திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறு வார்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு முறையான சிகிச்சை மற்றும் படுக்கை வசதிகள் வழங்கப்படுவதில்லை என சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க், மருத்துவமனையில் அதிரடி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மருத்துவமனையின் மகப்பேறு வார்டில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிப் பெண்களுக்கு உரிய சிகிச்சைகள் மற்றும் அவசரகாலப் பராமரிப்புகள் வழங்கப்படுவதில்லை என்றும், செவிலியர்கள் அலட்சியமாக நடந்துகொள்வதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டிருந்தனர். இந்தக் குற்றச்சாட்டுகளின் தீவிரத்தைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் மருத்துவமனையின் பிரசவ மற்றும் குழந்தைகள் வார்டுகளுக்கு நேரடியாகச் சென்று மருத்துவ வசதிகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு செய்தார்.

இந்த மருத்துவமனையில் நாளொன்றுக்கு சுமார் 35 முதல் 40 பிரசவங்கள் வரை நடைபெறுவதாகத் தெரிவித்த ஆட்சியர், அங்கு நிலவும் இடப்பற்றாக்குறையைப் போக்குவதற்கு உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என உறுதியளித்துள்ளார்.
இதனிடையே, கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் அவர்களுடன் வரும் உதவியாளர்களிடம் மருத்துவமனை ஊழியர்கள் யாரேனும் லஞ்சம் அல்லது கையூட்டு பெற்றால், அவர்கள் மீது எவ்விதப் பாரபட்சமும் இன்றி மிகக் கடுமையான துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் எட்வினா வசந்தா எச்சரித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவில் பேசிய பெண், தானும் ஒரு செவிலியராக (Staff Nurse) பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்டிருந்தார். மருத்துவத் துறையில் பணியாற்றும் ஒருவரே அரசு மருத்துவமனையின் அவலநிலை குறித்து வேதனையுடன் பேசியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
வீடியோவில் பேசிய பெண்கள், பிரசவ வார்டில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களுக்கு அவசர சிகிச்சை அளிப்பதை விட்டுவிட்டு, மருத்துவமனையிலேயே பிரியாணி சமைப்பது, தங்களது வீட்டு விஷயங்களைப் பேசுவது மற்றும் நோயாளிகளைத் தரக்குறைவாகத் திட்டுவது போன்ற செயல்களில் மட்டுமே நேரத்தைச் செலவிடுவதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இந்த மருத்துவமனையின் சுகப்பிரசவ வார்டில் (Labor Ward) மொத்தம் 8 படுக்கைகள் மட்டுமே உள்ளன. ஆனால், நாளொன்றுக்கு 35 முதல் 40 பிரசவங்கள் வரை நடைபெறுவதால், வேறு வழியின்றி கர்ப்பிணித் தாய்மார்களைத் தரையிலேயே படுக்க வைக்கும் நிலை ஏற்படுவதாகவும், போதிய இடவசதி இல்லாததால் வார்டுக்கு வெளியேயே பிரசவம் நடைபெறும் சூழல் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பனிக்குடம் உடைந்து, குழந்தையின் தலை வெளியே தெரியத் தொடங்கிய நிலையிலும், அங்கிருந்த செவிலியர்கள் உடனடியாக வந்து கவனிக்கவில்லை என்றும், மிகவும் அலட்சியமாகப் பதிலளித்து தங்களை வேதனைப்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் கண்ணீருடன் வீடியோவில் விவரித்திருந்தனர்.
பெண்கள் கண்ணீருடன் அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, மருத்துவமனை டீன் டாக்டர் எட்வினா வசந்தா ஊடகங்களைச் சந்தித்தார். அப்போது, இந்த மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்வதாகவும், ஒரே நாளில் 40-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெறும் நேரங்களில் ஏற்படும் இடநெருக்கடி காரணமாக சில அசௌகரியங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தார். மேலும், ஊழியர்களின் நடத்தை மற்றும் லஞ்சப் புகார்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவியபோது, தொடக்கத்தில் ஒரு குறிப்பிட்ட ‘Fact Check’ இணையதளப் பக்கத்தில் தமிழக அரசுத் தரப்பில் விளக்க அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதில், “அரசு மருத்துவமனை குறித்து கர்ப்பிணிப் பெண் கூறிய குற்றச்சாட்டு தவறானது; அங்கு சிகிச்சை முறையாகவே வழங்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், அந்தப் பதிவு பின்னர் உடனடியாக நீக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதனால், உண்மை நிலவரத்தை மறைக்க முயற்சி நடைபெறுகிறதா என்ற கேள்வியை முன்வைத்து ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக வலைதளப் பயனர்கள் மத்தியில் பெரும் விவாதமும் சர்ச்சையும் வெடித்துள்ளது.
