https://republictn.com/

நீட்- வினாத்தாள் லீக்கான வழக்கில் சிபிஐ சூத்திரதாரியான பி.வி.குல்கர்னியைக் கைது செய்துள்ளது. சிபிஐ விசாரணையின்படி, இந்த நபரே வினாத்தாள் கசிவின் முக்கிய ஆதாரமாக இருந்துள்ளார். புனேவைச் சேர்ந்த வேதியியல் விரிவுரையாளரான பி.வி. குல்கர்னி, என்.டி.ஏ-வின் சார்பாக தேர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, அதன் மூலம் வினாத்தாள்களை பெற்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஏப்ரல் 2026-ன் கடைசி வாரத்தில், குல்கர்னி மற்றொரு குற்றவாளியான மனிஷா வாக்மரேயின் உதவியுடன் சில மாணவர்களை ஒன்று திரட்டியுள்ளார். மனிஷா ஏற்கனவே மே 14, 2026 அன்று சிபிஐ-யால் கைது செய்யப்பட்டிருந்தார். சிபிஐ-யின் தகவல்படி, குல்கர்னி புனேவில் உள்ள தனது வீட்டில் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வகுப்புகளை நடத்தியுள்ளார். இந்த வகுப்புகளில், அவர் கேள்விகள், அவற்றிற்கான சரியான பதில்களை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்துள்ளார். மாணவர்கள் அந்தக் கேள்விகளைத் தங்கள் நோட்டுப் புத்தகங்களில் எழுதிக் கொண்டனர்.

பின்னர், மே 3, 2026 அன்று நடைபெற்ற அசல் நீட்-யுஜி தேர்வுத் தாளில் இருந்த அதே கேள்விகள், புனேவில் இருந்த கேள்விகளுடன் முழுமையாகப் பொருந்தியதாக விசாரணையில் தெரியவந்தது. விசாரணைக்குப் பிறகு, புனேவில் இருந்து பி.வி. குல்கர்னியை சிபிஐ கைது செய்தது. அவர் மகாராஷ்டிராவின் லத்தூரைச் சேர்ந்தவர். கடந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் பல இடங்களில் சிபிஐ சோதனைகளை நடத்தியுள்ளது.

பல ஆவணங்கள், மின்னணு சாதனங்கள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தற்போது தடயவியல், தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறையிடமிருந்து வந்த புகாரின் அடிப்படையில், சிபிஐ இந்த வழக்குப் பதிவை மே 12, 2026 அன்று பதிவு செய்தது. நீட்-யுஜி 2026 தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக அந்தப் புகாரில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

வழக்கு பதிவு செய்யப்பட்ட உடனேயே, சிபிஐ சிறப்பு குழுக்களை அமைத்து நாடு முழுவதும் சோதனைகளைத் தொடங்கியது, பல சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தியது. இதுவரை, ஜெய்ப்பூர், குருகிராம், நாசிக், புனே மற்றும் அஹில்யநகர் ஆகிய இடங்களில் இருந்து மொத்தம் எட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஐந்து பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஏழு நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள இருவரும் டெல்லிக்கு இடைக்கால காவலில் கொண்டுவரப்படுகின்றனர். குல்கர்னி இன்று கைது செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago