கேரள முன்னாள் முதலமைச்சர் பினராய் விஜயன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கொச்சி கனிமவள மோசடி வழக்கு தொடர்பாக, முன்னாள் முதலமைச்சர் பினராய் விஜயன் வீடு உட்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த வழக்கில், கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட்டைல்ஸ் லிமிடெட் நிறுவனம், பினராய் விஜயன் மகன் வினோத் விஜயனுக்கு சொந்தமான எக்சாலாஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனத்திற்கு 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் ரூ.1.72 கோடி சட்டவிரோதமாக வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை மேற்கொண்ட நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி, சிஎம்ஆர்எல் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை கேரள உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, இன்று இந்த சோதனைகள் நடைபெற்றுள்ளன.
சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான விசாரணைக்காக, கடந்த 2024ஆம் ஆண்டு அமலாக்கத்துறை பண மோசடி வழக்கை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
