Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

திருப்பத்தூர் பேருந்து நிலையத்தின் அவலங்களையும், ஆக்கிரமிப்புகளையும், அதிகாரிகளின் அலட்சியத்தையும் பார்க்கையில் நெஞ்சு விம்முகிறது. குடிநீர் தொட்டியைச் சுற்றி சாராய பாட்டில்கள்… போலீஸ் பூத் முன்பே அட்டகாசம்.. திருப்பத்தூர் பஸ் நிலையத்தை சுத்துப்போட்ட ஆக்கிரமிப்பு கும்பல் என அத்தனை அட்டூழியங்களும் நடக்கின்றன. “Republic தமிழ்நாடு செய்தியாளரின் நேரடி விசிட்டில் அங்கு அரங்கேறி வரும் அத்துமீறல்களை இங்கு அப்படியே பதிவு செய்கிறோம்…

திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்திற்கு நாளொன்றுக்கு ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இப்பேருந்து நிலையத்திலிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களுக்கும் தினமும் செல்லும் நூற்றுக்கணக்கான பேருந்துகளில் ஆயிரக்கணக்கான பயணிகளும், பொதுமக்களும் வந்து செல்கிறார்கள்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மாவட்ட தலைநகரான திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில். சாக்கடை, கழிவுகள் தேங்கியும் , குப்பைகள் நிறைந்தும் குடிநீர் தொட்டியை சுற்றி சாராய பாட்டில்களும் பொதுக்கழிப்பிடங்கள் உள்ள பகுதிகளில் நகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிப்பதில்லை என பொதுமக்கள் மற்றும் இணைய இன்புளுயன்ஸர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

குற்றச்சாட்டு குறித்து நேற்றைய தினம் பேருந்து நிலையத்தை காண முடிவெடுத்து பேருந்து நுழைவு வாயிலில் நுழைய முற்பட்டோம். அப்போது கடும் போக்குவரத்து நெரிசலை உண்டாக்கி ஷேர் ஆட்டோக்கள் வழி விடாமல் வரிசைக் கட்டி நிறுத்தி வைத்திருந்தனர். நுழைவு வாயில் உள் பகுதியில் பூக்கடைகள் ஏராளமாய் ஆக்ரமித்திருந்தது.

பேருந்து நிலையத்தில் பயணிகள் இளைப்பாறி வந்த பழமையான ஆழ மரத்தை சுற்றி ஆக்கிரமிப்பு செய்து அதன் அடிப்பகுதியில் திடீர் கோவில்களை உருவாக்கி வசூலித்து கொண்டு இருந்தது ஒரு கும்பல்.

பேருந்துகள் உள்ளே செல்லும் வாயிலில் போலீஸ் பூத் தென்பட்டது அதில் போலீசார் அமர்ந்து இருந்தனர். அவர்கள் கண்முன்னே இந்த கொடுமைகள் நடந்தேறி வருவதைக் கண்டும் காணாமல் இருப்பதையும் காண முடிந்தது.

பேருந்து மைய்யப்பகுதியில் நூற்றுக்கனக்கான தள்ளுவண்டி கடைகள் முளைத்திருந்ததையும் அனுமதி பெறாத சில கடைகளும் இயங்கி வருவதை பார்க்க முடிந்தது. ‘பிஸி’யாக இருக்கும் இந்த பஸ் ஸ்டாண்டில், பஸ் நிறுத்த வேண்டிய ‘டிராக்’குகளில் டூவீலர்கள், ஆட்டோ , கார் போன்ற வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கிறது. பயணிகள் ஓய்வு அறையில் மனித கழிவுகளும், சாராய பாட்டில்களும் இருப்பதை இன்ஸ்டா இன்புளுயன்ஸ் ஒருவர் பஸ்நிலையம் அவலங்களை சுட்டி காட்டி பதிவிட்டிருந்ததை இன்றும் காண முடிந்தது.

சேலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் நிறுத்துமிடம் முழுவதும் திடீர் தள்ளுவண்டி கடைகள் ஆக்ரமித்துள்ளதால் பயணிகள் வழி முற்றிலுமாக முடக்கப்பட்டும், பேருந்துகள் நிறுத்த இடங்கள் இன்றி தவித்து வருகின்றனர். அதேபோல் குப்பம் மார்கமாக செல்லும் பேருந்துகள் நிறுத்தும் இடங்களிலும் 20-க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி கடை காரர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்கள் , இந்த ஊரில் தான் பஸ்நிலையத்திற்குள் ஆட்டோ ஸ்டாண்டு இருப்பதைக் காணலாம்

இதைவிட கொடுமையான நிகழ்வு ஒன்று அரங்கேற்றப்பட்டது. ஜூன்-24 அன்று போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாமை இதே பஸ்நிலையத்தில் நடத்தப்பட்டது. அதில் “மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் அக்க்ஷய் அனில் வாகரே ” இருவரும் பங்கேற்று பேருந்து நிலையம் ஆக்கிரமிப்பு கும்பல்களிடமே விழிப்புணர்வு நோட்டிஸ் வழங்கியதுதான் அந்த உச்சபட்ச கொடுமை. பஸ்நிலையம் ஆக்ரமிப்பு இருவர் கண்ணுக்கும் அப்பட்டமாக தெரிந்தும், கண்டு கொள்ளாமல் சென்றது ஆச்சரியமாகப் பார்க்க முடிந்தது .

அமாவாசை, பௌர்ணமி போன்ற முக்கிய நாட்களில், மக்கள் கூட்டம் புதிய பேருந்து நிலையத்தில் அதிகமாக கூடுவதால் இட நெருக்கடி ஏற்பட்டு பேருந்துகள் சிரமப்பட்டு இயக்கி வருகின்றனர். இதை சரி செய்ய பழைய பேருந்து நிலையத்தை நகர் பேருந்துகள் கொண்டு இயக்க மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்’’ என கோரிக்கை விடுத்தார் அங்கிருந்த ‘பஸ் புரோக்கர்’ ஒருவர்.

“இதுகுறித்து சமூக ஆர்வலர் விக்னேஷ்ஜி என்பவர் கூறுகையில் ” ”பேருந்து நிலையத்தில் நகராட்சியால் டெண்டர் விடப்பட்ட கட்டண கழிப்பிடத்தை ஒரு நாளைக்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உபயோகித்து வருகின்றனர்.

இந்த கட்டண கழிப்பிடத்தில் முறையான செப்டிக் டேங்க் இல்லாததால் அருகே உள்ள கால்வாயில் பைப் அமைத்து மனிதக் கழிவுகள் வெளியேறிக் கொண்டிருக்கிறது. இந்த கழிவு நீர், பேருந்துகள் வெளியே வரும் முக்கிய சாலையில் தேங்கியிருக்கும் இடத்தில் உணவகங்கள் இருக்கிறது. தேங்கிய கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி உணவு மீது மொய்த்து வருவதால் தொற்று நோய்கள் ஏற்படும் ஆபத்து உள்ளது.

சமூக ஆர்வலர் விக்னேஷ்ஜி

இங்குள்ள சைக்கிள் ஸ்டாண்டில் பகலுக்கு 20- ரூபாய் இரவுக்கு 20 – ரூபாய் என நாளொன்றுக்கு 40 – ரூபாய் கட்டண கொள்ளை அடித்து வருகின்றனர் இங்கெல்லாம் “திமுக, அதிமுக, தவெக என அரசியல் கட்சிகளில் செல்வாக்கு படைத்தவர்கள் மாமூல் வசூழிக்க கடைகளை மொத்தமாக குத்தகைக்கு எடுத்து அதிக தொகைக்கு உள்வாடகைக்கு விட்டு விடுகிறார்கள். நகராட்சி அனுமதிக்கப்பட்ட கடைகளின் அளவை மீறி நடைப்பாதை வரை கடைகள் விரிக்கப்பட்டிருக்கிறார்கள் ஆக்ரமிப்பு கடைக்கு முன்பாகவும் தள்ளுவண்டி கடைகள் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். அதற்கும் ஒரு வாடகை வசூலித்து வருகின்றனர்.

இந்த பஸ்நிலையத்தில் குறைந்தது 50- பயணிகள் அமரும் நாற்காலிகள் இருக்க வேண்டும். ஆனால், அப்படி நாற்காலி எங்கும் இல்லை. நாற்காலிகள் அமைத்தால் குடிகார கும்பல் மற்றும் பஸ்நிலையம் ஆக்ரமிப்பு கும்பல்கள் அதை எடுத்து வீசி விட்டு கடைகளை விரித்து விடுகிறார்கள். இவை அரசு அனுமதியோடு கடைகள் விரிக்கப்பட்டவையா? என்பது தெரியவில்லை.

பேருந்து நிலையத்துக்குள் விற்கப்படும் பொருள்களின் விலை எம்.ஆர்.பி விலையைவிட மிகவும் கூடுதலாக இருக்கின்றன. குறிப்பாக வாட்டர் பாட்டில் MRP விலையை விட கூடுதலாக விற்கிறார்கள். அந்த குடிநீர் பாட்டில்கள் கூட தரமற்ற “டுபாக்கூர் கம்பெனி “பெயரில் விற்கப்படுகிறது.

நகராட்சி கட்டணக் கழிப்பிடத்தில் நிர்ணயம் செய்த கட்டணத்தைவிட கூடுதலாக 10 முதல் 20 ரூபாய் வரை வசூலிக்கின்றனர். இந்த அடாவடி வசூலால் பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்” என்றவர் , பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட பேருந்து நிலையம் சிலரின் லாப நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுவதை அனுமதிக்கக் கூடாது. மாவட்ட ஆட்சித்தலைவர் நேரடியாக தலையிட்டு இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்” என்றார்.

புகார் குறித்து “திருப்பத்தூர் நகராட்சி கமிஷனரை தொடர்பு கொள்ள முயற்சித்தோம். அழைப்பை ஏற்காததால் சில அதிகாரிகளிடம் பேசும்போது” “சம்பந்தப்பட்ட புகார் குறித்து விசாரணை நடத்தி ஆக்கிரமிப்பை முற்றிலும் அகற்றவும் அனுமதி பெறாத கடைகள் மீது உடனே நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடுவதாக” கூறினார்கள்.

மக்கள் பாதுகாப்பிற்காக, புதிய, பழைய பேருந்து நிலையங்களை முறையாக சீரமைக்க மாவட்ட மற்றும் நகராட்சி நிர்வாகம் விரைந்து செயல்பட வேண்டும். புதிய ஆட்சியில் இடம் பெற்றுள்ள இந்த தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் கவனத்தில் கொண்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. சீரமைக்க முன் வருவார்களா? என பொருத்திருந்து பார்போம் .

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

முன்னணி ஊடகங்களில் 7 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC தமிழ்நாடு" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 weeks ago at 3 weeks ago