Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பேசிய, “5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூர் அந்த ஆட்டம் ஆடியது…” என்ற பஞ்ச் வசனம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

சட்டமன்றத்தில் மாநிலத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்குப் பதிலாக, சினிமா பாணியிலான வசனங்கள் மற்றும் அரசியல் நையாண்டிகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகளும், சமூக வலைதள பயனர்களும் விமர்சித்து வருகின்றனர்.

சட்டமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சியினரின் தொடர் முழக்கங்களுக்கு பதிலளிக்கும் வகையில், “நான் 5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூர் அந்த ஆட்டம் ஆடியது. பேசு, பேசு என்றால் அப்புறம் நான் என்ன செய்வது?” என்று தனது பாணியில் பேசியிருந்தார்.

இந்தப் பேச்சு ஆளுங்கட்சி உறுப்பினர்களிடையே வரவேற்பைப் பெற்றாலும், சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரிடமிருந்து கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது.

முதல்வரின் இந்தப் பேச்சுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், “5 நிமிடம் பேசினதற்கே பெருமை பேசுவதை விட, மாநிலத்தின் முக்கிய பிரச்சினைகளான மின்வெட்டு, விவசாயிகளின் கோரிக்கைகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து குறைந்தபட்சம் 5 நிமிடமாவது பேச வேண்டும்” என்று விமர்சித்துள்ளனர்.

இதையும் படியுங்க  அதிமுக தலைமைக்கு வருகிறாரா அண்ணாமலை? – தீயாய் பரவிய வதந்திக்கு எரிமலையாய் வந்த பதில்..!

மேலும், “சட்டமன்றம் என்பது மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் இடம். அதை சினிமா படப்பிடிப்பு தளமாகவோ அல்லது சமூக வலைதள ரீல்ஸ் மேடையாகவோ மாற்றக்கூடாது” என சமூக வலைதள பயனர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து பேசாமல், அரசியல் நக்கல் மற்றும் நையாண்டிகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. “ரீல்ஸை விட்டுவிட்டு ரியாலிட்டிக்கு வாருங்கள்” என்ற வாசகமும் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் முதல்வர் விஜய்யின் பேச்சு குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

முதல்வர் விஜய்யின் உரை, சட்டமன்ற உரையை விட திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழா அல்லது டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் விசில் அடித்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய அவர், “சட்டமன்றத்தையே சினிமா தியேட்டராக மாற்றிவிட்டார்கள். இதே நிலை தொடர்ந்தால், உள்ளே பாடலுக்கு நடனமாடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை” என்று விமர்சித்தார்.

இதையும் படியுங்க  "பொருட்காட்சி திடலில் பயங்கர அடிதடி: தூத்துக்குடியில் அம்பலமான தவெக கோஷ்டி பூசல் !"

அத்துடன், முதலமைச்சரின் நீண்ட உரை முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட திரைப்பட திரைக்கதையைப் போல இருந்ததாகவும், “ஷூட்டிங் நடைபெறும் போது யாரும் ‘கட்’ சொல்லக்கூடாது என்பதுபோல், தயாரித்து கொண்டு வந்த உரையை முழுமையாக வாசித்துவிட்டு சென்றார்; யாருடைய கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை” என்றும் குற்றம் சாட்டினார்.

சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் நோக்கத்திலேயே இந்தப் பேச்சுகள் அமைந்துள்ளதாகவும், தேர்தல் பிரச்சாரத்தின் போது அளிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளான வேலையில்லா இளைஞர்களுக்கான ₹500 உதவித்தொகை, மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகை மற்றும் ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள் போன்ற திட்டங்கள் குறித்து ஏன் பேசப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும், கலைஞர் நினைவு நிகழ்ச்சியில் தேசிய கீதம் இருமுறை இசைக்கப்பட்டதாக முதல்வர் விஜய் முன்வைத்த விமர்சனத்திற்கும் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார்.

“குடியரசுத் தலைவர் பங்கேற்கும் நிகழ்வுகளில் அவர் வருகை தரும் போதும், புறப்படும் போதும் தேசிய கீதம் இசைக்கப்படுவது நடைமுறை விதியாகும். இந்த அடிப்படை நடைமுறைகூட முதலமைச்சருக்குத் தெரியாதது வருத்தமளிக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படியுங்க  தவெக ஆட்சியில் செங்கோட்டையனுக்கு முக்கியப் பதவி..! மாஸ் காட்டும் விஜய்..!

அதேபோல், டாஸ்மாக் துறையில் ‘கட்சி நிதி’ என்ற பெயரில் முறைகேடுகள் நடைபெறுவதாக முதலமைச்சர் விஜய் கூறியிருந்ததற்கும் உதயநிதி ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். “தைரியம் இருந்தால் எந்தக் கட்சியை குறிக்கிறார் என்பதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்” என்று சவால் விடுத்த அவர், திமுக உறுப்பினர்களுடன் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார்.

மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு கூறுவதை விட சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் நோக்கத்திலேயே இந்தப் பேச்சுகள் அமைந்துள்ளன என்றும், அதனால் மக்கள் எதிர்பார்த்த பதில்கள் கிடைக்கவில்லை என்றும் தனது விமர்சனத்தை உதயநிதி ஸ்டாலின் நிறைவு செய்தார்.

முதல்வர் விஜய்யின் சட்டமன்றப் பேச்சும், அதனைத் தொடர்ந்து எழுந்துள்ள அரசியல் விமர்சனங்களும் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாதமாக மாறியுள்ளன.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago