Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தனியாக வசித்து வந்த பெண்ணிடம் துப்பாக்கி மற்றும் கத்தி முனையில் மிரட்டி தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த வழக்கில், இரண்டு இளைஞர்களை ராசிபுரம் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராசிபுரம் அடுத்த பட்டணம் பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வி, தனது கணவரிடமிருந்து பிரிந்து தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கடந்த ஜூன் 11ஆம் தேதி இரவு வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்த இரண்டு இளைஞர்கள் வீட்டிற்குள் புகுந்துள்ளனர்.

அவர்கள் கலைச்செல்வியை துப்பாக்கி மற்றும் கத்தி முனையில் மிரட்டி, சுமார் 20 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து கலைச்செல்வி அளித்த புகாரின் பேரில் ராசிபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

இந்த வழக்கை விரைவாகக் கண்டறிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விமலா அவர்களின் உத்தரவின்பேரில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதையும் படியுங்க  உயிரைக் குடிக்கும் 'வலி நிவாரணி' மாத்திரைகள்.. திருச்சியில் அடுத்தடுத்து பயங்கரம்.. அலறும் பெற்றோர்!

விசாரணையில், ராசிபுரம் அருகே முருங்கப்பட்டியைச் சேர்ந்த ராஜகண் மற்றும் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த அஜித்குமார் ஆகியோர் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், ராஜகண் கலைச்செல்வியின் மருமகனுக்குச் சொந்தமான அலோ பிளாக் தயாரிப்பு தொழிற்சாலையில் பணியாற்றியிருந்ததும், சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த வேலையை விட்டு நின்றிருந்ததும் தெரியவந்துள்ளது. அதன் பின்னர் தனது நண்பர் அஜித்குமாருடன் இணைந்து இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்து இதுவரை 9 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் கொள்ளையில் தொடர்புடைய பிற தகவல்கள் மற்றும் மீதமுள்ள நகைகளை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago