”பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதற்காக பாகிஸ்தானை கண்டிக்கிறோம்.பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர்களுக்கு சிந்து நதியின் நீர் சென்றடைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அனுமதிக்காது” என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டித்தார்.
ஹைதராபாத்தில் பாஜக தெலங்கானா பிரிவு ஏற்பாடு செய்திருந்த அறிவுசார் மாநாட்டில் பேசிய ராஜ்நாத் சிங், ”அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் மொழியைத் தங்கள் சொந்த மொழியில் புரிந்து கொள்ளாதவர்களுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பதை ‘ஆபரேஷன் சிந்துர்’ மூலம் அரசு உலகிற்குக் காட்டியுள்ளது.
இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தால், பாகிஸ்தானுக்கான உணவு, தண்ணீர் விநியோகத்தை நிறுத்திவிடுவோம் என்று அரசாங்கம் தெளிவாகக் கூறியுள்ளது. பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தியபோது, கண்ணீரால் கண்கள் வறண்டவர்கள் எங்களிடமிருந்து தண்ணீரை எதிர்பார்க்கக் கூடாது என்று கூறினோம். பயங்கரவாதிகளின் ஆதரவாளர்களுக்கும், மனிதகுலத்தின் எதிரிகளுக்கும் சிந்து நதியின் நீர் சென்றடைவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
உலகில் இந்தியா ஒரு “நம்பகமான கூட்டாளியாக” உருவெடுத்துள்ளது. பேரிடர்களை எதிர்கொள்ளும் நாடுகளுக்கு எப்போதும் உதவியுள்ளது. கோவிட்-19 பெருந்தொற்றின் போது பல நாடுகளுக்கு இந்தியா உதவி வழங்கி இந்தியா உலகம் முழுவதும் ஒரு உலக நண்பனாகக் கருதப்படுகிறது.
தடுப்பூசிகள் மட்டுமல்ல, பிரம்மோஸ் ஏவுகணையும் நாட்டிடம் உள்ளது என்பதை இந்தியாவின் எதிரிகள் மறந்துவிடக் கூடாது. இந்தியாவின் பட்ஜெட்டில் உள்ள ஒவ்வொரு ரூபாயும் நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது. அரசுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை.
நாங்கள் அடுத்த தேர்தலைப் பற்றிக் கவலைப்படவில்லை, மாறாக அடுத்த தலைமுறையைப் பற்றிக் கவலைப்படுகிறோம். எங்கள் நோக்கங்கள் முற்றிலும் தெளிவானவை. எங்கள் வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டது. அந்த ஆட்சிக் காலத்தில், கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் புதிய முறைகேடுகள் பற்றிய செய்திகள் வெளிவந்தன” என்றும் அவர் கூறினார்.
