Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

ரூபாய் 8,000 கோடி நிதி மோசடி வழக்கில் தொடர்புடையவரும், ஜாமீனில் வெளியே இருந்த நியோமேக்ஸ் குழும நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ கார்ப்பரேட் இயக்குனருமான மைகேல் தாஸ் சார்லஸ் கடத்தப்பட்ட சம்பவத்தில், 4 பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்து, அவரை பத்திரமாக மீட்டுள்ளனர்.

முதலீட்டாளர்களுக்குப் பணத்தை திருப்பிச் செலுத்தும் செட்டில்மெண்ட் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், சார்லஸை கடத்திச் சென்று ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரை கேட்டு மிரட்டியதாக, நியோமேக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் மேலாளர் தினேஷ் பாண்டியன் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் அரசியல் பின்னணி அல்லது முக்கிய நபர்களின் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஜூன் 27ஆம் தேதி, சார்லஸ் தனது ஓட்டுநருடன் சென்னை நாவலூரில் உள்ள தனியார் மாலுக்குச் சென்றிருந்தார். அப்போது ஓட்டுநர் அருகிலுள்ள கடைக்குச் சென்றிருந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம கும்பல், சார்லஸை அவரது சொகுசு காருடன் கடத்திச் சென்று தப்பியது.

இதையும் படியுங்க  "கோழி எடையில் அரங்கேறும் ரகசியம்!  ஜூலை 31 முதல் 60,000 சிக்கன் கடைகள் அதிரடி மூடல்!

ஓட்டுநர் அளித்த புகாரின் அடிப்படையில், தாம்பரம் தனிப்படை போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில், மதுரையில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சார்லஸை போலீசார் பத்திரமாக மீட்டனர்.

விசாரணையில், கடத்தல் கும்பல் சார்லஸை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு காரிலேயே அழைத்துச் சென்று, அவரது செல்போனைப் பறித்து, மூன்று நாட்கள் தொடர்ந்து மிரட்டியதும் தெரியவந்துள்ளது.

மேலும், சில முக்கிய சொத்து ஆவணங்கள் மற்றும் வெற்றுப் பத்திரங்களில் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியதோடு, நியோமேக்ஸ் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் முதலீடு செய்த முக்கிய முதலீட்டாளர்களின் ரகசியப் பட்டியலையும் பறித்துள்ளனர்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் நிறுவனத்தின் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டு, முதலீட்டாளர்களுக்குப் பணம் ஆன்லைன் மூலம் வழங்கப்படவுள்ள நிலையில், அந்தப் பணத்தை சட்டவிரோதமாக தங்களது வங்கிக் கணக்குகளுக்கு மாற்றும் நோக்கத்திலேயே இந்த ஆவணங்களும், முதலீட்டாளர்களின் பட்டியலும் பறிக்கப்பட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், இதே முன்னாள் மேலாளர் தினேஷ் பாண்டியன், கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பும் சார்லஸைக் கடத்தி ரூ.1.40 கோடி பறித்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்போது சார்லஸ் போலீசில் புகார் அளிக்காததால், மீண்டும் அவரைக் கடத்தி பணம் பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  6 மாதங்களாக பக்கா ஸ்கெட்ச்… அதிர வைக்கும் வீரமுத்துகிருஷ்ணனின் கொலை பின்னணி?

இந்த வழக்கு தொடர்பாக மதுரை பொருளாதார குற்றப்பிரிவு (EOW) போலீசாருடன் இணைந்து அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே நியோமேக்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான சுமார் ரூ.121.80 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

அதேநேரத்தில், நியோமேக்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான சுமார் ரூ.7,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை ஏலம் விற்று, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்குப் பணத்தை திருப்பி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் செட்டில்மெண்ட் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.

மைகேல் தாஸ் சார்லஸ், நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.8,000 கோடி நிதி மோசடி வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர்களில் ஒருவர். முதலீட்டாளர்களை ஏமாற்றிய குற்றச்சாட்டின் பேரில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவர்மீது வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், பின்னர் அவர் நீதிமன்றத்தின் மூலம் ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.

இந்த நிலையில், முன்னாள் மேலாளரே பணம் மற்றும் சொத்து ஆவணங்களை மிரட்டிப் பறிக்கும் நோக்கில் சார்லஸைக் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்க  "மரணக் குழி தோண்டிய மணல் மாஃபியா: தட்டிக்கேட்ட விவசாயியை உயிருடன் புதைக்க ஜேசிபி-யால் தாக்கிய கொடூரம்!"
Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 months ago at 4 months ago