https://republictn.com/

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் விவகாரம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆகும். நேற்று அதிகாலை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தலா 3 ரூபாய் அளவிற்கு உயர்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி நிலவுகிறது.

இதேவேளை, வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகள் மூடப்படும் என சமூக வலைதளங்களில் பரவிய செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

அந்த தகவலின்படி, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் காரணமாக ஹார்மோஸ் நீரிணை பகுதியில் ஏற்பட்ட தடைகள் உலகளவில் எரிபொருள் விநியோகத்தை பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சில நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் எரிபொருள் இறக்குமதி மற்றும் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் எரிபொருள் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதன்படி, தேவையற்ற வெளிநாட்டு பயணங்களை தவிர்க்கவும், தங்கம் வாங்குவதை தற்காலிகமாக ஒத்திவைக்கவும், பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்தவும், வாரத்தில் சில நாட்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு (Work From Home) முன்னுரிமை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பல மாநிலங்களில் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மெட்ரோ உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், “ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகள் மூடப்படும்” என்ற செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. ஆனால் இதனை மத்திய அரசு முற்றிலும் மறுத்துள்ளது.

இந்திய பெட்ரோலிய டீலர்கள் சங்கம் இத்தகைய எந்த முடிவையும் எடுத்ததாக கூறப்படுவது தவறானது எனவும், மத்திய அரசு இதுபோன்ற எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், “ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகள் மூடப்படும் என்ற தகவல் முற்றிலும் பொய்யானது. இதுபோன்ற எந்த அறிவிப்பும் மத்திய அரசு அல்லது பெட்ரோலிய டீலர்கள் சங்கத்தால் வெளியிடப்படவில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அவசர மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு எரிபொருள் வழங்கல் வழக்கம்போல் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகள் மூடப்படும் என்ற தகவல் வதந்தி என மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago