https://republictn.com/

தென்கொரிய சுற்றுலா துறையின் கௌரவ தூதராக நடிகை பிரியங்கா மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். கொரிய கலாசாரத்தை இந்தியர்களிடையே கொண்டு செல்ல உதவக்கூடிய ஒருவராக தன்னை அங்கீகரித்ததற்காக நன்றி தெரிவிப்பதாக பிரியங்கா மோகன் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

தென்கொரியாவை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட “மேட் இன் கொரியா” திரைப்படத்தில் பிரியங்கா மோகன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தென்கொரிய அரசு மற்றும் தென்கொரிய சுற்றுலா நிறுவனம் (KTO) இணைந்து, இந்திய மக்களிடையே தங்களது நாட்டின் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் ஜூன் 1, 2026 அன்று இந்த அறிவிப்பை வெளியிட்டன.

“மேட் இன் கொரியா” திரைப்படத்தின் வெற்றி:

இயக்குனர் ஆர். கார்த்திக் இயக்கத்தில், பிரியங்கா மோகன் நடிப்பில் 2026 மார்ச் மாதம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான “Made in Korea” என்ற தமிழ்த் திரைப்படம் உலகளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

தென்கொரியாவை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம், வெளியான மூன்று வாரங்களுக்குள் 1.35 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று, 54 நாடுகளில் பிரபலமானது.

இந்திய–கொரிய கலாசார உறவை வலுப்படுத்தியதற்காகவும், கொரியப் பண்பாட்டை இந்தியர்களிடையே கொண்டு சேர்த்ததற்காகவும் பிரியங்கா மோகன் முக்கிய பங்காற்றியதாக கருதப்பட்டு இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நியமனம் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட பிரியங்கா மோகன், கொரிய அரசுக்கும், சுற்றுலா நிறுவனத்திற்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். தம்மீது நம்பிக்கை வைத்து இந்த கௌரவப் பொறுப்பை வழங்கியதை பெருமையாகக் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்திருந்த தென்கொரிய அதிபர் லீ ஜே மியூங்கிற்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில் அளிக்கப்பட்ட அரசு விருந்திலும் பிரியங்கா மோகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 days ago at 5 days ago