முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கலந்து கொண்டு நலத்திட்டங்களை வழங்கினார். அப்போது பேசிய அவர் சட்டமன்ற தேர்தலில் திராவிட மாடல் 2.0 ஆட்சி வரும் என ஒரு நம்பிக்கையோடு எதிர்பார்த்தேன். அப்போது எதிரி யார் என்று தெரியாமல் சண்டை போட்டுள்ளோம். தற்போது எதிரி யாரென தெரிந்துவிட்டது.
வெற்றி வாய்ப்பை இழந்ததற்கு எத்தனையோ காரணங்களை சொல்லி கொள்ளலாம். சினிமா, மாயை, இளம் தலைமுறையினருக்கு சோசியல் மீடியா கவர்ச்சியால் நமது திட்டங்கள் சென்று நேரவில்லை என எத்தனையோ காரணங்களை சொல்லி நாம் சமாதானம் செய்து கொள்ளலாம். ஆனால் கொளத்தூர் தொகுதி தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாதது. அந்த தோல்வியை மறக்காமல் அதை நாம் பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்த தேர்தலில் நாம் பெரிய வெற்றியாக மாற்றிக் காட்ட வேண்டும்.
இந்த கிழக்கு மாவட்டத்தில் மாதம் ஒரு நிகழ்ச்சியில் நான் வந்து கலந்துகொண்டு இருக்கிறேன். ஆனால் 4 மாதங்களுக்கு பிறகு இந்த சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு வந்து இருக்கிறேன். சேகர்பாபு அவர்கள் நினைத்து இருக்கலாம். நான் அவர் மீது கோபத்தில் இருக்கிறேன். அதனால் நான் வரலை என்று கூட அவர் நினைத்து இருக்கலாம். அது கோபம் இல்லை. வருத்தம். வருத்தம் மட்டும் இல்லை. அவர் மீதும் இந்த மாவட்டம் மீதும் எனக்கு இருக்கக்கூடிய உரிமை. எத்தனையோ காரணங்களை நாம் சொல்லலாம்.
ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கை தவெகவினருக்கே இல்லை. அது ஒரு விபத்து போல நடந்துள்ளது. அவர்களை மக்கள் முழுமையாக தேர்ந்தெடுக்கவில்லை. 108 தொகுதிகள் மட்டுமே வெற்றி பெற்றனர். திமுக கூட்டணியில் வென்றவர்களின் தயவில் தான் தவெக ஆட்சி நடக்கிறது என்றார்.
