தமிழகத்தில் பொதுமக்களுக்கு இடையூராக இருக்கும் 717 மதுபான விற்பனைக் கடைகளை தமிழக முதல்வர் விஜய் மூட உத்தரவிட்டிருந்தார். மேலும் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் இருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள கடைகளை ஆய்வு செய்து கண்டறியுமாறு முதல்வர் விஜய் உத்தரவிட்டார்.
இந்நிலையில் பொதுமக்கள் நலனைக் கருத்தில்கொண்டு வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் அருகில் என மொத்தம் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை அடுத்த இரண்டு வாரத்துக்குள் மூட தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டு தமிழகத்தில் மது விற்பனையை குறைக்க தீவிரமாக ஈடுபட்டு வரும் சூழலில் தென்னகத்தின் பிரசித்தி பெற்ற அம்மன் தலங்களில் ஒன்றாகிய தேனி மாவட்டம், வீரபாண்டி, கௌமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று மாலை தேர் திருவிழா நடைபெற இருப்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேற்று காலை முதல் ஆய்வு பணியில் ஈடுபட்டார். மேலும் இக்கோவிலை சுற்றி பாதுகாப்பு பணியில் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர், சார்பு ஆய்வாளர் என 200க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் சூழலில் இவர்களது கண்களில் மண்ணைத் தூவி விட்டு இந்த திருக்கோயில் அருகில் 24 மணி நேரமும் கள்ள சந்தையில் மது விற்பனை படு ஜோராக நடைபெற்று வருகிறது.
இந்த தனியார் மதுகடை வழியாக நாள் தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள், பக்தர்கள் தீச்சட்டி எடுத்து கோயிலுக்கு செல்கின்றனர். இந்நிலையில் இந்த தனியார் மதுக்கடையின் முன்பு உள்ள வயல் பகுதியில் கள்ளத்தனமாக விற்கப்படும் மதுவை வாங்கி குடித்து விட்டு சாலையில் அரைகுறை ஆடையுடன் மதுப்பிரியர்கள் உருளுகின்றனர்.
இதை பார்த்து கடந்த செல்லும் பெண் பக்தர்கள் சம்பந்தப்பட்ட மது விற்பனையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வருகின்றனர். கடந்த சில நாட்களாக கோயிலுக்கு வரும் பக்தர்களை குறி வைத்து இச்சாலையில் வழிபறி நடந்து வருதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பீதியுடன் இச்சாலையை கடந்து செல்கின்றனர்.
இச்சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று வீடியோ எடுத்தபோது, கள்ளத் தனமாக மது விற்பனை செய்தவர் வீடியோ பதிவு செய்தவரை பார்த்து விட்டு மதுபாட்டில்கள் வைத்திருந்த சாக்குபையை தூக்கி கொண்டு ஓட்டம் எடுக்க ஆரம்பித்தார். மது விற்பனை செய்தவர் ஓடியதை பார்த்த மதுபிரியர்களும் சேர்ந்து ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வளைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
-முத்துவேல், சிறப்பு நிருபர், தேனி
