Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

குவைத்தில் வீட்டு வேலைக்குச் சென்று சித்திரவதைக்கு ஆளாகி, உதவி கோரி கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட கள்ளக்குறிச்சி பெண் வனிதா, இந்திய தூதரக அதிகாரிகளால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். தற்போது அவர் குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் பாதுகாப்பில் தங்கவைக்கப்பட்டுள்ளார். அவரை விரைவில் தாயகத்திற்கு அழைத்து வருவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ஊராங்கணி கிராமத்தைச் சேர்ந்தவர் வனிதா. குடும்பத்தின் கடுமையான வறுமை காரணமாக, தனது மகன் மற்றும் மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு வீட்டு வேலைக்காக குவைத்துக்குச் சென்றுள்ளார்.

அங்கு சென்ற சில நாட்களிலேயே வனிதாவுக்கு கடுமையான சிரமங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. போதிய உணவு வழங்கப்படாமல் 50 நாட்களுக்கும் மேலாக அவதிப்பட்டதாகவும், தொடர்ந்து சித்திரவதை செய்யப்பட்டதாகவும், கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தன்னை எப்படியாவது காப்பாற்றுமாறு கோரி, செப்டம்பர் 2ஆம் தேதி வனிதா சமூக வலைதளத்தில் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதையும் படியுங்க  வழுக்கி விழுந்ததாக நாடகம்.. பிரேத பரிசோதனையில் சிக்கிய மனைவி: சாத்தூர் கத்திக்குத்து கொலையின் பின்னணி..!

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதுடன், தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு செய்தி ஊடகங்களிலும் வெளியானது. இதையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஜெ.இ. பத்மஜா மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஷாநாஸ் ஆகியோர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டனர். காவல்துறையினர் வனிதாவின் குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு புகாரைப் பெற்றனர்.

வனிதாவை குவைத்திற்கு அனுப்பிய வேலைவாய்ப்பு முகவர், அங்கு நல்ல வேலை கிடைக்கும் எனக் கூறி தங்களது குடும்பத்தினரை ஏமாற்றியதாக வனிதாவின் தாயார் வெண்ணிலா குற்றம்சாட்டியுள்ளார். இதையடுத்து, வனிதாவின் நிலை குறித்த தகவல்கள் வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் குவைத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டன.

இந்தத் தகவலைத் தொடர்ந்து இந்திய தூதரக அதிகாரிகள் வனிதா தங்கியிருந்த இடத்தைக் கண்டறிந்து, அவரை பத்திரமாக மீட்டுள்ளனர். தற்போது அவர் இந்திய தூதரகத்தின் பாதுகாப்பில் உள்ள காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீட்கப்பட்ட பின்னர் வனிதா நிம்மதியான தோற்றத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்திய தூதரகத்திற்கு நன்றி தெரிவித்த அவர், தற்போது தனக்கு நல்ல உணவும், உடையும் கிடைப்பதாகவும், பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க  கத்தார் எரிவாயு ஆலை விபத்து: சொந்த மண்ணில் அடக்கம் செய்யப்பட்ட நெல்லை இளைஞர்களின் உடல்கள்!

“நான்தான் வீடியோ போட்டிருந்தேன். உதவி கேட்டிருந்தேன். உடனடியாக நடவடிக்கை எடுத்து என்னை நல்லபடியாக மீட்டு இந்திய தூதரகத்திற்கு அழைத்து வந்துவிட்டார்கள். இப்போது நான் பாதுகாப்பாக இருக்கிறேன். எனக்கு நல்ல சாப்பாடு, நல்ல டிரஸ் கொடுத்து பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்திய தூதரகத்திற்கு நன்றி” என வனிதா தெரிவித்துள்ளார்.

வனிதாவை விரைவில் விமானம் மூலம் தாயகத்திற்கு அழைத்து வருவதற்குத் தேவையான சட்டப்பூர்வ ஆவணங்களை இந்திய தூதரக அதிகாரிகள் தயார் செய்து வருகின்றனர். இதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, வனிதா பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதால், அவர் வெளியிட்ட பழைய உதவி கோரும் வீடியோவை தொடர்ந்து பகிர வேண்டாம் எனவும் சமூக வலைதளப் பயனர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

குவைத்தில் சிக்கித் தவித்த தமிழகப் பெண்ணின் அவலநிலையை அறிந்து, விரைந்து நடவடிக்கை எடுத்து அவரை பாதுகாப்பாக மீட்ட இந்திய தூதரக அதிகாரிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago