Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

கோவில்பட்டி அருகே கிராமப் பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ள நிலையில், “மேலிடத்தில் இருந்து வரும் உத்தரவின்படியே மின்வெட்டு செய்யப்படுகிறது” என மின்வாரிய பெண் ஊழியர் ஒருவர் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேர மின்வெட்டால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன், பள்ளி மாணவர்களின் கல்வியும் கடுமையாக பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள அந்த ஆடியோவில், தோணுக்கால் பகுதியில் இருந்து பேசுவதாகக் கூறும் பொதுமக்கள், தினமும் இரண்டு மணி நேரம் மின்சாரம் இல்லாததால் குழந்தைகளைப் படிக்க வைக்க முடியாமல் சிரமப்படுவதாகத் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, மாணவர்கள் படிக்கும் நேரமான இரவு 7 மணி முதல் 9 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுவதால், தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதற்கு பதிலளிக்கும் மின்வாரிய பெண் ஊழியர், “மேலிடத்தில் இருந்து வரும் உத்தரவின்படியே நாங்கள் செய்கிறோம்” எனக் கூறுவதாக ஆடியோவில் பதிவாகியுள்ளது. ரூரல் ஃபீடர் தொடர்பாக மேலிடத்தில் இருந்து உத்தரவு வருவதாகவும், அதன்படியே மின்தடை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவிக்கிறார். இதற்கு பொதுமக்கள் தரப்பில், மாணவர்கள் படிக்கும் நேரமான 7 மணி முதல் 9 மணி வரைதான் மின்சாரம் நிறுத்தப்படுவதாகவும், ரூரல் ஃபீடரில் பணியாளர்கள் இல்லையா என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும், மேலிடத்தில் இருந்து உத்தரவு என்றால் குறிப்பிட்ட இந்தக் கிராமத்தில் மட்டும் ஏன் மின்வெட்டு செய்யப்படுகிறது என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதற்கு மின்வாரிய ஊழியர், தாங்கள் இருக்கும் பகுதிகளிலும் இதேபோன்ற மின்வெட்டு நடைபெறுவதாகவும், தாங்களும் பணியில் இருந்துகொண்டே மின்வெட்டால் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கிறார். “நாங்களும் அந்தக் கஷ்டத்தில்தான் இருக்கிறோம். ஆனால் மேலிடத்தில் இருந்து சொல்வதைத் தவிர எங்களால் வேறு எதுவும் செய்ய முடியாது” என அவர் கூறுவதாக ஆடியோவில் பதிவாகியுள்ளது.

இதையும் படியுங்க  18 ஹார்டு டிஸ்க் எங்கே? TNEB திருட்டு வழக்கில் நுழைந்த CB-CID.. அதிரடி திருப்பம்!

தொடர்ந்து, “பிள்ளைகள் எல்லாம் எப்படி படிப்பார்கள் என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள்; உங்கள் பிள்ளைகளும் படிக்கத்தானே செய்கிறார்கள்” என பொதுமக்கள் வேதனையுடன் கேள்வி எழுப்புகின்றனர். இதற்கு மின்வாரிய ஊழியர் தரப்பில், தங்களுக்கும் அதே சிரமம் இருப்பதாகவும், ஆனால் தாங்கள் பணியில் இருப்பதால் எதுவும் கூற முடியவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. பின்னர் இருதரப்பினரும் உரையாடலை முடித்துக்கொள்கின்றனர். இந்த ஆடியோவின் உண்மைத் தன்மை குறித்து மின்வாரியம் சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை.

இதனிடையே, கோவில்பட்டி அருகே உள்ள ஐயனேரி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், கடந்த ஒரு மாதமாக தங்கள் பகுதியில் மின்சாரம் முறையாக வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர். தினமும் இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை மின்சாரம் தடைபடுவதாகவும், சில நேரங்களில் ஒரு மணி நேரம் எனத் தொடர்ந்து மின்தடை ஏற்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இதனால் சிறு குழந்தைகள் முதல் பள்ளி மாணவர்கள் வரை பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இரவு நேரங்களில் மின்சாரம் இல்லாததால் குழந்தைகள் படிக்கவும் தூங்கவும் முடியாமல் அவதிப்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். குறிப்பாக டியூஷன் செல்லும் மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதாகவும், பத்து முதல் பன்னிரண்டு மாணவர்கள் வரை டியூஷனுக்கு வந்தாலும் மின்சாரம் இல்லாததால் அவர்களுக்கு முறையாகப் பாடம் கற்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

மின்சாரம் இருந்தால்தான் மாணவர்களுக்கு தேவையான அளவில் பாடங்களைச் சொல்லிக் கொடுக்க முடியும் என்றும், தற்போது மெழுகுவர்த்தி ஏற்றி மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதையும் படியுங்க  தமிழகம் முழுவதும் இன்று 5 முதல் 8 மணி நேரம் வரை மின்தடை.! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!

மின்சாரம் இல்லாததால் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்புபவர்கள் வீட்டில் உணவு சமைப்பதற்கும் சிரமப்படுவதாகக் கூறுகின்றனர். கடந்த ஒரு மாதமாக மின்சார வசதி முறையாக இல்லாததால், குழந்தைகள் படிப்பதற்காக வீட்டிற்கு வெளியே அமர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

அவ்வாறு வெளியே அமர்ந்து படிக்கும்போது கொசுத் தொல்லை அதிகமாக இருப்பதுடன், பல்வேறு பூச்சிகள் மற்றும் விஷ வண்டுகள் கடிக்கும் அபாயமும் இருப்பதாக அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். பூச்சிகள் கடித்தால் குழந்தைகளுக்கு உடனடியாக தடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாகவும், இதனால் குழந்தைகள் மிகவும் பயப்படுவதாகவும் கூறுகின்றனர்.

கோவில்பட்டி அருகே உள்ள ஐயனேரி, தோணுக்கால், ஆவளம்பட்டி, கொப்பம்பட்டி, விஜயாபுரி, பிள்ளையார்நத்தம், படந்தபொழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நாள்தோறும் இரவு நேரங்களில் சுமார் இரண்டு மணி நேரம் மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனால் செல்போன் வெளிச்சத்தில் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, பள்ளி மாணவர்கள் படிக்கும் நேரத்தில் மின்வெட்டு ஏற்படுவதால் அவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் கூறுகின்றனர்.

அரையாண்டு, காலாண்டு உள்ளிட்ட தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில், மாணவர்கள் படிக்க வேண்டிய முக்கிய நேரமான இரவு 7 மணி முதல் 9 மணி வரை மின்வெட்டு ஏற்படுவது அவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மின்வாரிய ஊழியர்களிடம் கேட்டால், “ரோடு செட்டிங்” உள்ளிட்ட காரணங்களை மட்டுமே கூறுவதாகவும், மேலிடத்தில் இருந்து வரும் உத்தரவின்படியே மின்வெட்டு செய்யப்படுவதாகத் தெரிவிப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், அந்த மேலிடம் யார் என்பது குறித்து தெளிவான தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இதையும் படியுங்க  சனிக்கிழமை அதுவுமா… சென்னையில் முக்கிய இடங்களில் 5 மணிநேரம் மின்தடை!

மின்வெட்டு குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டால், பிரச்சினையை சரிசெய்து வருவதாக மட்டுமே கூறுவதாகவும், ஆனால் மின்வெட்டு தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால், இந்த விவகாரத்தில் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, இரவு நேரங்களில் கிராமப்புறங்களில் ஏற்படும் மின்வெட்டைத் தடுத்து நிறுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மின்வெட்டால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை, சமையல் பணிகள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு பாதிக்கப்படுவதால், அதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், தமிழக அரசு புதிதாகப் பதவியேற்றுள்ள நிலையில், “மாற்றம் தரும் மாற்றங்கள் வரும்” என தெரிவிக்கப்பட்டிருந்தாலும், தங்களது பகுதிகளில் இதுவரை எந்த மாற்றமும் ஏற்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே, கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நிலவும் தொடர் மின்வெட்டு பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும், குறிப்பாக மாணவர்கள் படிக்கும் நேரத்தில் தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், மின்வாரிய ஊழியர் பேசும் ஆடியோவில் இடம்பெற்றுள்ள “மேலிட உத்தரவு” என்ற தகவலின் உண்மைத் தன்மை என்ன, எந்த அதிகாரியின் உத்தரவின் அடிப்படையில் இரவு நேரங்களில் மின்வெட்டு மேற்கொள்ளப்படுகிறது என்பது குறித்து மின்வாரியம் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையும், மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படாத வகையில் மின்வெட்டு பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்பட்டு, மின்வெட்டு இல்லாத தமிழகத்தை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 day ago at 1 day ago