Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

சென்னையின் பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் நடைபாதை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பசுமைத் தாயகம் அமைப்பினர் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் அப்பகுதியை நேரில் பார்வையிட்டனர்.

பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியில் ஏற்கனவே துர்நாற்றம் மற்றும் கொசுத் தொல்லை அதிகமாக இருப்பதாகவும், இப்பகுதியை முறையாகத் தூய்மைப்படுத்தி பராமரித்திருந்தாலே பொதுமக்கள் பாதுகாப்பாகவும், சுகாதாரமான சூழலிலும் வாழ முடியும்.

இந்த நிலையில், சுமார் ரூ.21 கோடி செலவில் நடைபாதை அமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டு, கான்கிரீட் மற்றும் கிரானைட் பயன்படுத்தி கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவது தேவையற்ற திட்டம் எனவும் குற்றம்சாட்டினர்.

பள்ளிக்கரணை பகுதியில் வசிக்கும் குடியிருப்போர் பல மாதங்களாக தண்ணீர் தேங்கி இருப்பதாகத் தொடர்ந்து புகார் தெரிவித்து வருவதாகவும், எட்டு மாதங்களாக தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் கேட்டுக்கொள்வது வெள்ளநீர் மற்றும் மழைநீர் தடையின்றி வெளியேறுவதற்கான வழிவகை மட்டுமே என்றும் தெரிவித்தனர்.

ஆனால், அதற்குப் பதிலாக நடைபாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், மிகப்பெரிய பரப்பளவில் இருந்து இயற்கையாக வெளியேறும் தண்ணீரை, வட்ட வடிவில் அமைக்கப்படும் சிறிய குழாய்கள் மூலம் வெளியேற்றுவது நடைமுறையில் சிரமத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தனர்.

சதுப்புநிலத்தின் இயற்கையான நீரோட்டத்தை மாற்றி, நடைபாதை அமைப்பது தவறான அணுகுமுறை என்றும் பசுமைத் தாயகம் அமைப்பினர் தெரிவித்தனர்.

பள்ளிக்கரணை பகுதி ராம்சார் தளமாகவும், ஈரநிலப் பகுதியாகவும் பாதுகாக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்றும், இத்தகைய பகுதிகளில் கான்கிரீட் கட்டமைப்புகள் அமைப்பது சுற்றுச்சூழலுக்கு எதிரானது .

இதையும் படியுங்க  "பழனி முருகன் கோயில் போறீங்களா?!  45 நாட்கள் தடை.. ஆனா பக்தர்களுக்கு ஒரு செம குட் நியூஸ்!

Republic Tamil

ஈரநிலப் பகுதிகளில் பெரிய அளவிலான கான்கிரீட் கட்டமைப்புகளை அமைக்கக் கூடாது என்றும், தேவையான இடங்களில் வேலி போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்றும் சட்ட விதிமுறைகள் உள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

“வலது கையால் எழுதுபவரை இடது கையால் எழுதச் சொன்னால் எவ்வளவு சிரமம் ஏற்படுமோ, அதுபோல சதுப்புநிலத்தின் இயற்கையான தன்மையை மாற்றி, அங்கு நடைபாதை அமைப்பது தவறான முன்னுதாரணமாகும்” என தெரிவித்தனர்.

மேலும், ரூ.21 கோடி கடன் பெற்று சதுப்புநிலத்தின் இயற்கைத் தன்மையைப் பாதிக்கும் வகையில் நடைபாதை அமைப்பது மிகவும் தவறான முன்னுதாரணம் என்றும், இதற்கு எதிராகவே பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் இன்றைய ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

பள்ளிக்கரணை பகுதியை ராம்சார் தளமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என ஏற்கனவே சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ள நிலையில், பள்ளிக்கரணை பகுதியை ராம்சார் தளமாக அறிவித்து, முறையாக வரைபடம் தயாரித்து அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டால், அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுமானப் பணிகளை அகற்றும் நிலை ஏற்படலாம் என்றும் கூறினர்.

கடந்த காலங்களிலும் சுற்றுச்சூழலுக்கு விரோதமான வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினர்.

இதையும் படியுங்க  கணவன் மரணத்தால் தாய்... அம்மா மரணத்தால் மகன்... துயரம் தாங்காமல் அடுத்தடுத்து விபரீதம்..!

இந்த விவகாரம் சட்டமன்றத்தில் முறையிடப்பட்டால் மட்டும் தீர்வு கிடைக்குமா அல்லது அடுத்தகட்டமாக நீதிமன்றத்தை அணுக வேண்டிய நிலை ஏற்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்கள், இதுவரை இந்தப் பகுதியை நேரில் வந்து ஆய்வு செய்தவர்கள் குறைவாக இருந்த நிலையில், தற்போது தாங்கள் நேரில் பார்வையிட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், நடைபாதை அமைக்கும் திட்டம் தேவையற்ற திட்டம் என்பதையும் இன்று தெளிவாகத் தெரிவித்துள்ளதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பசுமைத் தாயகம் அமைப்பு ஆலோசித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் கூறினர்.

இதுபோன்ற திட்டங்கள் பொதுமக்களின் பணத்தை தவறாகப் பயன்படுத்துவதற்காக கொண்டு வரப்படுகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்கள், அதுபற்றி உறுதியாகக் கூற முடியாது என்றும், ஆனால் பொதுமக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளில் உள்ள உண்மைத்தன்மையை ஆராய வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தனர்.

மேலும், சம்பந்தப்பட்ட துறையினர் இந்தத் திட்டம் மக்களுக்காகவே மேற்கொள்ளப்படுவதாகவும், தேங்கியுள்ள தண்ணீரை கடலுக்கு கொண்டு செல்வதற்காக வட்ட வடிவில் சிறிய குழாய்கள் அமைக்கப்படுவதாகவும் கருதினால், அந்த அணுகுமுறை தவறானது என்பதை அவர்களுக்கு எடுத்துரைப்போம் என்றும் தெரிவித்தனர்.

பள்ளிக்கரணை சதுப்புநிலம் தென்சென்னையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மிக முக்கியமான ஒன்றாகும். தென்சென்னை பகுதியில் மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டால், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதுடன், சாலையோர கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட சிறு தொழில்களை நம்பி வாழும் மக்களின் வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்படும் .

இதையும் படியுங்க  "முருகா… உன்னைப் பார்க்கவும் காசு வேண்டுமா?" – திருச்செந்தூரில் பக்தர்களின் நெஞ்சை உலுக்கும் குமுறல்!

ஏற்கனவே பல மாதங்களாக தண்ணீர் தேங்கி இருப்பதால், அப்பகுதி மக்களின் சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

“ஒரு பாத்திரத்தில் பத்து நாட்கள் தண்ணீர் தேங்கி இருந்தாலே அதில் கொசுக்கள் மற்றும் பாக்டீரியாக்கள் உருவாகும். ஆனால், பள்ளிக்கரணையில் பல மாதங்களாக தண்ணீர் தேங்கி இருப்பதால், அங்கு வசிக்கும் மக்களின் உடல்நிலையில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது அவர்களுக்கே தெரியாமல் இருக்கலாம். குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதும், சிகிச்சைக்காக அலைவதும் அவர்களின் அன்றாட வாழ்க்கையாக மாறிவிடக்கூடாது” என தெரிவித்தனர்.

எனவே, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பாதுகாப்பது இன்றியமையாதது என்றும், பொதுமக்களும் அரசும் ஒன்றிணைந்து இப்பகுதியைக் காக்க முன்வர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். மேலும், சென்னையைச் சூழலியல் பாதுகாப்பு மிகுந்த நகரமாக (Eco-City) அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து வலுப்பெற்று வருவதாக குறிப்பிட்டனர்.”

இயற்கை வளமும், நீண்டகால பாரம்பரியமும் கொண்ட சென்னையைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் அவசியம் என்றும், அதற்கான முயற்சிகளில் பொதுமக்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

பள்ளிக்கரணை சதுப்புநிலத்தைப் பாதுகாப்பதன் மூலம் மட்டுமே தென்சென்னையை எதிர்கால வெள்ள அபாயங்களில் இருந்து பாதுகாக்க முடியும் என்றும், சதுப்புநிலத்தின் இயற்கையான தன்மையைப் பாதுகாப்பதே அதற்கான முக்கியமான தீர்வு என்றும் பசுமைத் தாயகம் அமைப்பினர் தெரிவித்தனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 days ago at 4 days ago