தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் ‘லஞ்சமே இல்லாத நேர்மையான நிர்வாகம்’ என்ற முழக்கம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மின்சாரத் துறையில் நிலவும் புதிய சிக்கல் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லஞ்சத்தைக் கட்டுப்படுத்த அதிகாரிகளை மாற்றினாலும், துறைக்குள் நடக்கும் உள்ளடி வேலைகளால் பணிகளே முடங்கிப்போய் முதலீட்டாளர்கள் புலம்பும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
”புதுசா வந்த ஆட்சியில லஞ்சம் ஒழிஞ்சிடுச்சுன்னு சொல்றாங்க. ஆனா எந்த வேலையும் நடக்காம எல்லாம் முடங்கி போயிருக்கு” என மின்சார துறையால் பாதிக்கப்பட்டவர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு அதிரடியான பல மாற்றங்களை மின்சாரத்ததுறையில் செய்து வருகிறது. பல உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டு அந்த இடங்களுக்கு புது அதிகாரிகள் வந்திருக்கிறார்கள். இதனால் சோலார் பேனல் தயாரிப்பில ஈடுபட்டிருக்கக்கூடிய முதலீட்டாளர்கள் நிம்மதி அடைந்திருந்தார்கள். லஞ்சமே இல்லாமல் வேலை நடக்கும் என்கிற நம்பிக்கையில் இருந்த அவர்களுக்கு இப்போது எந்த வேலையும் நடக்காதது பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
காரணம் புதிதாக வந்திருக்கிற அதிகாரிகளை அங்கே இருந்த பழைய அதிகாரிகள் ”நீங்க இப்படி எல்லாம் செஞ்சா எல்லா பிரச்சனையும் உங்க தலையில தான் விழும். இப்படி செஞ்சா வேற மாதிரியான தலைவலி வரும்” என எந்த வேலையும் செய்யவிடாமல் முட்டுக்கட்டை போடுகிறார்களாம். ”முன்னால காசு கொடுத்தாவது வேலையை சரியான நேரத்துக்கு முடிச்சிட்டு இருந்தோம். பிசினஸும் நல்லா இருந்துச்சு. ஆனா இப்போ லஞ்சமும் இல்லாம வேலையும் நடக்காம முடக்கப்பட்டு இருக்கிறோம்” என புலம்புகிறார்கள். அமைச்சருக்கும் ஆட்சி மேலிடத்துக்கும் இந்த விவகாரத்தை கொண்டு போகிற முயற்சிகளில் இவர்கள் இப்போது ஈடுபட்டிருக்கிறார்கள்.
