https://republictn.com/

தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், மே மாதத்திற்கான ரூ.1000 தொகை இன்று ஒரு கோடியே 31 லட்சம் பெண்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. புதிய முதலமைச்சர் பொறுப்பேற்ற பின்னர் மிகக் குறுகிய காலத்திலேயே இந்தத் தொகை வழங்கப்பட்டிருப்பது, பயனாளிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, 60 வயதிற்கு மேற்பட்ட பெண்களின் எண்ணிக்கையை கணக்கிடும் பணியையும் தமிழக அரசு தொடங்கியுள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை மறுசீரமைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது, தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 31 லட்சம் பெண்கள் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர். மேலும், சமூக பாதுகாப்பு நிதி உதவி உள்ளிட்ட பல்வேறு சமூக நலத் திட்டங்களின் கீழ் உதவித்தொகை பெற்று வரும் 60 வயதிற்கு மேற்பட்ட பெண்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

தேர்தல் அறிக்கையில், 60 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.2500 உரிமைத்தொகையும், 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மாதம் ரூ.3000 உதவித்தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை நடைமுறைப்படுத்தும் நோக்கில், தற்போது தமிழக அரசு பயனாளிகளின் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்த கணக்கெடுப்பு பணி நிறைவடைந்த பின்னர், 60 வயதிற்கு மேற்பட்ட தகுதியான பயனாளிகள் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டு, மாதம் ரூ.3000 உதவித்தொகை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago