https://republictn.com/

தவெக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள சூழலில், கட்சியின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்ற ஒரு முக்கிய மேலாண்மை ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் சமீபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதலமைச்சரின் தலைமை ஆலோசகரான ஜான் ஆரோக்கியசாமி கலந்துகொண்டு, நிர்வாகிகளுக்குப் பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களையும், எச்சரிக்கைகளையும் வழங்கியுள்ளார்.

எம்.எல்.ஏ-க்களின் குமுறல்
இந்த கூட்டத்தில் பங்கேற்ற தவெக அமைச்சர்கள் முதல் மாவட்டச் செயலாளர்கள் வரை அனைவரும் கூட்டாக ஒரு முக்கிய புகாரை முன்வைத்துள்ளனர். “மாநிலத்தில் உள்ள அரசு அதிகாரிகளான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்டோர் தவெக கட்சியின் எம்.எல்.ஏ-க்களையும், மாவட்டச் செயலாளர்களையும் சரிவர மதிப்பதில்லை” என்று அவர்கள் ஒருசேரக் குற்றம் சாட்டினர். இதனால் மக்கள் மத்தியில் தங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதாகவும், கட்சியின் பெயருக்குக் களங்கம் ஏற்படுவதாகவும் அவர்கள் தங்களின் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஜான் ஆரோக்கியசாமியின் வார்னிங்
நிர்வாகிகளின் இந்தக் குற்றச்சாட்டுக்குத் தலைமை ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி மிகத் தெளிவான, அழுத்தமான பதிலை அளித்துள்ளார். தேர்தல் முடிந்து ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே, எந்தெந்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை எந்தெந்த பொறுப்புகளில் நியமிக்க வேண்டும் என்று திட்டமிடுவதற்கே சுமார் 3 மாதங்கள் ஆனது. அந்தத் திட்டமிடல் பணிகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தற்போதுள்ள நிர்வாகக் கட்டமைப்பில், நீங்கள் குறிப்பிடும் அதிகாரிகளை மாற்றிப் புதிய அதிகாரிகளை நியமித்து ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் சீரமைக்கக் குறைந்தது இன்னும் 6 மாதங்கள் வரை கால அவகாசம் எடுக்கும்.

மக்கள்தான் நமக்கு பாஸ்
அதுவரை உங்களுடைய அரசியல் களம் சற்றே போராட்டக் களமாகத்தான் இருக்கும். அதனைப் பொறுத்துக்கொண்டு, அதிகாரிகள் மேல் குற்றம் சொல்வதை விடுத்து, எப்போதும் மக்களோடு தொடர்பில் இருங்கள். எதார்த்தமான சூழலை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். ஏனென்றால், இந்த ஆட்சியில் மக்கள்தான் நமக்கு பாஸ் என்று அவர் கறாராக அறிவுறுத்தியுள்ளார். பனையூரில் நடைபெற்ற இந்த ஆலோசனை, ஜான் ஆரோக்கியசாமியின் இந்த அதிரடி வார்னிங், தவெக கட்சி, ஆட்சி நிர்வாகத்தில் வரவிருக்கும் பெரும் மாற்றங்களுக்கான தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 day ago at 1 day ago