சென்னை திருவொற்றியூரில் பிளஸ் 2 மாணவன் தனுஷ் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவனின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆறுதல் கூறுவதற்காக வந்த அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் ராஜ்மோகன் ஆகியோரை பொதுமக்களும் உறவினர்களும் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, ஆவேசமடைந்த உறவினர்கள், “எங்கள் பிள்ளைகளுக்கும் இதே நிலைமைதான் ஆகுமா, ஆதவ் அண்ணா? சொல்லிவிட்டுப் போங்கள் அண்ணா. இங்கே என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. அரசாங்கம் என்னதான் செய்கிறது?” என சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.
பொதுமக்களும் தொடர்ந்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய நிலையில், அதற்கு பதில் அளிக்காமல் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் ராஜ்மோகன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், “அமைச்சர் வந்தார், நின்றார், போனார். இத்தனை பேர் கேள்வி கேட்கிறோம். எதற்காவது பதில் சொன்னாரா?” என தங்களது ஆதங்கத்தையும் ஆவேசத்தையும் ஊடகங்களிடம் வெளிப்படுத்தினர்.
மேலும், திருவொற்றியூர் பகுதியில் நிலவும் கஞ்சா புழக்கம் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்தும் பொதுமக்கள் அமைச்சர்களிடம் கேள்வி எழுப்பினர். குறிப்பாக, பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அப்பகுதி மக்கள் தங்களது அச்சத்தை வெளிப்படுத்தினர்.
“அமைச்சர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் காவல்துறையினர், பள்ளிகளிலும் பாதுகாப்பு வழங்கியிருந்தால் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்திருக்காது” என மாணவனின் உறவினர்கள் வேதனை தெரிவித்தனர்.
மாணவன் தனுஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 12 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 16 முதல் 17 வயதுடைய அந்த சிறுவர்களை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், சில மாணவர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
கொலை செய்யப்பட்ட தனுஷின் நண்பரான ஜெய்கேஷுக்கும், அதே பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் தனுஷ்குமார் என்பவருக்கும் இடையே, “யார் சீனியர்?” என்ற விவகாரம் தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் தனுஷ் தனது நண்பர் ஜெய்கேஷுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். இதையடுத்து பள்ளி ஆசிரியர்கள் தலையிட்டு, மாணவர்களை அழைத்து கண்டித்து சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளனர்.

இந்த நிலையில், சம்பவத்தன்று வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்து மாலை சுமார் 4.15 மணியளவில் தனுஷ் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்துள்ளார். அப்போது தனுஷ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள், தனுஷை திருவொற்றியூர் பேருந்து நிலையத்திற்குப் பின்னால் உள்ள வெட்டவெளிப் பகுதிக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
அங்கு வைத்து அந்த மாணவர் கும்பல் தனுஷை கடுமையாகத் தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்குதலில் படுகாயமடைந்த தனுஷ் மயங்கி விழுந்ததுடன், அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த மாணவர் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், தனுஷை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து திருவொற்றியூர் போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் தொடர்புடைய 12 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, திருவொற்றியூர் தாங்கல் பகுதியில் இரவு நேரங்களில் இளைஞர்கள் கும்பல் கும்பலாக நின்று ஆங்காங்கே கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கஞ்சா புழக்கத்தைத் தடுக்க காவல்துறையினர் போதிய கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவதில்லை என்றும், இதுகுறித்து தட்டிக் கேட்கும் பொதுமக்களுக்கும் போதிய பாதுகாப்பு இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
“போதை ஒழிப்பு நடவடிக்கைகள் எல்லாம் வெறும் கண்துடைப்புதானா?” எனவும் பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். மேலும், “எதை நம்பி எங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது? வெளியே பெண் பிள்ளைகளை அனுப்பக்கூட முடியவில்லை. பெரியவர்கள்கூட வெளியே செல்ல பயமாக இருக்கிறது” என ஒருவர் தனது அச்சத்தை வெளிப்படுத்தினார்.

திருவொற்றியூர் தாங்கல் முதல் வசந்தநகர், ராஜா கடை உள்ளிட்ட பகுதிகளில் குறிப்பாக இரவு நேரங்களில் பல்வேறு கும்பல்கள் ஆங்காங்கே நிற்பதாகவும், அங்கு சிறுவர்கள் நடமாடும் சூழலில் போலீஸ் கண்காணிப்பு போதுமானதாக இல்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
ஒரு பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படிக்கும் நிலையில், பள்ளி வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போதிய காவல்துறை பாதுகாப்பு இல்லாததே இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணமாக இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்டதாகக் கூறப்படும் ஒரு சாதாரண மோதல், இறுதியில் மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவமாக மாறியிருப்பது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவனின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் உறவினர்களும் பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.
மாணவன் தனுஷின் மரணத்திற்கு நீதி கேட்டு, துக்கத்தில் இருந்த அவரது பெற்றோர்களும் உறவினர்களும் அமைச்சர்களை முற்றுகையிட்டு கேள்வி எழுப்பிய சம்பவம் தற்போது சமூக வலைதளங்களிலும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
