https://republictn.com/

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே சேங்காலிபுரம் எம்ஜிஆர்நகர் காலனி தெரு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் என்பவரது மகன் திருமுகம் வயது 50. இவர் இந்தபகுதியில் செங்கல்சூலையில் வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு திருமணம் ஆகி சுதா வயது 44 என்கிற மனைவியும், பத்தாம் வகுப்பு படிக்கும் 15வயதான ஒரு ஆண்பிள்ளையும், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயதான ஒரு பெண் பிள்ளையும் உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 11.30மணி அளவில் திருமுகம் சாப்பிட்டுவிட்டு தனது குடும்பத்தினருடன் உறங்கிக் கொண்டிருந்த பொழுது, திடீரென திருமுகம் வீட்டில் புகுந்த நான்கு மர்மநபர்கள், திருமுகத்தை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

மனைவி மற்றும் குழந்தைகள் கண்முன்னே இந்த சம்பவம் நடந்ததால் அவர்கள் அலறி கூச்சலிட்டனர். மர்ம நபர்கள் அறிவாளால் வெட்டியதில் திருமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருமுகம் இறந்ததை உறுதி செய்துவிட்டு மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

தகவலறிந்து சென்ற குடவாசல் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவரது மனைவி குழந்தைகளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது முன்விரோதம் காரணமாக நடந்த கொலையா.?அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இறந்தவரது உறவினர்கள் கொலையாளியை உடனே கைதுசெய்து தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி சேங்காலிபுரம் குடவாசல் மெயின்ரோட்டில் சாலைமறியல் செய்து வருகின்றனர்.

காவல்துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் கும்பகோணம் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 hour ago at 1 hour ago