Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் திடீரென நீட் தேர்வுக்கு எதிராக முழக்கமிட்ட பாடகர் அறிவுவை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் நீட் தேர்வு தொடர்பான வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளையும் போராட்டக்காரர்கள் முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்திலும் நீட் தேர்வுக்கு எதிரான எதிர்ப்புகள் மீண்டும் தீவிரமடைந்து வருகின்றன. இன்று சென்னை தலைமைச் செயலக வளாகத்திற்கு திடீரென வந்த பாடகர் அறிவு, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும், தலைமைச் செயலகத்திற்குள் செல்ல முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  நீட் வினாத்தாள் லீக் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது.. சிபிஐ அதிரடி

அவரது திடீர் போராட்டம் அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

Republic Tamil

பாடகர் அறிவு, சமூக வலைதளங்களில் ‘தெருக்குறள் அறிவு’ என்ற பெயரில் தனது பாடல்களின் மூலம் பரவலாக அறியப்படுபவர். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சாரப் பாடலான’கொள்கைப் பாடலை’ பாடியதன் மூலமும் கவனம் பெற்றிருந்தார்.

அவர் கைது செய்யப்பட்ட சம்பவத்தின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் கடந்த பல ஆண்டுகளாக அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் மற்றும் சமூக அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. சட்டமன்றத்திலும் நீட் தேர்வுக்கு எதிராக பலமுறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இருப்பினும், உச்சநீதிமன்ற உத்தரவுகள் மற்றும் மத்திய அரசின் கொள்கையின்படி நீட் தேர்வு நாடு முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்க  "அதிகார பலத்தால் அடக்காதே!" டெல்லியில் திரண்ட மாணவர்கள்.. களத்தில் குதித்த மஞ்சு வாரியர்!
Republic Tamil

அண்மையில் நீட் தேர்வு தொடர்பாக எழுந்த வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, மீண்டும் நாடு முழுவதும் எதிர்ப்பு குரல்கள் வலுத்துள்ளன. டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற நிலையில், பேரணி, மறியல், கைது மற்றும் பதற்றமான சூழல்கள் உருவாகியிருந்தன.

அதன் தொடர்ச்சியாகவே, தமிழகத்திலும் நீட் எதிர்ப்பு குரல் புதிய வடிவம் பெற்று வருகிறது என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்திலேயே பாடகர் அறிவு திடீரென நீட் தேர்வுக்கு எதிராக முழக்கமிட்டது, தமிழகத்தில் நீட் தொடர்பான அரசியல் மற்றும் சமூக விவாதங்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், பாடகர் அறிவு கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்த காணொளிகள் சமூக வலைதளங்களில் பரவி, பல்வேறு தரப்பினரிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 months ago at 3 months ago