காலியாக உள்ள பல லட்சம் அரசு பணியிடங்களில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கோரி, திருவாரூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஆனந்த் தலைமையில் வேலையின்மைக்கு எதிராக கரப்பான் பூச்சி வேடமணிந்து பேரணி நடைபெற்றது.
இந்த பேரணி திருவாரூர் நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.
பேரணியில் பங்கேற்றவர்கள், கரப்பான் பூச்சி படம் கொண்ட முகமூடிகளை அணிந்து, வேலை இல்லாத இளைஞர்களை “கரப்பான் பூச்சி” என குறிப்பிட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், பல லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில், ஒன்றிய அரசு இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்தப் பேரணியில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் முருகையன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஆனந்த், மாவட்டச் செயலாளர் பாலா, மாவட்ட துணை தலைவர் விஜய், ஒன்றியச் செயலாளர் இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
