இந்தியா – சீஷெல்ஸ் நாடுகளுக்கிடையேயான தூதரக உறவின் 50-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக சீஷெல்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளார்.
அந்தப் பயணத்தின் போது, சீஷெல்ஸ் தேசிய தாவரவியல் பூங்காவில் உலகிலேயே மிக வயதான நிலவாழ் உயிரினமாகக் கருதப்படும் 194 வயதுடைய ‘ஜொனாதன்’ என்ற அல்டாப்ரா ராட்சத ஆமையை பிரதமர் மோடி நேரில் சந்தித்து உணவளித்தார். இந்த அரிய நிகழ்வு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
1832-ஆம் ஆண்டு பிறந்ததாக நம்பப்படும் ஜொனாதன், உலகிலேயே அதிக காலம் வாழும் நிலவாழ் விலங்கு என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது. சமீபத்தில், அதற்கு கின்னஸ் உலக சாதனை அமைப்பின் ‘ICON’ என்ற சிறப்பு அந்தஸ்தும் வழங்கப்பட்டுள்ளது.
அல்டாப்ரா ராட்சத ஆமை இனத்தைச் சேர்ந்த ஜொனாதனின் சராசரி இன ஆயுட்காலம் 150 ஆண்டுகள் என்றாலும், அதையும் தாண்டி 194 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறது. தனது வாழ்நாளில் 8 பிரிட்டிஷ் மன்னர்கள் மற்றும் 40 அமெரிக்க அதிபர்களின் ஆட்சிக் காலங்களை அது கண்டுள்ளது.
வயது முதிர்வால் கண்புரை காரணமாக பார்வை மற்றும் மோப்பத் திறன் குறைந்திருந்தாலும், மருத்துவர்களின் தொடர் பராமரிப்பால் ஜொனாதன் தற்போது நல்ல உடல்நலத்துடன் வாழ்ந்து வருகிறது.
இந்த ராட்சத ஆமைகளுக்கும் இந்தியாவிற்கும் நீண்டகால தொடர்பு இருப்பதாக பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 2014-ஆம் ஆண்டு சீஷெல்ஸ் அரசு இரண்டு அல்டாப்ரா ராட்சத ஆமைகளை கொல்கத்தா அலிபூர் உயிரியல் பூங்காவிற்கு பரிசாக வழங்கியது. பின்னர், சில ராட்சத ஆமைகள் ஹைதராபாத் உயிரியல் பூங்காவிற்கும் வழங்கப்பட்டன.
இந்தியா – சீஷெல்ஸ் தூதரக உறவின் பொன்விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்தப் பயணம், இரு நாடுகளின் நட்புறவை மேலும் வலுப்படுத்துவதோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் பெருக்கத்தின் முக்கியத்துவத்தையும் உலகிற்கு எடுத்துரைக்கும் நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
