Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Veeramani

84 வயதான பிரபல தொழிலதிபர் ஆர். வீரமணி மீது வந்திருக்கும் பாலியல் குற்றச்சாட்டு தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 1971-ல் வழக்கறிஞர் தொழிலை விட்டுவிட்டு, வெறும் ₹60,000 முதலீட்டில் தனது சகோதரர்களுடன் இணைந்து கிரானைட் தொழிலில் இறங்கியவர் வீரமணி. பின்னர் Gem Granites நிறுவனத்தை மிகப்பெரிய நிறுவனமாக வளர்த்தவர். தொழில்துறையில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர். அப்படிப்பட்ட ஒருவர்தான் இன்று ஒரு சிறுமி தொடர்பான POCSO வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த வழக்கின் பின்னணி இன்னும் அதிர்ச்சியானது. 2025 அக்டோபரில் ஒரு குழந்தைகள் நல ஆர்வலர் காவல்துறையிடம் ஒரு பென்டிரைவைக் கொடுத்தார். அதில் ஒரு வயதான நபர் சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தும் காணொளி இருந்ததாக கூறப்பட்டது.

விசாரணை நடைபெற்றது. ஆனால் ஆரம்பகட்ட விசாரணைக்குப் பிறகு, வழக்கை முடித்துவைக்க காவல்துறை முயன்றது. அந்தக் காணொளி 2019-ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகவும், அதில் இருந்த சிறுமியின் அடையாளமும் இருப்பிடமும் தெரியவில்லை என்றும் கூறி “மேல் நடவடிக்கை தேவையில்லை” என்ற அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இங்கேதான் மிக முக்கியமான திருப்பம் ஏற்பட்டது.

இதையும் படியுங்க  "வியாசர்பாடியில் நடுங்கவைத்த நள்ளிரவு கொடூரம்! வாலிபர் முகம் சிதைத்துக் கொலை: 3 பேர் சிக்கினார்களா? பின்னணி என்ன?"

2026 ஆகஸ்ட் 19 அன்று POCSO சிறப்பு நீதிமன்றம் அந்த முடிவை ஏற்க மறுத்தது. “இறுதி அறிக்கை ஏற்கப்படவில்லை. மேலும் விசாரணை நடத்த வேண்டும்” என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்குப் பின்னர் காவல்துறை மீண்டும் விசாரணையைத் தொடங்கியது. இப்போது காவல்துறை கூறுவது வேறு.

காணொளியில் இருப்பவர் வீரமணிதான் என்று அடையாளம் காணப்பட்டதாகவும், தேனாம்பேட்டையில் அவர் வாடகைக்கு எடுத்திருந்த வீட்டை அவரது தொழில் தொடர்புடைய மகேந்திர சிம்ஹா மற்றும் அவரது மனைவி சாந்தி ஆகியோர் நிர்வகித்ததாகவும், அங்கு ஒரு சிறுமி வேலை செய்து வந்ததாகவும், வீரமணி அந்த வீட்டிற்கு அடிக்கடி சென்றதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

வீரமணி, மகேந்திர சிம்ஹா, சாந்தி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்தச் சிறுமி ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டாரா என்பதையும் விசாரிக்க காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதனால்தான் சமூக ஊடகங்களில் சிலர் இந்தச் சம்பவத்தை “தமிழக எப்ஸ்டீன்” என்று அழைக்கத் தொடங்கியுள்ளனர்.

இதையும் படியுங்க  அரசு அலுவலகத்தை ஈஷா யோகா கிளையாக மாற்றிய சிவகங்கை மருத்துவ அதிகாரி..! அப்பட்டமான சட்ட மீறல்..!

ஆனால் ஒரு விஷயத்தை தெளிவாகச் சொல்ல வேண்டும். அமெரிக்காவின் ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கைப் போல இங்கும் ஒரு மிகப்பெரிய பாலியல் குற்ற வலையமைப்பு இருந்தது என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை. அப்படி ஒரு முடிவுக்கு இப்போதே நாம் வரக்கூடாது.

ஆனால்… ஒரு சிறுமி. ஒரு தனி வீடு. அங்கு செல்லும் ஒரு செல்வாக்கு மிக்க தொழிலதிபர். அந்த வீட்டை நிர்வகிக்கும் ஒரு தம்பதி.
ஒரு காணொளி. அதன் பின்னர் மூடப்பட முயன்ற விசாரணை. அதை ஏற்க மறுத்த நீதிமன்றம். மீண்டும் தொடங்கப்பட்ட விசாரணை. இறுதியில் மூன்று கைது. இந்த வரிசையில் பதில் கிடைக்க வேண்டிய கேள்விகள் ஏராளம்.

அந்தச் சிறுமி யார்? அவள் அந்த வீட்டிற்கு எப்படி வந்தாள்? அவளுக்கு வேறு யாராவது பாலியல் தொல்லை கொடுத்தார்களா? இதில் இன்னும் எத்தனை பேர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்? இந்த விவகாரம் ஏன் முதலில் முடித்துவைக்க முயற்சிக்கப்பட்டது? இதில் இன்னும் காப்பாற்றப்பட முயற்சிக்கப்பட்டவர்கள் யார்? யார்?

இதையும் படியுங்க  மர்ம சூட்கேஸ்.. சிதறிய தலை.. சென்னை பெரம்பூரில் அரங்கேறிய பகீர் கொலை! யார் அந்த நபர்?

காணொளி உண்மையானதா? அதில் இருப்பவர் உண்மையிலேயே வீரமணிதானா? இந்த எல்லா கேள்விகளுக்கும் விடை நீதிமன்றத்தின் முன் வர வேண்டும். ஒரு குழந்தையின் கண்ணீருக்கு முன்னால் எந்தப் பணமும், எந்தப் பதவியும், எந்த வயதும், எந்த சமூக அந்தஸ்தும் பெரியதல்ல. அதே நேரத்தில், கைது என்பது குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டது என்று பொருளல்ல. உண்மை எதுவாக இருந்தாலும் அது முழுமையாக வெளிவர வேண்டும். குற்றம் செய்தவர் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

ஒருவேளை இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால் இன்னும் பெரிய வலையமைப்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தால்… அது ஒரு தனிநபரின் குற்றமாக மட்டும் இருக்காது. அது நமது சமூகத்தின் மனசாட்சிக்கே விடப்படும் மிகப்பெரிய கேள்வியாக இருக்கும். அதனால்தான் இந்த வழக்கின் அடுத்தடுத்த விசாரணையை தமிழகம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

34 minutes ago at 34 minutes ago