https://republictn.com/

தமிழ் திரையுலகின் வளர்ச்சிக்கும், லஞ்ச ஒழிப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், இயக்குநர் சீனு ராமசாமி, தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கவனத்திற்கு ஆறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் தரமான வளர்ச்சிக்காக, கலைப்படங்களை பொதுமக்கள் எளிதில் பார்க்கும் வகையில் அரசு சார்பில் திரையரங்குகள் அமைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பாரம்பரிய மற்றும் பண்பாட்டுச் சிறப்புமிக்க இடங்களில் திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு ஆன்லைன் மூலமாக முன் அனுமதி வழங்கும் நடைமுறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும், இதன் மூலம் அனுமதி பெறும் செயல்முறையில் ஏற்படும் மறைமுகக் கையூட்டுகள் மற்றும் லஞ்சத்தை முழுமையாகத் தவிர்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

லண்டன் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் நடைமுறையில் உள்ளதைப் போல, பெரிய நட்சத்திர அந்தஸ்து இல்லாத சுயாதீன மற்றும் குறைந்த பட்ஜெட் திரைப்படங்களுக்கு தமிழக அரசும் சிறப்பு மானியம் வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேபோல், பள்ளிகளில் தொடக்கக் கல்வி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை “திரைப்பட ரசனைக் கல்வி” (Film Appreciation) என்ற பாடத்தை பாடத்திட்டத்தில் இணைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இன்றைய தலைமுறை குழந்தைகள் அதிக நேரத்தை மொபைல் போன்களில் செலவிடுவதால், தரமான சினிமாவை புரிந்துகொண்டு ரசிக்கும் திறனை வளர்க்க இத்தகைய கல்வி அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கருத்தை மையமாகக் கொண்டே, அண்மையில் அவர் எழுதிய “சினிமாவின் ஆன்மா – சினிமா ரசனைக் கல்வியும் இன்னும் சில கட்டுரைகளும்” என்ற நூலிலும் திரைப்பட ரசனைக் கல்வியின் அவசியத்தை விரிவாக எடுத்துரைத்துள்ளார்.

அரசுத் திரையரங்குகள் அமைக்க வேண்டும் என்ற தனது கோரிக்கைக்கு, கேரள அரசின் கேரளா மாநில திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (KSFDC) நடத்திவரும் திரையரங்குகள் சிறந்த முன்னுதாரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அரசு நடத்தும் திரையரங்குகளில் நல்ல கதையம்சம் கொண்ட சிறு பட்ஜெட் திரைப்படங்கள் எளிதில் திரையிடப்படுகின்றன. அதேபோன்ற திட்டம் தமிழகத்திலும் செயல்படுத்தப்பட்டால், திரையரங்குகள் கிடைக்காமல் முடங்கும் பல தரமான திரைப்படங்களுக்கு புதிய வாய்ப்பு உருவாகும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் தமிழ் சினிமாவின் பெருமையை உயர்த்தும் நோக்கில், உலகத் தமிழ்ச் சங்க மாநாடுகளைப் போல “உலகத் திரைப்பட மாநாடு” ஒன்றை தமிழக அரசு நடத்த வேண்டும் என்ற புதிய யோசனையையும் அவர் முன்வைத்துள்ளார்.

இதன் மூலம் உலகத் தரம் வாய்ந்த திரைப்படப் படைப்பாளிகளும், தமிழ் திரைப்படக் கலைஞர்களும் ஒரே மேடையில் சந்தித்து கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு உருவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நலிவடைந்த கலைஞர்கள் மற்றும் திரைப்பட இயக்குநர் சங்க உறுப்பினர்களுக்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள வீட்டு வசதித் திட்டங்களை விரைவுபடுத்தி, தகுதியான அனைவருக்கும் வீடுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசியல் ரீதியாகவும் தனது கருத்தை பதிவு செய்துள்ள இயக்குநர் சீனு ராமசாமி, “லஞ்சம் மற்றும் கையூட்டு போன்ற சகஜமாகிப் போன நடைமுறைகளை முழுமையாக ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்தியுள்ள அரசு” என்று குறிப்பிட்டு, முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக அரசின் செயல்பாடுகளை பாராட்டியுள்ளார்.

லஞ்ச ஒழிப்போடு மட்டுமல்லாமல், கலை மற்றும் திரைப்படத் துறையிலும் கொள்கை ரீதியான மாற்றங்களை புதிய அரசு செயல்படுத்தும் என்ற நம்பிக்கையையும் அவர் தனது கோரிக்கையின் இறுதியில் வெளிப்படுத்தியுள்ளார்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago