், தேர்வு முறையின் பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு தொடர்பான இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago