‘இந்தியா டுடே – சிவோட்டர்’ அமைப்பின் ‘மூட் ஆஃப் தி நேஷன்’ கருத்துக்கணிப்பில், இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என்ற பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்தியைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் 9 சதவீத ஆதரவுடன் 3-வது இடத்தைப்பிடித்துப் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளார். இந்த ஆய்வில், தமிழகத்தில் மட்டுமல்லாமல் நாட்டின் பிற பகுதிகளிலும், முக்கியமாக வடகிழக்கு மாநிலங்களின் இளைஞர்கள் மற்றும் வாக்காளர்கள் மத்தியிலும் விஜய் மீதான ஆதரவும் செல்வாக்கும் கணிசமாக உயர்ந்துள்ளதை இந்த ஆய்வு முடிவுகள் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளன. எதிர்வரும் 2029 மக்களவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரான விஜய்யை பிரதமருக்கான வேட்பாளராக முன்நிறுத்த வேண்டும் என்ற குரல்கள் அவர்தம் கட்சியினரிடையே தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த கருத்துக்கணிப்பு முடிவு தேசிய அரசியலில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
பல ஆண்டுகளாக, தமிழ்நாட்டிலிருந்து ஒருவர் பிரதமராவது என்பது ஒரு யதார்த்தமான தேர்தல் விவாதமாக இல்லாமல், வெறும் அரசியல் விருப்பமாகவே இருந்து வந்தது. இந்நிலையில், தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று மூன்று மாதங்களே ஆன நிலையில், இந்திய அரசியலில் பல தசாப்தங்களாகச் செயல்பட்டு வரும் தலைவர்கள் வகிக்கும் இடத்திற்கு சி. ஜோசப் விஜய் வந்துள்ளார்.
விஜய் வகிக்கும் இடத்திற்காக மட்டுமல்லாமல், தேசிய அரசியல் களத்தில் அவர் மிகக் குறுகிய காலத்தில் மக்களின் கவனத்தை ஈர்த்த விதத்திற்காகவும் இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகள் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன. ‘தமிழக வெற்றி கழகம்’ கட்சியின் நிறுவனரான இவர், அடுத்த பிரதமருக்கான விருப்பத் தேர்வில் 9.2% ஆதரவைப் பெற்றுள்ளார். இவருக்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி 48.7% ஆதரவுடனும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 27.1% ஆதரவுடனும் உள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள தவெக அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்து வரும் நிலையில், பிரதமர் பதவிக்கான விருப்பத் தேர்வில் விஜய் முன்னிலை பெற்றது ராகுல் காந்தியின் ஆதரவுத் தளத்தைப் பாதித்திருக்கலாம் என்பது கவனிக்கத்தக்கது.
டிஎம்சி தலைவர் மம்தா பானர்ஜி (2%), சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் (1.7%), காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் அபிஜித் டிப்கே (1.3%) மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் (1.2%) ஆகியோரை விட விஜய் முன்னிலையில் உள்ளார்.
‘மூட் ஆஃப் தி நேஷன்’ என்பது ‘இந்தியா டுடே’ குழுமத்தால் சுமார் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் ஒரு கருத்துக் கணிப்பு. ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 25 வரையிலான காலகட்டத்தில் 25,184 பேரிடம் நேரடியாக நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் ‘CVoter’ நிறுவனம் ஆகஸ்ட் 2026-க்கான இந்த ஆய்வை மேற்கொண்டது. ‘CVoter’-இன் வழக்கமான கண்காணிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த ஆறு மாதங்களில் நடத்தப்பட்ட 91,795 நேர்காணல்களின் தரவுகளும், ‘ஆகஸ்ட் 2026 – நாட்டின் மனநிலை’ குறித்த முடிவுகளைத் தொகுக்கப் பயன்படுத்தப்பட்டன.
விஜய்யின் செல்வாக்கு உயர்வு என்பது, அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வியுடன் மட்டும் நின்றுவிடவில்லை. எதிர்க்கட்சிகளின் கூட்டணியை வழிநடத்த தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர்களில் யார் மிகவும் பொருத்தமானவர் என்று கேட்கப்பட்டபோது, விஜய் 12.2% வாக்குகளைப் பெற்று முன்னணியில் இடம்பிடித்தார். 29% ஆதரவுடன் முதலிடத்தில் இருந்த ராகுல் காந்திக்கு அடுத்தபடியாகவும், மம்தா பானர்ஜி (8.5%), அரவிந்த் கெஜ்ரிவால் (7.5%) மற்றும் அகிலேஷ் யாதவ் (6.9%) ஆகியோருக்கு முன்னதாகவும் அவர் திகழ்ந்தார்.
அரசியலில் தனது முதல் பதவிக்காலத்தின் ஆரம்ப மாதங்களிலேயே உள்ள ஒரு அரசியல்வாதி, எவ்வாறு தமிழகத்தைத் தாண்டி தனது அரசியல் அடையாளத்தை விரைவாக விரிவுபடுத்தியுள்ளார் என்பதை இந்த ஆய்வு முடிவுகள் உணர்த்துகின்றன.

வெள்ளித்திரை சூப்பர் ஸ்டாரிலிருந்து அரசியல் போட்டியாளராக இந்திய அரசியலில் அரிதாகவே காணக்கூடிய வேகத்தில் விஜய்யின் அரசியல் பயணம் அமைந்துள்ளது.
2024-ல் ‘தவெக கட்சியைத் தொடங்கியதன் மூலம் இந்த விஜய் அதிகாரப்பூர்வமாக அரசியலில் நுழைந்தார். இரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே அக்கட்சி தனது முதல் தேர்தலில் போட்டியிட்டு, தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்ததுடன், 2026-ல் விஜய்யை முதலமைச்சராகவும் அமரவைத்தது. இப்போது, அவரது அரசு தனது முதல் ஆண்டை நிறைவு செய்வதற்கு முன்பே, நாட்டின் அரசியல் மனநிலையை அளவிடும் ஒரு ஆய்வில், நீண்டகாலமாக அரசியலில் உள்ள தேசியத் தலைவர்களுக்கு இணையாக அவரது பெயரும் இடம்பெற்றுள்ளது.
பொதுத் தேர்தலுக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ளன. மக்களின் செல்வாக்கை ஒரு தேசிய அளவிலான தேர்தல் கூட்டணியாக மாற்றுவது என்பது முற்றிலும் மாறுபட்ட ஒரு சவாலாகும். இருப்பினும், 2029-ல் பிரதமர் பதவிக்கான போட்டியாளராக விஜய் முன்னிறுத்தப்படும் கருத்து, இனி தமிழகத்திற்குள் மட்டும் முடங்கிவிடவில்லை என்பதை ‘இந்தியா டுடே-CVoter’ ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
ஆகஸ்ட் மாத ‘மூட் ஆஃப் தி நேஷன்’ கருத்துக்கணிப்பு முடிவுகள், விஜய் இப்போது தவெக கட்சிக்குள் மட்டுமல்லாமல் பொதுமக்களிடையேயும் பிரதமர் பதவிக்கான முகமாகப் பார்க்கப்படுவதையும், பிரபலத்திற்கான போட்டியில் பல அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகளை அவர் முந்தியிருப்பதையும் வெளிப்படுத்துகின்றன.
விறுவிறுப்பான செய்திகளை உடனுக்குடன் பெற டெய்லிஹண்டில் ரிபப்ளிக் தமிழ்நாடு – ஃபாலோ செய்யவும்
