Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

வீட்டு வேலைகளுக்கு ஆட்களை ஏற்பாடு செய்து கொடுக்கும் தனியார் அறக்கட்டளை மூலமாக வீடுகளில் வேலைக்குச் சேர்ந்து கைவரிசை காட்டி வந்த பெண், தனது கணவருடன் கைது செய்யப்பட்டுள்ளார். வேலைக்குச் சேர்ந்த ஒரே மாதத்தில் 15 சவரன் நகைகள் மற்றும் 65 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தைத் திருடியதாகக் கூறப்படும் பெண், கைரேகை மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் சிக்கியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி 63 வயதான பாக்கியபாலா. இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். மூவருக்கும் திருமணமாகி, தங்களது கணவர்களுடன் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். இதனால், பாக்கியபாலா தனது நான்கு பேரக்குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

பேரக்குழந்தைகளை கவனித்துக்கொள்வதற்காகவும், வீட்டு வேலைகளைச் செய்வதற்காகவும், சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு தனியார் அறக்கட்டளை ஒன்றின் மூலம் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்த 47 வயதான முத்துசபியா என்ற கவிதாவை பாக்கியபாலா வீட்டு வேலைக்கு சேர்த்துள்ளார்.

இதையும் படியுங்க  திக்… திக்… ஆபத்து…!! - மீனவர்கள் வலையில் சிக்கிய மர்ம பொருள்… பழவேற்காட்டில் பரபரப்பு…!

இந்த நிலையில், கடந்த மாதம் 28ஆம் தேதி பாக்கியபாலா ஏற்கனவே அடமானம் வைத்திருந்த 15 சவரன் நகைகளை வங்கியில் இருந்து மீட்டு வந்து வீட்டில் உள்ள பீரோவில் வைத்துள்ளார். ஆனால், கடந்த 8ஆம் தேதி பீரோவைத் திறந்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த 15 சவரன் நகைகளும், 65 ஆயிரத்து 500 ரூபாய் பணமும் மாயமாகியிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து பாக்கியபாலா அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து, தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் வீட்டில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, நகைகள் மற்றும் பணம் வைக்கப்பட்டிருந்த பீரோவில் வீட்டு வேலைக்குச் சேர்ந்த முத்துசபியாவின் கைரேகை பதிவாகியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, முத்துசபியாவிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் சந்தேகமடைந்த போலீசார், நகைகள் திருடப்பட்ட வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், கடந்த 6ஆம் தேதி காலை முத்துசபியா ரத்தப் பரிசோதனைக்குச் செல்வதாக வீட்டின் உரிமையாளரிடம் கூறிவிட்டு வெளியே சென்றது பதிவாகியிருந்தது.

இதையும் படியுங்க  AI கொடுத்த ஐடியா… காவல்நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: நெல்லையில் 'ஜென் ஜி' கிட்ஸ் விபரீதம்..!

அவர் ஆட்டோவில் அஞ்சுகிராமத்தில் உள்ள ரத்தப் பரிசோதனை நிலையம் அருகே சென்றிறங்கியதும், அங்கிருந்த உணவகத்தில் சாப்பிட்டதும், பின்னர் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரிடம் ஒரு கைப்பையை கொடுத்ததும் கண்காணிப்பு கேமரா காட்சிகளில் பதிவாகியிருந்தது.

இதையடுத்து, அந்த இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், அந்த வாகனத்தில் வந்தவர் காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஹசன் என்பது தெரியவந்தது. மேலும், ஹசன் முத்துசபியாவின் இரண்டாவது கணவர் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, அஞ்சுகிராமம் போலீசார் காயல்பட்டினத்திற்குச் சென்று ஹசனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, முத்துசபியா தன்னிடம் 15 சவரன் நகைகளையும், 65 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தையும் கொடுத்ததாக ஹசன் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, வீட்டு வேலைக்குச் சேர்ந்த வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடியதாகக் கூறப்படும் முத்துசபியாவையும், திருட்டுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் அவரது கணவர் ஹசனையும் போலீசார் கைது செய்தனர்.

இதையும் படியுங்க  கணவன், மனைவி ரெண்டு பேருக்கும் ‘சரக்கு’ பழக்கம்.. கடைசியில் உயிரையே ‘சரக்காக்கிய’ கொடூரக் கணவன்!

மேலும், இவர்கள் இருவரும் வீடுகளில் வேலைக்குச் சேர்வது போல் நடித்து, ஏற்கனவே பல்வேறு வீடுகளில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இதனிடையே, முத்துசபியாவை வீட்டு வேலைக்கு ஏற்பாடு செய்து கொடுத்த தனியார் அறக்கட்டளையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இந்த திருட்டுச் சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் அறக்கட்டளை மூலம் வீட்டு வேலைக்கு சேர்ந்த பெண், ஒரே மாதத்தில் 15 சவரன் நகைகள் மற்றும் 65 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை திருடியதாகக் கூறப்படும் சம்பவம், கைரேகை மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 day ago at 1 day ago