Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

சென்னையில் தமிழக வெற்றி கழக நிர்வாகி கண்ணன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை தீவிரமடைந்துள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், தனிப்படை போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னை பெசன்ட் நகர், வண்ணாந்துறை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். 46 வயதான இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததுடன், தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகியாகவும் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், அடையாறு – திருவான்மியூர் சாலையில் அடையாளம் தெரியாத கும்பலால் கண்ணன் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலை தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், வேலுவின் மகன் பரணி, கார்த்திக், ஹரிகரன், மணி, நரேஷ் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

2009-ஆம் ஆண்டு கொலைக்கு பழிக்குப் பழியா?

கண்ணன் கொலைக்கான முக்கிய காரணம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, கடந்த 2009-ஆம் ஆண்டு அடையாறில் நடைபெற்ற ரவுடி சிவா கொலை வழக்கில் கண்ணனுக்கு தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்தக் கொலைக்கு பழிக்குப் பழியாகவே தற்போதைய கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதையும் படியுங்க  "எங்கே உள்ளாட்சி தேர்தலில் ஜெயிச்சுப்பாருங்க..? விஜய்க்கு செக்.. தவெக-வை திணறடிக்கும் பெண் ஐஏஎஸ்..!

முதற்கட்ட விசாரணையில், 2009-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட ரவுடி சிவாவின் நெருங்கிய உறவினரான அவரது சகோதரரின் மகன் தலைமையிலான கும்பல், பல ஆண்டுகளுக்குப் பிறகு கண்ணனை பழிக்குப் பழியாக கொலை செய்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சாலையில் அமர்ந்து போராட்டம்

கண்ணன் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யக் கோரி சாலையில் அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ரியல் எஸ்டேட் தொழில் போட்டியும் காரணமா?

பழிக்குப் பழி என்ற கோணத்தைத் தவிர, கண்ணன் செய்து வந்த ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட போட்டி அல்லது ஏதேனும் தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடைபெற்றதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கண்ணன் மீது ஏற்கனவே கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட சில குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்ததாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் அடையாறு காவல் நிலையத்தின் ‘பி’ பிரிவு ரவுடிகள் பட்டியலில் இடம்பெற்றிருந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி (History-sheeter) என்றும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  சரமாரி கேள்விகளால் துளைக்கப் போகும் போலீஸ்: 3 நாட்கள் காவலில் சிறுமி கொலை குற்றவாளிகள்!

அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த கண்ணன்

கண்ணன் முன்பு அதிமுகவில் 174-வது தெற்கு வட்டக் கழகச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்ததாகக் கூறப்படுகிறது. சமீபத்தில்தான் அவர் அதிமுகவில் இருந்து விலகி, தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்.

தன் மீது இருந்த வழக்குகள் மற்றும் எதிரிகளின் அச்சுறுத்தலிலிருந்து தப்பிக்கவும், தனது தொழிலைப் பாதுகாத்துக் கொள்ளவும் அவர் கட்சி மாறியதாகவும் அப்பகுதியில் ஒரு தகவல் பேசப்பட்டு வருகிறது. எனினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

சிசிடிவி காட்சிகள் மூலம் சிக்கிய 5 பேர்

கண்ணன் கொலை வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதையடுத்து போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், பரணி, கார்த்திக், ஹரிகரன், மணி, நரேஷ் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Republic Tamil

தலைமறைவாக இருந்த குற்றவாளிகளைப் பிடிக்க சாஸ்திரி நகர் போலீசாரும் தனிப்படை போலீசாரும் தீவிரமாகத் தேடி வந்தனர். தப்பியோட முயன்ற முக்கியக் குற்றவாளிகளை போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்து கைது செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படியுங்க   மகளிருக்கு ஜாக்பாட்... இனி அனைத்து பேருந்துகளிலும் இலவச பயணம்... எப்போது தெரியுமா?

இதனிடையே, வண்ணாந்துறை பகுதியில் கண்ணன் நடந்து சென்றபோது, ஆயுதங்களுடன் மறைந்திருந்த கும்பல் அவரை வழிமறித்து, தெருவில் ஓட ஓட விரட்டி வெட்டும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்தக் காட்சிகள் மற்றும் கிடைத்துள்ள பிற ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர். இந்தக் கொலையில் மேலும் சிலருக்குத் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அவர்களையும் கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கண்ணன் கொலைக்கான முழுமையான காரணம், இதில் தொடர்புடைய அனைவரின் பங்கு உள்ளிட்டவை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 days ago at 6 days ago