செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. விசில் சின்னத்தில் போட்டியிடும் மரகதம் குமரவேல், ஈசூர் மற்றும் பூதூர் ஆகிய பகுதிகளில் தனது முதற்கட்ட தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் தவெக வேட்பாளரின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த மதுராந்தகம் இடைத்தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் என 5 முனைப் போட்டி நிலவி வருகிறது. முன்னதாக, இந்தத் தொகுதியில் தவெக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சியினரிடையே தேர்தல் பணிகளில் சில சலசலப்புகள் ஏற்பட்டன.
எனினும், தவெக தரப்பில் வேட்பாளரின் வெற்றிக்காகத் தீவிரமாக உழைக்கப் போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வேட்பாளருக்குப் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிகழ்வு செங்கல்பட்டு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட வீராணம் கிராமத்திற்குள் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் மரகதம் குமரவேல் பிரச்சாரத்திற்குச் சென்றபோது, அப்பகுதி பொதுமக்கள் அவரை “கிராமத்திற்குள் அனுமதிக்கக் கூடாது” என முழக்கமிட்டு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தொகுதியில் அடிப்படை நலத்திட்டங்கள் மற்றும் உள்ளூர் வளர்ச்சிப் பணிகள் தங்களைச் சரியாக வந்தடையவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

குறிப்பாக, முதியோர் உதவித்தொகை மற்றும் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் போன்ற அத்தியாவசியத் திட்டங்கள் கிராம மக்களுக்கு முறையாகக் கிடைக்கவில்லை என்ற அதிருப்தியில் இருந்த மக்கள், வேட்பாளரின் பிரச்சார வாகனத்தை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், தற்போது தவெக வேட்பாளராகக் களம் காண்கிறார். அதிமுகவோடு இருந்த பாமக கூட்டணி மற்றும் பழைய வாக்கு வங்கி சமன்பாடுகள் இந்த முறை மாறியிருப்பதும், இந்த உள்ளூர் எதிர்ப்புக்கு மற்றொரு பின்னணியாகப் பார்க்கப்படுகிறது.
விஜய்யை எம்.ஜி.ஆரின் முகமாக முன்னிறுத்தி மரகதம் குமரவேல் தீவிரப் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், வீராணம் கிராம மக்களின் இந்தத் திடீர் எதிர்ப்பு மதுராந்தகம் இடைத்தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீராணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள், மரகதம் குமரவேல் மீது முக்கியக் குற்றச்சாட்டாக முன்வைப்பது, அவர் ஏற்கனவே இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் எம்எல்ஏவாக வெற்றி பெற்றதற்கு நன்றி தெரிவிக்கக்கூட தங்களை நேரில் வந்து சந்திக்கவில்லை என்பதுதான்.
“கடந்த தேர்தலில் உங்களுக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தோம். ஆனால், தொகுதிப் பக்கம் நீங்கள் வரவும் இல்லை, தொகுதிக்கு எதுவும் செய்யவும் இல்லை. இப்போது கட்சி மாறி மீண்டும் ஓட்டு கேட்டு மட்டும் எப்படி வரலாம்?” என்று மக்கள் அவரது வாகனத்தை முற்றுகையிட்டு நேரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்தத் திடீர் இடைத்தேர்தல் வந்ததற்கு, மரகதம் குமரவேல் தனது முந்தைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததே காரணம் என குறிப்பிடுகிறது. இதனால், ஒரு தனிநபரின் அரசியல் லாபத்திற்காகத் தேர்தல் நடத்தப்பட்டு, மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக வீராணம் பகுதி மக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பொதுமக்கள் பலரும் தங்களது கடுமையான அதிருப்தியைப் பதிவு செய்து வருகின்றனர்.
வீராணத்தில் மக்கள் எதிர்ப்பு கிளம்பிய அதே நேரத்தில், தேர்தல் களத்தில் மற்றொரு அதிர்ச்சியாக மரகதம் குமரவேலின் வேட்புமனுவில் முரண்பாடுகள் இருப்பதாக தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் புகார்கள் அளிக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நிதியாண்டில் சமர்ப்பிக்கப்பட்ட வருமான விவரங்களில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறப்படும் இந்த விவகாரம், தேர்தல் அதிகாரிகள் மத்தியில் தற்போது ஆய்வில் உள்ளது.
வீராணம் கிராமத்தில் மக்கள் எதிர்ப்பு கிளம்பிய அதே நேரத்தில், தேர்தல் களத்தில் திமுக மற்றும் இதர எதிர்க்கட்சிகளின் அதிருப்தியாளர்கள் மட்டுமின்றி, தங்களை ஏமாற்றிவிட்டுச் சென்ற முன்னாள் எம்எல்ஏவுக்கு எதிராகத் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என உள்ளூர் அதிமுக தொண்டர்களும் பொதுமக்களுடன் இணைந்து தவெகவுக்கு எதிரான முழக்கங்களை முன்னெடுத்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தவெக கட்சியின் முதல் தேர்தல் களம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், தொடக்கத்திலேயே வீராணம் போன்ற கிராமங்களில் இத்தகைய கடுமையான எதிர்ப்புகளையும், சட்டச் சிக்கல்கள் குறித்த புகார்களையும் வேட்பாளர் எதிர்கொண்டு வருவது மதுராந்தகம் தேர்தல் களத்தை மிகவும் பரபரப்பாக்கியுள்ளது.
