பல்லடம் அருகே 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் கவிழ்ந்த விபத்தில், சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மூவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியைச் சேர்ந்த லட்சுமி (70), சில நாட்களுக்கு முன்பு தனது மகன் செல்வகுமாருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், லட்சுமியின் உடல்நிலை முன்னேற்றம் அடையாததால், மேல்சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது. ஆம்புலன்ஸை ஓட்டுநர் ஐயப்பன் இயக்கி வந்தார்.
பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டை அருகே சென்றுகொண்டிருந்தபோது, சாலையை குறுக்கே கடந்த நாய் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் ஆம்புலன்ஸை திடீரென திருப்பியதாக கூறப்படுகிறது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், ஆம்புலன்ஸில் பயணம் செய்த லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர் சுரேகா மற்றும் லட்சுமியின் உறவினர்களான தாமரைச்செல்வி (60), வடிவேல் (47) ஆகியோர் படுகாயமடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தமிழ்நாடு காவல்துறையின் பல்லடம் போலீசார், உயிரிழந்த லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த விபத்து தொடர்பாக பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
