Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

நடிகர் சீயான் விக்ரம், அரிய வகை குரங்குடன் இருக்கும் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த வீடியோவின் பின்னணியில் சர்வதேச அளவிலான அரிய வகை விலங்குகள் தொடர்பான முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இதையடுத்து, வெளிநாட்டு விலங்குகள் மற்றும் பறவைகளை வளர்ப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பாக வனத்துறையினர் மீண்டும் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.

நடிகர் விக்ரம் தனது வீட்டில் அரிய வகை குரங்கு ஒன்றை கையில் வைத்து கொஞ்சி விளையாடுவது போன்ற வீடியோ சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்படி, குறிப்பிட்ட சில அரிய வகை வனவிலங்குகளை வீட்டில் வளர்ப்பதும் வைத்திருப்பதும் சட்டவிரோதமாகும். இந்த வீடியோ தொடர்பாக நடிகர் விக்ரமிடம் விசாரணை நடத்துவது மற்றும் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக வனத்துறையினர் நீதிமன்ற அனுமதிக்காக காத்திருந்தனர்.

ஆனால், விசாரணையின் முடிவில் இந்த விவகாரத்தில் நடிகர் விக்ரமுக்கு நேரடித் தொடர்பு இல்லை என வனத்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாகத் தெளிவுபடுத்தியுள்ளனர். அவர் அந்த விலங்கை விலைக்கு வாங்கவோ, விற்கவோ அல்லது வளர்க்கவோ இல்லை என்றும், ஒரு உறவினர் வீட்டிற்குச் சென்றபோது அங்கு இருந்த குரங்குடன் விளையாடி வீடியோ மட்டும் எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விக்ரம் வனத்துறைக்கு எழுத்துப்பூர்வமான விளக்கமும் அளித்துள்ளார்.

இதையும் படியுங்க  விவசாயிகளுக்கு இலவசம் - முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!”

விக்ரம் வெளியிட்ட வீடியோவில் இருந்தது சாதாரண குரங்கு அல்ல என்றும், தென்கிழக்கு ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட அழியும் நிலையில் உள்ள லார் கிப்பன் என்ற அரிய வகை மனிதக்குரங்கு என்றும் தெரியவந்தது. சர்வதேச வனவிலங்கு பாதுகாப்பு விதிகளான CITES மற்றும் இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972-ன் கீழ் லார் கிப்பன் பாதுகாக்கப்பட்ட உயிரினமாகும்.

Republic Tamil

விக்ரமின் இந்த ஒரு வீடியோ, சுமார் 2 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படும் ஒரு பெரிய வலையமைப்பை வனத்துறையினரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. விசாரணையில், இந்த லார் கிப்பன் குரங்குகள் முதலில் மலேசியாவில் இருந்து கொண்டுவரப்பட்டதும், பின்னர் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரைச் சேர்ந்த ஒருவரால் மத்திய அரசின் PARIVESH இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.

அங்கிருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த விலங்கு வளர்ப்பாளர் எஸ்.கே. கேசவநாதனுக்கு குரங்குகள் மாற்றப்பட்டு, இறுதியாக சென்னைக்கு கொண்டு வரப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், மணிப்பூரிலிருந்து ஈரோட்டிற்கு மொத்தம் 3 லார் கிப்பன் குரங்குகள் கொண்டு வரப்பட்டதாகவும், அவற்றில் ஒரு குரங்கு உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த உயிரிழப்பு குறித்து உரிமையாளர் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் மறைத்ததே சட்டரீதியாக பெரும் சிக்கலாக மாறியுள்ளது.

இதையும் படியுங்க  “மக்கள் கடும் எச்சரிக்கை! TVK-வில் இணைந்த முன்னாள் MLA-க்கு எதிராக போஸ்டர் போர் வெடிப்பு!”

விக்ரமின் வீடியோவைத் தொடர்ந்து, ஈரோட்டில் உள்ள சம்பந்தப்பட்ட பண்ணை வீட்டில் வனத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறப்படும் 11 அரிய வகை வெளிநாட்டு விலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் 2 லார் கிப்பன் குரங்குகள், 7 ஆப்பிரிக்க செர்வல் பூனைகள் மற்றும் 2 டஃப்டெட் கேபுசின் குரங்குகள் அடங்கும். பறிமுதல் செய்யப்பட்ட இந்த விலங்குகளை சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றுவதற்கு நீதிமன்ற அனுமதி கோரப்பட்டுள்ளது.

இதனிடையே, வெளிநாட்டு பறவைகள் மற்றும் விலங்குகளை வைத்திருப்பவர்கள் மத்திய அரசின் PARIVESH இணையதளத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் தொடர்பான அனுமதிகளைப் பெற, மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்திடம் உரிய அனுமதி பெற வேண்டிய அவசியமும் உள்ளது.

வெளிநாட்டு பறவைகள் மற்றும் விலங்குகளை வைத்திருப்பவர்கள், அவற்றின் விவரங்களை PARIVESH இணையதளத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்றும், விதிகளை மீறுபவர்களிடம் இருந்து விலங்குகள் பறிமுதல் செய்யப்படுவதுடன் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் வனத்துறை எச்சரித்துள்ளது.

மேலும், வீடுகளில் நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகள் மற்றும் பிற விலங்குகளை வளர்ப்பவர்களும் உரிய விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வளர்க்கப்படும் விலங்குகள் மற்றும் பறவைகளை உள்ளாட்சி அமைப்புகளிடமோ அல்லது தேவையான இடங்களில் வனத்துறையிடமோ முறையாகப் பதிவு செய்ய வேண்டும்.

இதையும் படியுங்க  100-க்கு 101 மார்க்.. திகைத்துப் போன கல்வித்துறை! கடைசியில் அம்பலமான அதிர்ச்சி உண்மை!

குறிப்பிட்ட அனுமதியின்றி அரிய வகை பறவைகள், வெளிநாட்டு விலங்குகள் அல்லது இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட உயிரினங்களை வீட்டில் வளர்க்கக் கூடாது.

குறிப்பாக, நாய்களை வளர்ப்பவர்கள் ஆண்டுதோறும் உள்ளாட்சி அமைப்புகளில் உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டும் என்றும், அவற்றுக்கு முறையாக தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதிகளை மீறி விலங்குகளை முறையற்ற வகையில் அடைத்து வைத்தாலோ அல்லது துன்புறுத்தினாலோ அபராதம் மற்றும் சிறைத்தண்டனை உள்ளிட்ட கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால், தமிழகத்தில் செல்லப்பிராணிகள் மற்றும் வெளிநாட்டு விலங்குகளை வளர்த்து வரும் பலரும் தங்களது உரிமம் மற்றும் பதிவுகளை முறைப்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரிய வகை குரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ வெளியிட்ட விவகாரம் சர்ச்சையான நிலையில், அந்த வீடியோவின் தொடர்ச்சியாக வெளிநாட்டு விலங்குகள் தொடர்பான விதிமுறைகளை கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என வனத்துறை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 hours ago at 3 hours ago