தவெக ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ்வொரு துறையிலும் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை தொடர்கதையாகி வருகிறது. லஞ்சம், ஊழல், கடமை தவறுதல் ஆகிய மூன்றையும் தங்களது அடையாளமாக மாற்றிக் கொண்ட அரசு அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை பாயத் தொடங்கியதும், நிர்வாக அமைப்பில் ஒரு புதுவிதமான பயம் தொற்றிக் கொண்டுள்ளது. ஆனால், அந்த பயம் அவர்களைத் திருத்துவதற்குப் பதிலாக, அலுவலகத்திற்கே வராமல் ‘எஸ்கேப்’ ஆகும் குறுக்கு வழியைக் காட்டியிருப்பது தான் பெரும் வெட்கக்கேடு.
மக்களின் வரிப்பணத்தில் மாதா மாதம் கணிசமான சம்பளத்தை வாங்கிக் கொண்டு, தங்களது கடமையைப் புறக்கணிக்கும் இப்படிப்பட்ட அதிகாரிகளின் போக்கு எல்லை மீறிப் போய்க்கொண்டிருக்கிறது. சிவகங்கையில் “ஆய்வு” என்ற பெயரில் அலுவலகத்தை விட்டுத் தலைமறைவாகி, வசூலை மட்டும் கச்சிதமாகச் செய்யும் ஒரு பிடிஓ; மறுபுறம் திண்டுக்கல் மலைப்பகுதியில், பணிபுரியும் இடத்திற்குச் செல்லாமல் மதுக்கோப்பையோடு காலத்தைக் கழிக்கும் மற்றொரு பிடிஓ… என குறிப்பாக ஊரக வளர்ச்சி துறையில் தமிழ்நாடு முழுவதும் இந்த நிலையே நீடிக்கிறது.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் அவரின் அலுவலகத்திற்கு வந்தே பல நாட்கள் ஆகிவிட்டதாம். ஏதாவது ஒரு ஊராட்சியில் ஆய்வு என சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகி விடுகிறாராம். ஆனாலும், வசூல் விஷயத்தை மட்டும் கைவிடுவதே இல்லையாம். ஊராட்சி செயலாளர்களை மிரட்டியே போடப்படும் பில்லில் பாதி தொகையை கறந்து விடுவதை வாடிக்கையாக வைத்து உள்ளாராம். இந்த மூன்று மாதத்தில் அவர் ஆளுமைக்கு கீழ் உள்ள ஊராட்சிகளில் போடப்பட்டுள்ள பில்களின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்கின்றனர் அதே அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு பிடிஓ வின் நடவடிக்கை வேறுமாதிரியாக உள்ளது. மாவட்டத்தில் உள் ள மலைப்பிரதேச ஒன்றியத்தில் பணிபுரியும் முருகனின் மற்றொரு பெயரை கொண்ட பிடிஓ மலையேறி வருவதே இல்லையாம். எந்நேரம் சிந்துபைரவி சிவகுமார் போல கோப்பையோடு வாழ்பவருக்கு மலைப்பயணம் ஒத்துவருவது இல்லையாம். வாரத்திற்கு ஒருநாள் மட்டுமே மலையேறி வருகிறாராம். அவசரகால பணிகளைக் கூட கேட்டு செய்வதற்கு வழியில்லாமல் மற்ற அலுவலர்கள் தவிக்கிறார்களாம்.
ஆக… அலுவலகத்திற்கு தினமும் வராத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், அது உள்ளாட்சி தேர்தலில் ஆளும்கட்சிக்கு எதிராக போய்விடும்” என அந்தந்தப் பகுதி மக்கள் கோரிக்கையும், எச்சரிக்கையும் விடுத்து வருகின்றனர்.
நடவடிக்கை எடுப்பார்களா…பொறுத்திருந்து பார்ப்போம்.
