Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளை பொது–தனியார் பங்களிப்பு (PPP) முறையில் தனியாருக்கு மாற்றும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தூய்மைப் பணியாளர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆவடி, தாம்பரம், வேலூர், ஓசூர், கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், மதுரை, திருச்சி, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய 12 மாநகராட்சிகளில் குப்பை சேகரிப்பு மற்றும் போக்குவரத்து பணிகளை தனியாருக்கு வழங்க அரசு சாத்தியக்கூறு அறிக்கை அடிப்படையில் டெண்டர் கோரியுள்ளது.

இந்த ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் வேலை பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக தூய்மைப் பணியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தூய்மைப் பணிகள் தனியாருக்கு மாற்றப்பட்டால் குறைந்தபட்ச ஊதியம் மறுக்கப்படும் நிலை உருவாகும் என்றும், சமூகப் பாதுகாப்பும் வேலைப் பாதுகாப்பும் பறிபோகும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதனால், ஒப்பந்த முறையில் வைத்திருக்காமல் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வார விடுமுறை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் எழும்பூர் சித்ரா திரையரங்கம் முதல் ராஜரத்தினம் மைதானம் வரை ‘உழைப்போர் உரிமை இயக்கம்’ சார்பில் நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் பேரணியாக சென்றனர். பேரணியில் அவர்கள் தங்கள் உரிமைகள் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

தேர்தல் வாக்குறுதிகளில் பணி நிரந்தரம் வழங்கப்படும் என கூறப்பட்ட நிலையில், தற்போது பணிகளை தனியாருக்கு மாற்றும் நடவடிக்கை சமூக நீதிக்கு எதிரானது என போராட்டக் குழுவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த முடிவை அரசு உடனடியாக கைவிடாவிட்டால் மாநிலம் முழுவதும் தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் என தூய்மைப் பணியாளர் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 weeks ago at 4 weeks ago