கோவை கருமத்தம்பட்டி அருகே புதுமண மனைவியை மதுவில் விஷம் கலந்து கொலை செய்து, சடலத்தை நொய்யல் ஆற்றில் வீசிய சம்பவத்தில் கணவர், அவரது தந்தை மற்றும் உறவினர் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காரணம்பேட்டை, பெருமாகவுண்டம் பாளையத்தைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் ஆனந்தகுமார் (27). இவருக்கும் மகேஸ்வரி (29) என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்குப் பிறகு இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக ஆனந்தகுமாரை அவரது தந்தை ஆறுமுகம் வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, கடந்த 22ஆம் தேதி ஆனந்தகுமார் தனது மனைவி மகேஸ்வரியுடன் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே மதப்பூரில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அங்கு இருவரும் மது அருந்தியதால், வீட்டின் உரிமையாளர் அவர்களைக் கண்டித்ததாக கூறப்படுகிறது. பின்னர் புதுமணத் தம்பதியினர் என்பதால் சமாதானப்படுத்திவிட்டு, வீட்டின் உரிமையாளர் தனது குடும்பத்தினருடன் அருகிலுள்ள மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
மறுநாள் மாலை வீடு திரும்பியபோது, மகேஸ்வரி உயிரிழந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஆனந்தகுமாரிடம் கேட்டபோது, மகேஸ்வரி மேலும் மது வாங்கித் தரக் கேட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில், மதுபானத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து கொலை செய்ததாக கூறியுள்ளார்.
இதையடுத்து, ஆனந்தகுமாரின் தந்தை ஆறுமுகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் ஆறுமுகம் மற்றும் அவரது உறவினர் சுப்பிரமணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, மகேஸ்வரியின் சடலத்தை யாருக்கும் தெரியாமல் அப்புறப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி, சடலத்தை வெள்ளை நிற சாக்குப் பையில் கட்டி, இருசக்கர வாகனத்தின் பின்புறத்தில் வைத்து, அதன் மீது மீன்பிடி வலையை போர்த்தி எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் செங்கத்துறை அருகே நொய்யல் ஆற்றில் சடலத்தை வீசியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, மகேஸ்வரி உறவினர் வீட்டிற்கு அழைத்து வரப்படவில்லை என்பது தெரியவந்ததால், வீட்டின் உரிமையாளர் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஆனந்தகுமார் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், சடலத்தை மறைக்க தனது தந்தை ஆறுமுகம் மற்றும் உறவினர் சுப்பிரமணி உதவியதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் நொய்யல் ஆற்றிலிருந்து மகேஸ்வரியின் உடல் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த வழக்கில் ஆனந்தகுமார், ஆறுமுகம் மற்றும் சுப்பிரமணி ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்து, கொலை மற்றும் தடயங்களை அழித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த சம்பவம் கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
