https://republictn.com/

தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல், ஊழல் ஒழிப்பு, மதுவிலக்கு மற்றும் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க அரசின் செயல்பாடுகள் குறித்து மூத்த அரசியல் விமர்சகர் பழ.கருப்பையா பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

விசிக, கம்யூனிஸ்ட் கூட்டணி மாற்றம் ஏன்?
த.வெ.க அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவளிப்பது குறித்துப் பேசிய பழ.கருப்பையா, “அவர்கள் பழைய கூட்டணிக் கட்சியான திமுக முற்றிலுமாகத் தேறாது எனக் கைவிட்டுவிட்டு இங்கு வந்துள்ளார்கள். திமுக ஆட்சியில் தங்களுக்கு எந்தவித அதிகாரமும், சுதந்திரமும் கிடைக்கவில்லை. ஆனால் புதிய முதலமைச்சர் விஜயிடம் தங்களால் ஆளுமை செலுத்த முடியும், உரிமையோடு தங்களுக்குத் தேவையான பதவிகளைக் கேட்டுப் பெற முடியும் என்ற நம்பிக்கையில்தான் இங்கு வந்து ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

விஜயின் நேர்மையும்… தப்பான நடவடிக்கைகளும்
“விஜய் ஊழலை ஒழிக்க நினைப்பதை நான் மனதாரப் பாராட்டுகிறேன். திமுக போன்ற ஊழல் கட்சிகள் ஒழிய வேண்டும் அதே சமயம் விஜயின் தற்போதைய நடவடிக்கைகள் நேர்மையானதாக இல்லை. லஞ்சம் வாங்காமல் இருப்பது மட்டுமே நேர்மை கிடையாது. விஜய் தப்பான மனிதர்களைத் தன் பக்கத்தில் சேர்த்துக் கொள்கிறார். ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அதிமுக-வினரையும், விஜயபாஸ்கர் போன்றவர்களையும் கட்சியில் சேர்ப்பது தவறான முன்மாதிரி. ஜான் ஆரோக்கிய சாமி, கிருஷ்ணா ரெட்டி, கர்நாடகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை டெல்லி பிரதிநிதியாக ஆக்கியது போன்ற முட்டாள்தனமான முடிவுகளை விஜய் எடுத்து வருகிறார்.

தமிழகத்தின் ஊழல் நிலைமை
அரசுத் துறைகளில், குறிப்பாகப் பத்திரப் பதிவு மற்றும் கட்டிட அனுமதிகளுக்குச் சதுர அடிக்கு 25 ரூபாய் வரை ஆளும் தரப்பினரும், ஐஏஎஸ் அதிகாரிகளும் கூட்டுச் சேர்ந்து கொள்ளையடிக்கின்றனர். நம் நாட்டின் ஊழல் வழக்குகள் 15 ஆண்டுகளுக்கு மேல் இழுத்தடிக்கப்படுகின்றன. எந்த மந்திரியும் தண்டிக்கப்படுவதில்லை. சவுதி அரேபியா போன்ற கடுமையான சட்டங்களைக் கொண்டு வந்து, ஊழல்வாதிகளை நடுத்தெருவில் நிறுத்தித் தண்டித்தால் ஒழிய இதை மாற்ற முடியாது.

மதுவிலக்கு சாத்தியமா?
“மதுவிலக்கு சாத்தியமில்லை என்று சொல்வது பொய். ராஜாஜி காலத்தில் இருந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக மது இல்லாத தமிழகம் இருந்திருக்கிறது. குடிப்பழக்கத்தால் ஏழைக் குடும்பங்களின் பெண்களின் அழுகுரல் கேட்கிறது. சசிகலா, டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் போன்ற அரசியல்வாதிகளே மது உற்பத்தி ஆலைகளை நடத்தி, கடந்த 30 ஆண்டுகளாக மாற்றி மாற்றி லஞ்சம் கொடுத்துக் கொள்ளையடித்தனர்.

பழ.கருப்பையாவின் வார்னிங்
“விஜய்க்கு அரசியல் அறிவோ, ஆளுமையோ, அனுபவமோ போதாது என்றாலும் மக்கள் அவருக்கு வாக்களித்து விட்டார்கள். முதலமைச்சர் பதவி என்பது அள்ளிக் கொடுக்கும் சலுகை அல்ல. அது ஒரு மிகப்பெரிய பொறுப்பு. தமக்கு எதுவும் புரியாத சூழலில், சுற்றி இருக்கிற முட்டாள்களை எல்லாம் பதவியில் அமர்த்தி இதே போன்ற மடத்தனமான ஆட்சியை விஜய் தொடர்ந்தால், மக்கள் சலிப்படைந்து மீண்டும் ஸ்டாலினையே கொண்டு வந்து ஆட்சியில் அமர்த்தி விடுவார்கள். அப்படி நடந்தால், இந்த நாட்டில் ஊழல் என்பது நிரந்தரமாக நியாயப்படுத்தப்பட்டுவிடும்” என்று மிகக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago