கிருஷ்ணகிரியில் திருமணமான 10 ஆண்டுகளில் வரதட்சணைக் கொடுமை, குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மனுஷா என்ற பெண், தமக்கு நடந்த கொடூர அனுபவங்களை வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.
மனுஷாவுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. இவருக்கு 8 வயதில் மகனும், 6 வயதில் மகளும் உள்ளனர். திருமணமான முதல் மாதத்தில் இருந்தே நகை, பணம் கேட்டு மாமியார் வீட்டினர் தகாத வார்த்தைகளால் பேசித் துன்புறுத்தி வந்துள்ளனர். மற்றவர்களுடன் ஒப்பிட்டு கூடுதல் நகை எடுத்து வரச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர். மாமனார் தனக்கு எதிராகத் தவறாக நடக்க முயன்றதை தன் கணவரிடம் கூறியபோது, “அப்பா குடித்திருப்பார், விட்டுவிடு” எனக் கணவர் அலட்சியப்படுத்தியுள்ளார். ஆதாரத்துக்காக மாமனார் பேசியதை ரெக்கார்ட் செய்து காண்பித்தும், மாமியாரும் கணவரின் அண்ணனும் மனுஷா மீதே பழியைப் போட்டுள்ளனர்.
இதுகுறித்து மனுஷா கூறுகையில், ”எங்க அப்பா கூட என்னை அடிச்சது கிடையாது. எனக்கு கல்யாணம் ஆகி 10 வருஷம் ஆகுது. ரெண்டு குழந்தைங்க இருக்காங்க. பையனுக்கு எட்டு வயசு ஆகுது. பாப்பாக்கு ஆறு வயசு ஆகுது. கல்யாணம் ஆன வருஷம் ஆரம்பத்தில் இருந்தே வைர நகைக்கு ஆரம்பிச்ச சண்டை. கல்யாணம் ஆன முத மாசம் இருந்து நகை, பணம் உங்க வீட்லஇருந்து என்நை எடுத்துட்டு வரச் சொல்லி மிரட்டினார்கள். அடிக்கடி கேவலமா கெட்ட வார்த்தையில பேசுவாங்க. அப்புறம் எங்க பொண்ணுக்கு பிளாட்டுக்கு வாங்கி கொடுத்தாங்க. கார் வாங்கி கொடுத்தாங்க. நான் என் பொண்ணுக்கு இவ்வளவு நகை போட்டேன்.
உங்க வீட்ல இருந்து நீயும் போய் எடுத்துட்டு வா. என்ன எடுத்துட்டு வந்து இறக்கிட்ட அப்படின்ற மாதிரி நிறைய கொடுமை செய்தார்கள். அவங்க வீட்ல இருக்கும்போதே நிறைய கொடுமை பண்ணிருக்காங்க. பலமுறை அங்கேயே நிறைய பஞ்சாயத்தும் நடந்துருக்கு. அங்கேயும் பேசி இருக்காங்க. அதுக்கப்புறம் வந்து நல்லா பேசுற மாதிரி அப்படியே மாறிட்டு போகும். நானும் பிள்ளைங்களுக்காக இவ்வளவு நாள் சைலன்ட்டா இருந்தேன். அதுக்கப்புறம் ஒரு டைம் மாமனார் என்கிட்ட ஒரு மாதிரி தப்பா பேசுனாரு. நடந்துக்கிறாருன்னு சொல்லி என் வீட்டுக்காரர்கிட்ட சொல்லும்போது, அவரு ”இல்ல எங்க அப்பா குடிச்சிட்டு ஏதாவது பண்ணிருப்பாரு. வேணாம்.. அதை விட்டுரு” அப்படின்ற மாதிரி சொன்னாரு.
அவங்க நம்ப நம்ப மாட்டேன்றாங்கன்னு சொல்லிட்டு அவர் பேசும்போது நான் ரெக்கார்ட் பண்ணி எங்க வீட்டுக்காரருக்கு காண்பிச்சேன். அவர் கேட்குற மாதிரி கேட்டதுக்கு உடனே என் மாமியார் வந்து மாத்திட்டாங்க. ”இந்த மாதிரி இவ பேசாம எப்படிடா பேசுவாங்க? அப்படின்ற மாதிரி என் பக்கமே திருப்பி விட்டாங்க. அவங்க அண்ணனும் என்ன அடிச்சாரு. அவரும் ஒரு மாதிரி தான் பேசுவாரு. வீட்டை விட்டு நான் போகணும். நீ வந்தாவா. வரவில்லைன போ. நான் வீட்ட விட்டு போறேன். என் பிள்ளைங்களோட போறேன்னு சொல்லிட்டு நான் தனியா போயிட்டேன். போயிட்டும் அங்க போயும் சும்மா ஏதாவது ஒன்னு சொல்லிட்டே இருக்கறது.
உன் பொண்டாட்டி இப்படி அப்படினு என் அண்ணன் வந்து என்ன பார்த்துட்டு போனாக் கூட தப்பா பேசுறது. இந்த மாதிரி எல்லாம் நடந்து, அடிச்சு நானும் கம்ப்ளைன்ட் கொடுத்து இனிமேலும் இந்த மாதிரி பண்ண மாட்டேன். எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு. நான் உன் கூட இருப்பேன். வாழ்றேன்னு சொல்லிட்டு வந்தார் என் கணவர். இப்போ இங்க வந்து ரிட்டயர்ட் ஆகி வந்ததுல இருந்து என் பிள்ளைங்களுக்கு நான்தான்டி பீஸ் கட்டுனேன். நான்தான்டி பண்றேன் நான் சொல்றதுதான்டி நீ கேட்கணும் செய்யணும் அப்படின்ற மாதிரி ஒரு ரொம்ப ஒரு மாதிரி கேவலமா பேச ஆரம்பிச்சிட்டாரு. பிள்ளைகளையும் கண்டுக்கறது இல்ல.
வீட்ல இருந்த என்னோட நகையும் தூக்கிட்டு போயிட்டாரு. இப்போ இன்னைக்கு பிரச்சனை. லாஸ்ட் டைம் பிரச்சனையாகி அடிச்சிட்டாரு. நிறைய அடிச்சு என் போன்லாம் உடைச்சுட்டாரு. நான் எங்க வீட்டுக்கு வந்துட்டேன். அவரு போயிட்டு கம்ப்ளைன்ட் கொடுத்தார். நானும் போயிட்டு மகளிர் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்தேன். அவங்களும் பேசிட்டு அவரை நல்லா திட்டி ”இந்த மாதிரி எல்லாம் பண்ணாத. வாழ்க்கைய பாருன்னு சொல்லி அனுப்பிச்சாங்க.
அப்போது ”நான் இனிமே வாழ்றேன். செய்றேன்னு சொல்லி பேசிட்டு, வீட்டுக்கு போனவரு ஏதோதோ பேசி ஒரு மைண்ட மாத்தி அவங்க அண்ணன், ”உனக்கு நான் வேற கல்யாணம் பண்ணி வைக்கிறேன். அவ வேணாம் அப்படின்ற மாதிரி எல்லாம் பேசி இன்னைக்கு வந்து என்கூடயே வாழ மாட்டேங்கிட்ரார். ”நான் கட்டின தாலி எதுக்கு? உன்னுடைய ஏடிஎம் கொடு” என என்கிட்ட கெட்ட வார்த்தையில பேசி என்ன அடிச்சு எல்லாரையும் கீழ போட்டு, என்னை மிதிச்சு அவங்க தங்கச்சி அதுக்கு மேல கெட்ட வார்த்தையில கேக்குறாங்க. மாமியாரே எங்க அம்மாவையும் அடிச்சிட்டு போயிட்டாங்க. இன்னைக்கு இவ்வளவு அடிச்சு இவ்வளவு நடந்துருச்சு” என கண்ணீர் வடிக்கிறார் மனுஷா.
