அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும் சற்றும் விறுவிறுப்பு குறையவேயில்லை. குறிப்பாக, தவெக தலைவர் சி.ஜோசப் விஜய் முதல்வராக பொறுப்பேற்றும் தொடர்ந்து, அடுத்தடுத்து அரங்கேறும் அரசியல் நகர்வுகள் ஐபிஎல் மேட்களை எல்லாம் ஓரம் கட்டிவிட்டடது. தற்போது மிக முக்கிய விவாதமாக மாறியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் சீனியரும், ஆக்ரோசஷமான அரசியல் விமர்சகருமான திருச்சி வேலுச்சாமி.
திமுக கூட்டணியில் இருந்தும் துணிச்சல்!
காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் அங்கம் வகித்த போதும், கடந்த ஓராண்டிற்கும் மேலாகத் தவெக தலைவர் விஜய்யின் அரசியல் வருகையையும், அவரது கொள்கைகளையும் தொடர்ந்து பொதுமேடைகளிலும் ஊடக நேர்காணல்களிலும் தீவிரமாக ஆதரித்துப் பேசி வந்தவர் திருச்சி வேலுச்சாமி. தவெக-வின் அரசியல் நகர்வுகளை திமுக- அதிமுக ஆகிய இருபெரும் திராவிட கட்சிகள் விமர்சித்த போதெல்லாம், அவர்களுக்குத் தனது பாணி புள்ளிவிவர அரசியல் மூலம் பதிலடியால் அடித்து நொறுக்கியவர் வேலுச்சாமி. திமுக கூட்டணியின் தவறுகளைச் சுட்டிக்காட்டி, விஜய்க்குப் பின்னால் ஒரு தார்மீக அரணாக நின்று முழங்கியவர்.

திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்
முதல்வர் விஜய், தான் போட்டியிட்டு வென்ற பெரம்பூர் தொகுதியை தக்கவைத்துக் கொண்டு, திருச்சி கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன் காரணமாக திருச்சி கிழக்குத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரவிருக்கிறது. இந்நிலையில், தவெக தலைவர் விஜய்யின் அரசியல் பயணத்திற்கு ஆரம்பக் காலம் தொட்டே விசுவாசமாகத் துணை நின்ற திருச்சி வேலுச்சாமியை அந்தத் தொகுதியில் களம் இறக்க வேண்டும் என்கிற கோரிக்கை அரசியல் வட்டாரங்களில் பலமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
வலுக்கும் கோரிக்கை
இதுவரை காங்கிரஸ் கட்சியில் எந்தவொரு பெரிய பதவியையும் வகிக்காத திருச்சி வேலுச்சாமிக்கு, முதல்வர் விஜய் தனது ஆதரவுக் கரத்தை நீட்ட வேண்டும் என தவெக தொண்டர்கள் மத்தியிலும் கூட கோரிக்கைகள் எழுந்துள்ளன.
“தவெக-வின் ஆரம்பக்கட்ட சோதனையான காலங்களில், கூட்டணியைப் பொருட்படுத்தாமல் நமக்காகக் குரல் கொடுத்த ஒரு சீனியர் தலைவருக்கு, விஜய் கொடுக்கும் மிகச்சிறந்த அங்கீகாரமாக இது இருக்கும்” என்று தவெக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்து கொண்டே தவெக-வின் செல்வாக்கை உயர்த்தப் பாடுபட்ட திருச்சி வேலுச்சாமியை, இந்த இடைத்தேர்தல் மூலம் வேட்பாளராக களமிறக்க விஜய் முன் வருவாரா? வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
