தமிழக அரசியலில் சட்டமன்ற உறுப்பினர்களின் திடீர் ராஜினாமாக்கள் அடுத்தடுத்து அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் சூழலில், “அதிமுக மீண்டும் உடை கிறதா? வரவிருக்கும் இடைத்தேர்தல் களம் யாருக்குச் சாதகமாக இருக்கும்?” என்ற விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. இது குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தனது நுணுக்கமான கணிப்புகளைப் பகிர்ந்துள்ளார்.
அதிமுக-வுக்குள் சசிகலா, தினகரன் பங்கு என்ன?
”அதிமுக எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா விவகாரத்தில் சசிகலா அல்லது டிடிவி தினகரன் ஆகியோரால் தற்போதைய சூழலில் பெரிய அளவில் தலையிட முடியாது. எடப்பாடி பழனிசாமி நினைத்தால் மட்டுமே அவர்களுக்கு ஏதேனும் ஒரு ரோல் கொடுக்க முடியுமே தவிர, தங்களின் சொந்த பலத்தில் அவர்களால் அதிமுக-வுக்குள் தற்பொழுது எந்தப் பொறுப்பையும் எடுக்க முடியாது. இதனைத் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ள தினகரன், எடப்பாடியின் தலைமைக்கு அச்சுறுத்தலாக இருக்க விரும்பாமல், மற்றொரு கட்சித் தலைவராக மட்டுமே அவருடன் பயணிக்கத் தயாராக இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி ஒரு சாதுரியமான அரசியல்வாதி என்பதால், தனது தலைமைப் பதவிக்கு ஆபத்து விளைவிக்கும் யாரையும் அவர் உள்ளே அனுமதிக்க மாட்டார்.
4 தொகுதி இடைத்தேர்தல்
அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்துள்ள 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தால், எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக இருக்கும். கடந்த தேர்தலில் திருச்சி தொகுதியில் அதிமுக டெபாசிட் இழந்தது. தற்போதைய சூழலில் அங்கு கட்சியின் கட்டமைப்பு பலவீனமாக இருப்பதால், மீண்டும் இடைத்தேர்தல் நடந்தால் அதிமுக இன்னும் மோசமான பின்னடைவையே சந்திக்கும்.
அம்பாசமுத்திரம் தொகுதியில் தனிப்பட்ட செல்வாக்கின் காரணமாகவே அதிமுக முன்னிலை பெற்றிருந்தது. தற்பொழுது அங்கும் கட்டமைப்பு பலகீனமாக உள்ளதால், அதிமுக-வுக்கு கடுமையான பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது.
மதுராந்தகம் தொகுதியைப் பொறுத்தவரை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் முடிவு மிகவும் முக்கியமானது. கடந்த முறை அன்புமணி பொது வேட்பாளராக நின்றபோது அது பெரிய பலமாக அமைந்தது. தற்பொழுது சி.வி. சண்முகத்தின் எதிர்ப்பு, அன்புமணி முதலமைச்சரைச் சந்தித்த நிகழ்வு போன்ற நகர்வுகளுக்கு மத்தியில், இந்தத் தொகுதியில் தவெக, திமுக- அதிமுக இடையே கடுமையான போட்டி இருக்கும்.
தாராபுரம்தொகுதியில் உதயசூரியன், விசிக-வின் பலத்தையும் மீறி, இரட்டை இலை சின்னம் கடந்த முறை 40% வாக்குகளைப் பெற்றது.
பெருந்துறையில் விசிக மற்றும் உதயசூரியனை எதிர்த்து அதிமுக-வின் ஜெயக்குமார் வெற்றி பெற்றிருந்தார். இந்த இரண்டு தொகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான சமூக வாக்குகள், இரட்டை இலை சின்னத்திற்கான பலம் அப்படியே உள்ளதால், அண்ணாமலை களத்தில் இல்லாத பட்சத்தில் இந்த வாக்குகளை எடப்பாடி பழனிசாமியால் எளிதாகத் தக்கவைக்க முடியும். எனவே இந்த இரு இடங்களும் எடப்பாடிக்கு அட்வான்டேஜ் ஆக அமையலாம்.
பாஜக-வின் அண்ணாமலையைப் பொறுத்தவரை, தற்போதைய இடைத்தேர்தல் களம் அவருக்குப் பெரிய சோதனை மைதானமாக இருக்காது. அவர் வெளியில் இருந்து தன்னை பலப்படுத்திக் கொண்டு, எதிர்காலத்தில் ‘விஜய் Vs அண்ணாமலை’ என்ற சூழல் வரும்போதுதான் நேரடியாகத் தன்னை நிரூபிக்க களமிறங்குவார். எனவே, தற்போதைய தேர்தல் களம் முக்கியமாக திமுக, தவெக, அதிமுக, நாம் தமிழர் கட்சி ஆகிய நான்கு தரப்பிற்கு இடையிலான போட்டியாகவே இருக்க வாய்ப்புள்ளது.
அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்றுவிட்டு, தற்பொழுது ராஜினாமா செய்துவிட்டுச் சென்றவர்கள் மீது மக்களுக்கு இயல்பாகவே ஒரு அதிருப்தி இருக்கும். இதன் காரணமாக ஏற்படும் அனுதாப அலை, சமூக வாக்குகள் ஆகியவை பெருந்துறை, தாராபுரம் போன்ற தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு நல்ல ஃபைட்டிங் சான்ஸ் கொடுக்கும்” என்று ரவீந்திரன் துரைசாமி கணித்துள்ளார்.
