தமிழகத்தில் அரசு நிறுவனமான டாஸ்மாக் மதுபானக் கடைகள் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்பக் காலகட்டத்தில், மதுபாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ஜஸ்ட் 2 ரூபாய் மட்டுமே உபரியாகப் பெறப்பட்டது. அதுவும் நுகர்வோர்கள் யாராவது அதற்கு ஆட்சேபனை தெரிவித்து எதிர்த்துக் கேள்வி கேட்டால் அந்தத் தொகையை வாங்காமல் விட்டுவிடும் எளிய நடைமுறைதான் அன்று இருந்தது. அதன் பிறகு, ‘கூலிங் பீருக்கு மட்டும் எக்ஸ்ட்ரா 10 ரூபாய்’ என்ற புதிய கலாச்சாரம் மெல்லப் புகுந்தது.
அதை யாராவது எதிர்த்துக் கேள்வி கேட்டால், ‘கூலிங் இல்லாத பீர்’ கொடுத்துக் குடிப்பிரியர்களின் வாயை அடைத்த ஊழியர்கள், காலப்போக்கில் அதனைச் சகல மதுபான பாட்டில்களுக்கும் 10 ரூபாய் எக்ஸ்ட்ரா என மாற்றி எழுதப்படாத விதியாகவே ஆக்கினர். இப்படி கடைகளில் எல்லா உபரி செலவுகளும் போக, வெறுமனே இந்த இரண்டு ரூபாய் மேட்டரிலேயே டாஸ்மாக் கடை ஊழியர்களுக்குத் தினமும் எக்கச்சக்கமாகக் ‘கலெக்ஷன்’ சேர்ந்தது. மாவட்ட மற்றும் மண்டல அளவில் உள்ள டாஸ்மாக் அலுவலக ஊழியர்களின் கண்களைக் கடுமையாக உறுத்தத் தொடங்கியது.

உடனே அவர்கள், இந்தத் தினசரி அசுர கலெக்ஷன் விபரங்களை மேல் அதிகாரிகளின் காதுகளுக்குக் கொண்டு சென்றது. ‘எங்களுக்கும் இதில் ஏதாவது பங்குகளைச் செய்யுங்கள்’ என்று கோரிக்கை வைக்க, அந்தக் கோரிக்கையானது பின்னாளில் கலெக்ஷன் தொகை அதிகமாக அதிகமாக, மேல் இடத்திலிருந்து கீழ்மட்ட ஊழியர்களுக்குக் கட்டாயமாக விதிக்கப்படும் ஒரு ‘மாமூல் கட்டளையாகவே’ தலைகீழாக மாறிப்போனது. அடுத்த கட்டமாக, இந்தத் தாராள கலெக்ஷனைப் பார்த்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, உள்ளூர் போலீசார், அந்தந்த ஏரியா ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் அனைவரும் ‘நாங்கள் மட்டும் இங்கே வேடிக்கை பார்க்கவா இருக்கிறோம்?’ என்று பங்கு கேட்கத் தொடங்க, இந்தச் சங்கிலித் தொடர் ஊழல் இறுதியாகத் துறை சார்ந்த அமைச்சர் லெவல் வரை போய் முடிந்தது.

இதன் விளைவாக, ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கும் இவ்வளவு மாமூல் கொடுத்தாக வேண்டும் என்று அதிகாரப்பூர்வமற்ற ‘டார்க்கெட்’ நிர்ணயிக்கப்பட்டதால், தற்போது தவறைத் தடுத்துக் கேள்வி கேட்க வேண்டிய அத்தனை துறையினரும் தங்களின் பங்கைச் சரியாகப் பெற்றுக் கொண்டு மௌனம் காக்க, அன்று 10 ரூபாயாக இருந்த கூடுதல் கட்டணம் இன்று பல இடங்களில் 30 ரூபாய் வரை அசுரத்தனமாக உயர்ந்து நிற்கிறது. இப்படி கிடைக்கும் சட்டவிரோத வருவாயைக் கொண்டு சிலர் சொந்தப் பாதுகாப்பிற்குப் ‘பர்சனல் செக்யூரிட்டி’ வைக்கும் அளவிற்கு டாஸ்மாக் நிர்வாகம் சீரழிந்துள்ளது.
தமிழகத்தில் ஆட்சி மாறி முதல்வர் சி.ஜோசப் விஜய் வந்ததும் இந்த ‘எக்ஸ்ட்ரா பத்து ரூபாய்’ ஊழல் ஒழிந்துவிடும் என்று கனவு கண்டிருந்த குடிப்பிரியர்கள்தான், ஏமாற்றத்துடன் ஆங்காங்கே டாஸ்மாக் ஊழியர்களுடன் போனில் வீடியோ எடுத்துத் தற்பொழுது அன்றாடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதே சமயம், நுகர்வோர்கள் எவ்வளவு கூடுதல் காசு கொடுத்தாலும் அவர்களுக்குக் கடைக்குச் சென்றால் விரும்பிய பிராண்ட் சரக்குகள் நிரந்தரமாகக் கிடைப்பதில்லை. மாறாக, டாஸ்மாக் அதிகாரிகள் மதுபானக் கொள்முதலில் தயாரிப்பு நிறுவனங்களிடம் வாங்கும் அசுரத்தனமான ‘கல்லா கமிஷன்’ காரணமாக, அதிகாரிகள் காட்டும் பிராண்டுகளை மட்டுமே ஊழியர்கள் தங்களின் சாய்ஸில் குடிப்பிரியர்களுக்குத் திணித்து வருகிறார்கள் என்பது ஒரு தனி வரலாற்றுக்கதையாக நீள்கிறது.

இத்தகைய ஒட்டுமொத்த முறைகேடுகளுக்கும், லஞ்சப் பெருக்கத்திற்கும். நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனில், டாஸ்மாக் கடைகளை அரசிடமிருந்து முழுமையாகப் பறித்துத் ‘தனியார் வசம்’ ஒப்படைப்பதுதான் ஒரே சரியான தீர்வாகும் என்று சமூக ஆர்வலர்கள் கருதும் வேளையில், அரசு மதுபானக் கடையில் ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக வாங்கும் பத்து ரூபாய்க்கான முழு வரவு செலவு கணக்குப் பட்டியலை (கடையிலிருந்து அதிகாரிகள், போலீசார், ஆளுங்கட்சியினர் மற்றும் மீடியாவுக்குப் போகும் ரூ. 3,000 மாமூல் விபரம் வரை) டாஸ்மாக் கடை விற்பனையாளர் ஒருவர் தற்பொழுது பொதுவெளியில் பகிர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, முதல்வர் விஜய் அவர்களே, அரசு நிர்வாகத்திற்குப் பெரும் கலங்கத்தை விளைவித்து வரும் இந்த ‘டாஸ்மாக் ஊழல் சாத்தானை’ விரைவாக விரட்டியடித்து, ஒட்டுமொத்த மதுபான விற்பனையையும் தனியார் வசம் ஒப்படைக்க உடனடி நடவடிக்கை எடுப்பதே சாலச்சிறந்தது” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
