சென்னை சாலிகிராமம் 80 அடி சாலையில் அமைந்துள்ள தாய் சத்யா மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடிகர் தனுஷ் தனது சொந்த செலவில் கட்டிய அதிநவீன மூன்று மாடிக் கல்விக் கட்டிடத்தை திறந்து வைத்தார். எல்.கே.ஜி முதல் 10-ஆம் வகுப்பு வரை கல்வி பயின்ற தனது பள்ளிக்காக இந்தக் கட்டிடத்தை அமைத்துக் கொடுத்துள்ள தனுஷின் செயல், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
புதிய கட்டிடத் திறப்பு விழாவில் மாணவர்களிடம் உரையாற்றிய நடிகர் தனுஷ், இன்றைய தலைமுறையினர் தாய்மொழியான தமிழை எழுதவும் படிக்கவும் தெரியாமல் இருப்பது மிகவும் கவலைக்குரிய நிலையாக மாறிவிட்டதாக வேதனையுடன் குறிப்பிட்டார்.

“நீங்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்ளுங்கள், இந்தி கற்றுக்கொள்ளுங்கள் அல்லது உங்களுக்குப் பிடித்த எந்த மொழியையும் கற்றுக்கொள்ளுங்கள். அதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், பிற மொழிகளைக் கற்றுக்கொள்வது ஒரு கூடுதல் பலன் (Bonus) மட்டுமே. நமது அடையாளம் தாய்மொழிதான். அதனால், பிற மொழிகளைக் கற்கும்போது உங்கள் சொந்த தாய்மொழியை ஒருபோதும் புறக்கணிக்கக் கூடாது” என்று வலியுறுத்தினார்.
“இன்று நான் வெளியே சந்திக்கும் பத்து பேரில் எட்டு பேருக்குத் தமிழ் எழுதவோ, படிக்கவோ சரியாகத் தெரியவில்லை. அவர்கள் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுகிறார்கள்; நன்றாக எழுதுகிறார்கள். ஆனால், சொந்த தாய்மொழியை எழுதவும் படிக்கவும் தெரியாமல் இருப்பது பெருமை அல்ல. அது ஒரு அவமானம். ‘எனக்குத் தமிழ் தெரியாது’ என்று பெருமையாகச் சொல்வது பாராட்டப்பட வேண்டிய விஷயம் அல்ல” என்று மிகவும் உருக்கமாக அறிவுறுத்தினார்.
‘Bonus’ என்ற வார்த்தையை தனது உரையில் பயன்படுத்தியதற்கான காரணத்தையும் தனுஷ் மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார். பெல்ஜியத்தில் நடைபெற்ற ஒரு பிரெஞ்சு திரைப்படப் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது, அங்கிருந்த படக்குழுவினர் தனுஷ் ஆங்கிலத்தில் பேசுவதைப் பார்த்து ஆச்சரியப்பட்டதாகக் கூறினார்.
அப்போது அவர்கள், “ஆங்கிலம் என்பது ஒரு கூடுதல் பலன் (Bonus) மட்டுமே. ஆனால், ஒருவருக்குத் தனது தாய்மொழி நன்றாகத் தெரிந்திருப்பதுதான் மிக முக்கியமானது” என்று கூறியதாக நினைவுகூர்ந்தார். அந்த அனுபவம்தான் தாய்மொழியின் முக்கியத்துவத்தை இன்னும் ஆழமாக உணர வைத்ததாகவும், அதனால்தான் மாணவர்களிடமும் அதையே வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார்.
தனது பள்ளி நாட்களை நினைவுகூர்ந்த தனுஷ், “நாங்கள் பள்ளியில் படித்த காலத்தில் தமிழில் மிகவும் நன்றாக இருந்தோம். ஆனால், ஆங்கிலம் பேசுவதில் தடுமாறுவோம். தவறாகவே ஆங்கிலம் பேசுவோம். ‘Why do you went?’ என்று கேட்ட சம்பவங்களைக்கூட இன்று நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது

. ஆனால், இன்றைய சூழல் முற்றிலும் தலைகீழாக மாறிவிட்டது. இப்போது ஆங்கிலம் அனைவருக்கும் நன்றாகத் தெரிகிறது. ஆனால், தமிழை எழுதவும் படிக்கவும் தெரியாத நிலை அதிகரித்து வருகிறது” என்று தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
விழாவில் மாணவர்களின் உடல் மற்றும் மனநலன் குறித்தும் அவர் முக்கியமான கருத்தை முன்வைத்தார். இன்றைய மாணவர்கள் பல்வேறு மன அழுத்தங்களுக்கு ஆளாகி வருவதால், பள்ளியில் தினமும் உடற்பயிற்சி மற்றும் தியானத்திற்காக தனியாக ஒரு பாடவேளையை ஒதுக்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டார்.

மேலும், மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், “இந்தப் பள்ளி வளாகம் இன்னும் வளர வேண்டும். எதிர்காலத்தில் உங்களில் பலர் என்னைவிடப் பெரிய சாதனையாளர்களாக உருவாக வேண்டும். உங்களது பெயரிலும் இந்த வளாகத்தில் புதிய கட்டிடங்கள் எழ வேண்டும். அதற்காக இப்போதே கனவு காணுங்கள்; கடினமாக உழையுங்கள்” என்று உற்சாகப்படுத்தினார்.
இந்த நிகழ்வில் தனுஷ் தனது பள்ளியில் தனக்குக் கல்வி கற்பித்த ஆசிரியர்களை மேடையிலும் வகுப்பறையிலும் நேரில் சந்தித்து, அவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். இந்தக் காட்சி அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி, ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

1999-ஆம் ஆண்டு இந்தப் பள்ளியில் 10-ஆம் வகுப்பைப் படித்து முடித்த தனுஷுக்கு பள்ளி நிர்வாகம் சிறப்பு இன்ப அதிர்ச்சியையும் ஏற்பாடு செய்திருந்தது. அவருடன் 1999-ஆம் ஆண்டு படித்த பழைய நண்பர்கள் ரகசியமாக அழைக்கப்பட்டனர். பிரபல ஒளிப்பதிவாளர் குமரன் உள்ளிட்ட பள்ளி நண்பர்களை பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த தனுஷ், அவர்களுடன் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு, ஒன்றாக மதிய உணவு அருந்தி மகிழ்ந்தார்.
சாலிகிராமத்தில் உள்ள தாய் சத்யா மெட்ரிகுலேஷன் பள்ளியில் முன்பு எளிய கூரையுடன் இருந்த பழைய கட்டிடத்தை அகற்றி, தனது சொந்த நிதியில் அதிநவீன மூன்று மாடிக் கான்கிரீட் கட்டிடத்தை தனுஷ் கட்டிக்கொடுத்துள்ளார். இந்தக் கட்டிடத்திற்கு பள்ளி நிர்வாகம் ‘தனுஷ் பிளாக்’ என்று பெயரிட்டுள்ளது.

பள்ளி வளாகத்திற்கு வந்த நடிகர் தனுஷ், அங்கு நிறுவப்பட்டிருந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், பள்ளியில் உள்ள மற்ற பழைய கட்டிடங்களையும் புதுப்பித்துத் தருவதாகவும், காலியாக உள்ள இடங்களில் மாணவர்களுக்கு தேவையான புதிய வசதிகளை ஏற்படுத்தித் தருவதாகவும் பள்ளி நிர்வாகத்திடம் உறுதியளித்தார்.
நடிகர் தனுஷின் தாய்மொழிப் பற்றும், கல்விக்காக அவர் செய்துள்ள இந்தப் பெரும் நிதியுதவியும், மாணவர்களின் எதிர்கால நலனுக்காக அவர் முன்வைத்த ஆலோசனைகளும் சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. கல்வியாளர்கள், பெற்றோர், மாணவர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் அவரது செயலையும், தாய்மொழிக்கான அக்கறையையும் பாராட்டி வருகின்றனர்.
