K.N.Nehru

முன்னாள் அமைச்சர்களான கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோருக்கு சிக்கல் வலுத்து வருகிறது. லஞ்ச ஒழிப்புத்துறையும், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையும் விசாரணை இறுக்கியுள்ளனர். திமுகவின் முக்கியத் தலைவர்களை முடக்கும் வேலைகளில் இறங்கியுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் அலறுகின்றனர்.

நேரு வழக்கில் செந்தில் பாலாஜி ரூட்
முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிரான ₹634 கோடி வேலைவாய்ப்பு முறைகேடு வழக்கை, முந்தைய செந்தில் பாலாஜி வழக்கின் பாணியிலேயே மிகக் கடுமையான முறையில் கையாள காவல்துறை திட்டமிட்டுள்ளது.

திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் நியமிக்கப்பட்ட சுமார் 2,538 ஊழியர்களிடம் விரிவான விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை முடிவெடுத்துள்ளது. முறைகேடுகளுக்குத் துணைபோன அப்போதைய நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகளையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது.

வேலைக்காகப் பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டவர்களிடம் இருந்து அதிகாரப்பூர்வமாகப் புகார்களைப் பெற்று, வழக்கை மேலும் பலப்படுத்தத் தனித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

கல்வித்துறை உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ₹100 கோடி லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பின்னணி ஆவணங்கள் தீவிரமாகத் தோண்டப்பட்டு வருகின்றன.

இதையும் படியுங்க  "மாதம் மாதம் சரியும் ஜிஎஸ்டி வருவாய்? – தவெக அரசின் 'நிர்வாகத் தோல்வி' எனப் பாயும் எதிர்க்கட்சிகள்!"

அன்பில் மகேஷ் அமைச்சராக இருந்தபோது அவருடன் நெருக்கமாகப் பணியாற்றிய பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகளை விசாரிக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர். மெட்ரிகுலேஷன் துறையின் இயக்குநர் அந்தஸ்தில் இருக்கும் அதிகாரிகள், திமுக ஆட்சியில் ஓய்வு பெற்ற சில கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு எதிரான வலுவான டிஜிட்டல் ஆதாரங்கள் போலீசாரிடம் சிக்கியுள்ளன.

இதில் சம்பந்தப்பட்ட சில அதிகாரிகளிடம் ஏற்கனவே ரகசிய இடங்களில் வைத்து முதற்கட்ட விசாரணையும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

திமுகவின் பழிவாங்கல் குற்றச்சாட்டு
அடுத்தடுத்துத் பாயும் இந்த அதிரடி சட்ட நடவடிக்கைகளால் திமுக தலைமை கடும் அதிர்ச்சியடைந்துள்ளது.
“ஆளுங்கட்சியான தவெக, தங்களது அரசியல் தோல்விகளையும், நிர்வாகக் குறைபாடுகளையும் மறைக்கவே எதிர்க்கட்சியினர் மீது திட்டமிட்டுப் பழிவாங்கும் நடவடிக்கைகளை ஏவிவிடுகிறது. இரண்டு முக்கிய முன்னாள் அமைச்சர்களை அரசியல் ரீதியாக முடக்குவதே இதன் இறுதி நோக்கம்” என்று திமுக தலைமை கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *