இந்தியா டுடே- சி வோட்டர்ஸ் ”Mood of Nation” வழக்கமாக நடத்துகிற கருத்து கணிப்பை பொதுவாக யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆண்டுக்கு 2 முறை நடத்துகிற அந்த கருத்து கணிப்பில் மோடிக்கு எத்தனை சதவீதம்? ராகுலுக்கு எத்தனை சதவீதம்? ஆதரவு என சொல்வார்கள். இப்போது மக்களவைத் தேர்தல் நடந்தால் பாஜக கூட்டணி எத்தனை இடம் பிடிக்கும்? மாநில கட்சிகள் எத்தனை இடங்களில் வெற்றி பெறுவார்கள்? காங்கிரஸுக்கு எவ்வளவு? எனச் சொல்வார்கள். எப்போதும் மோடிக்கு அதிக சதவீதம்/ பாஜகவுக்கு அதிக இடங்கள்/ 2-வது இடம் மாநில கட்சிகள்/ 3-வது இடம் காங்கிரஸ் எனச் சொல்லப்படும்.. சதவீதம் மட்டும் கொஞ்சம் மாறும்.
ஆனால், இந்தமுறை ‘இந்தியா டுடே’-ன் ”Mood of Nation” சர்வே மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அடுத்த பிரதமர் யார்? என்கிற ரேஸில் இந்த முறை முதல்வர் விஜய்யை சேர்த்துவிட்டார்கள். தொகுதிகளைப் பொறுத்தவரை பாஜகவுக்கு 261; மாநில கட்சிகளுக்கு 176; காங்கிரஸுக்கு 106 சீட் கிடைக்கும் என ‘இந்தியா டுடே’ சர்வே சொல்கிறது. அதாவது பாஜகவுக்கு 2029 தேர்தலிலும் ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் கிடைக்காது என்பதை இந்தியா டுடே சர்வே சுட்டிக்காட்டுகிறது. டெல்லியிலும் சென்னையிலும் இதை பற்றித்தான் சீரியஸாக பேசி வருகிறார்கள்.
இதை பற்றி விஜய்க்கு நெருக்கமானவர்கள் கூறுகையில் “2029 தேர்தலில் நாங்க தவெக தனிச்சு போட்டியிடும் நிலைமை வரும். தென் மாநிலங்களிலும் நிற்போம். அப்ப மொத்தமா எங்களுக்கு 60 சீட் வரும். சிஎம் விஜய், பிஎம் ஆகுற சான்ஸ் இருக்கு என எங்க ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் சொல்லிகிட்டு இருக்கிறார். நாங்களும் இந்தியா டுடே சர்வே ரிசல்ட் பார்த்தோம்.. இன்னும் டைம் இருக்குங்க.. பேசுவோம்”ன்னு பூடகமாகவே சொல்கிறார்கள்.
மீண்டும் மோடி இல்லை?
டெல்லியில பாஜக மூத்த தலைவர்கள் கூறுகையில், “இந்த சர்வே ரிப்போர்ட் எங்களுக்கு எந்த அதிர்ச்சியையும் தரவில்லை. இது போல 2029-ல் நடக்கும் என எங்களுக்கு ஏற்கனவே ரிப்போர்ட் வந்துருக்கு. நாங்களும் அதுக்கு தகுந்த மாதிரி வேலைகளை தொடங்கவும் செஞ்சுட்டோம்..
பொதுவாக பாஜகவில 75 வயதுக்கு மேல முக்கிய பதவிகள் தரப்படுறது இல்லை. கட்சியை உருவாக்குன அத்வானிக்கும் சீனியர் லீடர் முரளி மனோகர் ஜோஷிக்கும் இது அப்ளை செஞ்சோம்.. மோடியும் 75 வயசை நெருங்கி விட்டார். இருந்தாலும் அவருக்கு மட்டும் விதிவிலக்கா இந்த டைம் பதவியில நீடிக்கிறார்.
மோடியையே மீண்டும் பிரதமர் வேட்பாளராக நிறுத்துறதை ஆர்.எஸ்.எஸ். ஏற்றுக் கொள்ளாது. அப்படி மோடியை மீண்டும் பிரதமராக்கிட்டா அவரு சர்வாதிகாரியா மாறிவிடுவார் என ஆர்.எஸ்.எஸ். நினைக்கிறது.
அது மட்டும் காரணம் இல்லை. மோடி முகத்தை காட்டி மறுபடியும் ஓட்டு வாங்கிடவும் முடியாதுன்னு எங்க எல்லாருக்குமே தெரியும். அதே மாதிரி 2024-ல் வாங்குன 240 சீட்டுகளை மறுபடியும் வாங்க முடியுமா? அப்படிங்கிறதும் எங்களுக்கு சந்தேகமாகத்தான் இருக்கு..
சரி அப்ப அடுத்த பிரதமர் வேட்பாளர் யாருன்னுதான் கேட்பீங்க? மோடி டீம்ல இருக்கிற அமித்ஷா, இப்பவே 75 வயதாகும் ராஜ்நாத் சிங் இவங்க எல்லாமே ஆர்.எஸ்.எஸ் லிஸ்ட்ல இல்லை. நிதின் கட்காரி பேரு அடிபட்டாலும் அவருக்கு இப்பவே 69 வயசு.. அவரும் நான் பிரதமர் வேட்பாளர் ரேஸில் இல்லைங்கிறார்..
இப்போதைக்கு ஆர்.எஸ்.எஸ்.-ன் தேர்வாக இருக்கிறது மத்திய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷிதான். சின்ன வயசில் இருந்தே தீவிரமான ஆர்.எஸ்.எஸ்.. காங்கிரஸும் ஜனதா கட்சியும் கோலோச்சுன கர்நாடகாவுல பக்காவா ஸ்கெட்ச் போட்டு பாஜகவை வளர்த்து ஆட்சியில உட்கார வெச்சுதல பிரகலாத் ஜோஷியின் பங்களிப்பு ரொம்ப முக்கியமானது. ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கைகளில்ல இம்மி கூட மாறாதவர். அதனால் அவருதான் எங்களோட அடுத்த பிரதமர் வேட்பாளராக இருப்பார்.
இது ஒரு பக்கம் இருக்கட்டும்.. எங்களுக்கு வந்த கிரவுண்ட் ரிப்போர்ட்ஸ் எல்லாமே, இப்ப இந்தியா டுடே சர்வே சொல்லி இருக்குது இல்லையா? மாநில கட்சிகள் அதிகமான இடங்களை வாங்கும்னு.. அதுதான் எங்களுக்கும் வந்த ரிப்போர்ட்.
நாங்க தனிப் பெரும்பான்மையுடன் அல்லது மறுபடியும் கூட்டணி ஆட்சியை 2029-ல் அமைக்க முடியாம போனா அதுக்காக சும்மா இருந்துட முடியுமா? அதிகமான இடங்களை மாநில கட்சிகள் வாங்குனா என்ன செய்யுறதுன்னு இப்பவே அதுக்கும் ஒர்க் பண்ணிகிட்டுதான் இருக்கிறோம். ஏன்னா, எந்த சூழ்நிலையிலும் காங்கிரஸ் கட்சி அட்வான்டேஜ் எடுத்துகிட்டு தலையை தூக்கிடவே கூடாது அப்படிங்கிறதுல உறுதியா இருக்கிறோம்.
அதனால மாநில கட்சிகள் அதிக இடம் வாங்குனா.. அவங்க ஆட்சி அமைக்க பாஜக தாராளமா ஆதரவு தரும். இன்னும் சொல்லப் போனா நாங்க விரும்புறவங்கதான் அடுத்த பிரதமராகவும் இருப்பார்”ன்னு ”பெரிய ஸ்கெட்ச்” பற்றி மறைமுகமான சொல்கிறார்கள்.

2029-ல் காங்கிரஸை கழற்றிவிட்டு தவெக தனியாக நிற்கப் போகுது என அவர்களது கட்சி ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் சொல்வதாக கூறுகிறார்கள். ஆனால் “ஜோசப்”விஜய்யை பாஜக எப்படி ஏற்றுக் கொள்ளும் என்கிற கேள்வி இருக்கிறது. இதை பத்தி டெல்லியில சீனியர் எம்.பி.க்கள்கிட்ட பேசியபோது, “நீங்க சொல்றது சரிதான்.. பாஜக தான் ஆட்சி அமைக்க முடியாமல் போனால் தனது ஆதரவில் ஒரு ஆட்சியை உருவாக்கத்தான் முயற்சிக்கும். காங்கிரஸை ஒழிச்சுகட்டனும்தான் நினைக்கும்.
எங்களுக்கு கிடைச்ச தகவல்கள் என்னவென்றால், “சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவிடம் பாஜக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். “நீங்க ஏன் பிரதமர் வேட்பாளராக” நிற்கக் கூடாது? “நீங்க அப்படி இறங்குனா நாங்க முழு ஆதரவு தர்றோம்”- என அகிலேஷிடம் பாஜக பேசியிருக்கிறது.
அத்துடன், “காங்கிரஸுடன் நீங்க கூட்டணி சேர வேண்டாம்.. காங்கிரஸை கழற்றிவிட்டு தனித்தே நில்லுங்க..” எனவும் அகிலேஷ் யாதவுக்கு அட்வைஸ் செய்திருக்கிறார்கள் பாஜக தலைவர்கள். அகிலேஷ் யாதவும், “ இந்தியாவிலேயே ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என அறிவித்தது திமுகதான்.. ஸ்டாலின்தான்.. திமுகவின் முழு சப்போர்ட் காங்கிரஸுக்கு இருந்ததால அந்த கட்சியால அகில இந்திய அளவில் தலைவர் ரோலை தக்க வைக்கவும் முடிஞ்சது. இந்தியா கூட்டணி என்கிற ஒரு ப்ரண்ட்டை லீட் பண்ணவும் வாய்ப்பு கிடைச்சது. ஆனா அப்படிப்பட்ட திமுகவின் முதுகில குத்திட்டாரு ராகுல் காந்தி. காங்கிரஸ் கட்சி நிச்சயமா நம்பகமாகன கட்சியாக இருக்கவே இருக்காது அப்படிங்கிறதுக்கு திமுகதான் சாட்சி..
நீங்க சொல்ற பிரதமர் வேட்பாளர் பத்தி நாங்களும் ஸ்டடி பண்றோம்” என பதில் சொல்லியிருக்கிறார்.. இதையே சில மாநில கட்சிகளின் தலைவர்களிடமும் அகிலேஷ் யாதவ் சொல்லி இருக்கிறார்.
