Sellur Raju

“எங்களை எவ்வளவு நேரம் பெஞ்சில் உட்கார வைத்திருப்பீர்கள்? ஒரு மரியாதைகூட இல்லையா?” – காவல்துறையினரிடம் முன்னாள் அமைச்சர் ஆவேசம்!

மதுரையில் அதிமுக நிர்வாகி பி.எம். மன்னனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், அவரைச் சந்திக்கச் சென்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல் அலுவலகத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததால் ஆத்திரமடைந்த செல்லூர் ராஜூ, காவல்துறையினரிடம் சரமாரியாகக் கேள்வி எழுப்பிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட உள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வாக்களிக்க, தவெக சட்டமன்ற உறுப்பினர் மாதர் பதூருதீன் முஸ்தபாவுக்கு பணம் கொடுக்க முயன்றதாக அதிமுக நிர்வாகி பி.எம். மன்னன் மீது குதிரை பேரப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக, மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் மன்னனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

Mannan Arrested

இந்தத் தகவலறிந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுக உள்ளூர் நிர்வாகிகளுடன் மன்னனைச் சந்திப்பதற்காக மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல் அலுவலகத்திற்குச் சென்றார். அப்போது, உள்ளே சென்று மன்னனைச் சந்திக்க அதிகாரியிடம் அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறிய காவல்துறையினர், செல்லூர் ராஜூ உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளை அங்கிருந்த மரப்பெஞ்சில் நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  காருக்கு ஈ.எம்.ஐ கட்டக்கூட வழியற்ற தவெக எம்.எல்.ஏ-க்கள்..! முதல்வருக்கு சென்ற மெசேஜ்.. தடுக்கும் அதிகாரிகள்..!

இதனால் கடும் அதிருப்தியடைந்த செல்லூர் ராஜூ, காவல்துறையினரை நோக்கி, “ஏங்க… ஆட்சி மாறினால் எல்லாமே மாறிவிடுமா? காலம் முழுவதும் இப்படித்தான் இருக்குமா? ஒரு மரியாதைகூட இல்லையா? எவ்வளவு நேரம் எங்களைப் பெஞ்சில் உட்கார வைத்திருக்கிறீர்கள்? நாங்கள் எல்லோரும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர், மாநில நிர்வாகிகள். அவரைப் பார்க்கத்தானே வந்திருக்கிறோம்; என்ன, அவரை இழுத்துக்கொண்டா போகப் போகிறோம்?” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதற்கிடையே, மன்னனிடம் துணைக் காவல் ஆணையர் எம்.பி. திவ்யா தலைமையிலான தனிப்படைக் காவல்துறையினர் சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிர விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த விசாரணையின்போது, தவெக சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபாவின் உதவியாளர் கனி அளித்ததாகக் கூறப்படும் ஆடியோ ஆதாரங்கள் மற்றும் தொலைபேசி உரையாடல்கள் குறித்து காவல்துறையினர் ஆய்வு செய்தனர். செல்லூர் ராஜூவின் வருகையால் காவல் அலுவலகத்திற்கு வெளியே அதிமுக தொண்டர்கள் அதிகளவில் திரண்டதால், அப்பகுதியில் பலத்த காவல் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

இதையும் படியுங்க  தமிழகத்தில் இனி எதிர்க்கட்சி இருக்காது” — இலங்கை எம்.பி ராமநாதன் அர்ஜுனன்

காவல் அலுவலகத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜூ, தவெக அரசுக்கு எதிராக அ.தி.மு.க. எந்தச் சதியிலும் ஈடுபடவில்லை என்று தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “தவெக ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணமோ, நோக்கமோ அதிமுகவுக்குக் கிடையாது. தற்போதைய தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மையால் இந்த ஆட்சி தானாகவே கவிழுமே தவிர, அதற்கு நாங்கள் காரணமாக இருக்க மாட்டோம்” என்றார்.

மேலும், குதிரை பேரப் புகார் அளித்த தவெக சட்டமன்ற உறுப்பினர் மாதர் பதூருதீன் முஸ்தபா ஒன்றும் அரிச்சந்திரன் அல்ல என்று விமர்சித்த அவர், பி.எம். மன்னன் மீது காவல்துறையினர் பொய் வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் குற்றம் சாட்டினார். இந்த வழக்கை காவல்துறையினர் முறையாகவும் நேர்மையாகவும் விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தொடர்ந்து, மன்னன் மீதான நடவடிக்கை குறித்துப் பேசிய செல்லூர் ராஜூ, “மன்னன் மக்கள் பணியைத்தான் செய்தார். அவரைப் போய் இப்படி காவல் நிலையத்திற்குள் அடைத்து வைத்திருக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது எனக்கே ஓர் அச்சம் ஏற்படுகிறது. நம்மையும் உள்ளே வைத்துவிடுவார்களோ என்ற பயமாக இருக்கிறது” என்று நகைச்சுவையாகவும் அரசியல் விமர்சனத்துடனும் தெரிவித்தார்.

இதையும் படியுங்க  வேலியில் போகும் ஓணான்.. திருமாவுக்கு CM விஜய் வைத்த செக்..? வெளியேறும் விசிக… உள்ளே வரும் பாமக..!?

தவெக அரசின் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்த செல்லூர் ராஜூ, “சமூக வலைதளங்களில் ரீல்ஸ் போட்டு எப்படி அதிகாரத்திற்கு வந்தார்களோ, அதேபோல நிஜ அரசாங்கத்தையும் நடத்திவிடலாம் என்று முதல்வர் விஜய் நினைக்கிறார். கட்சியையும் ஆட்சியையும் ரீல்ஸ் மூலமாகவே நடத்திவிடலாம் என்று நினைத்தால், மக்கள் விரைவில் இந்த அரசுக்குச் சரியான பாடம் புகட்டுவார்கள்” என்று கூறினார். மேலும், ஆட்சிப் பொறுப்பேற்று ஆறு மாதங்கள் கடந்தும் இதுவரை புதிய திட்டம் எதுவும் கொண்டுவரப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

இதனிடையே, தவெக ஆட்சியில் கவுன்சிலர் பதவிகளுக்கான பேரம் நடைபெறுவதாகவும் செல்லூர் ராஜூ புதிய குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுதொடர்பான வாய்ஸ் மெயில் ஆடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்தக் குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பி.எம். மன்னன் மீதான குதிரை பேரப் புகார், அதுதொடர்பான காவல்துறை விசாரணை, அவரைச் சந்திக்கச் சென்ற செல்லூர் ராஜூவின் வாக்குவாதம் மற்றும் தவெக அரசுக்கு எதிராக அவர் முன்வைத்துள்ள தொடர் விமர்சனங்கள் என மதுரையில் நடைபெற்ற இந்தச் சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *