Edappadi – Vijay

தவெக ஆட்சியைக் கவிழ்க்கும் சதித் திட்டம், குதிரை பேர விவகாரம் தொடர்பாக, மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் பி.எம். மன்னனிடம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் அதிமுகவில் இணைந்த பி.எம். மன்னனை, இன்று அதிகாலை போலீஸார் ரகசியமாகப் பிடித்துச் சென்று விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ மதார் பதூருதின் முஸ்தபா அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, தவெக அரசுக்கு எதிராக ஒரு வெடிகுண்டை வீசினார். சட்டப்பேரவையில் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரும்போது, அதற்கு ஆதரவாக வாக்களிக்க தனக்கு ரூ.30 கோடி வரை பேரம் பேசப்பட்டதாகப் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்தார். “முதலில் ரூ.15 கோடியை அட்வான்ஸாக வாங்கிக் கொள்ளுங்கள், மீதி ரூ.15 கோடியை நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது ஆட்சிக்கு எதிராக வாக்களித்த பின் பெற்றுக் கொள்ளுங்கள்” எனத் தன்னை அதிமுக நிர்வாகி ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வற்புறுத்தியதாக அவர் குற்றம் சாட்டினார்.

இதையும் படியுங்க  ஆடி வரும் தேர்..! முதல்வர் விஜய் பயன்படுத்தும் கார் இத்தனை கோடியா..?
P.M.Mannan

இந்த விவகாரம் தமிழக அரசியல் தளத்தில் பூதாகரமானதைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ முஸ்தபா நேற்று முன்தினம் மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தார். தன்னிடம் பேரம் பேசப்பட்டதற்கான வலுவான தொலைபேசி உரையாடல் உள்ளிட்ட டிஜிட்டல் ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறி, அவற்றை போலீசாரிடமும் ஒப்படைத்தார். முஸ்தபா கொடுத்த அந்தப் பக்காவான ஆதாரங்களின் அடிப்படையில் களத்தில் இறங்கிய மத்திய குற்றப்பிரிவு போலீஸார், இன்று அதிகாலையிலேயே அதிமுக நிர்வாகியான பி.எம். மன்னனின் இருப்பிடத்தைச் சூழ்ந்து, அவரை அதிரடியாகப் பிடித்துச் சென்றனர்.

மதுரை மாநகராட்சியின் முன்னாள் துணை மேயரான பி.எம். மன்னன், சமீபத்தில்தான் அதிமுகவில் இணைந்து தீவிரமாகச் செயல்பட்டு வருபவர். தவெக எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசியது மன்னன் தானா? அவருக்குப் பின்னால் இருந்து இந்த குதிரை பேர ஆபரேஷனை இயக்கிய முக்கியப் புள்ளிகள் யார்? இந்த சதித் திட்டத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என்ற பல கோணங்களில் அவரிடம் போலீஸார் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்க  அரசின் கவனத்திற்கு: CM விஜயை நோக்கி விஜய் சேதுபதியின் கோரிக்கை

விஜய் தலைமையிலான தவெக ஆட்சியைத் தொடக்கத்திலேயே நிலைகுலைய வைக்க, எதிர்க்கட்சிகள் கோடிகளைக் கொட்டி எம்.எல்.ஏ-க்களை வளைக்கப் பார்க்கிறார்கள் என்ற தவெக-வின் குற்றச்சாட்டு, இந்த போலீஸ் விசாரணை மூலம் மேலும் சூடேறியுள்ளது. ஆதாரங்கள் சிக்கியுள்ளதால், இந்த வழக்கில் அடுத்தடுத்து முக்கிய அரசியல் தலைவர்கள் மீதும் நடவடிக்கை பாயலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *