எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து கடும் விமர்சனம் முன்வைத்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், கடந்த 15 நாட்களில் தமிழ்நாட்டில் 25 கொலைகள், அதில் 4 இரட்டைக் கொலைகள், மேலும் 19 பாலியல் குற்றங்கள் நடைபெற்றுள்ளதாகவும், இது தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாற்றம், மாற்றம் என்று கூறி வந்த ஆட்சியில் தற்போது தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு நிலை மோசமடைந்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், கோவை சூலூர் சிறுமிக்கு நடந்த கொடூர சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து தமிழ்நாடு மீளுவதற்குள், விழுப்புரம் மாவட்டத்தில் மற்றொரு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், சூலூர் சம்பவத்தில் சிறுமியின் தாய்க்கு தகவல் தெரிவிக்காமல் உடல் அவசரமாக எரிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே சிறுவன் படுகொலை செய்யப்பட்டதாகவும், கோவையில் இளம்பெண்ணின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகவும், முதலமைச்சரின் சொந்த தொகுதியில் போதை கும்பல் 13 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்ததாகவும் அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சம்பவங்களை குறிப்பிடும் உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாடு இது உத்தரப் பிரதேசமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், முதலமைச்சர் அறிவித்த “சிங்கப்பெண் அதிரடிப்படை” எங்கே என்று கேள்வி எழுப்பியதோடு, தேர்தலுக்கு முன்பு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்கள் காரணமாக பொதுமக்கள் அச்சத்தில் இருப்பதாகவும், காவல்துறை கூட்டங்கள் நடத்தப்படுவது மட்டும் போதாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக அரசு எடுக்கப்போகும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து முதலமைச்சர் நேரடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
