https://republictn.com/

விசிகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரான பனையூர் மு. பாபு, கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைமையிலான திமுக கூட்டணியில் எட்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது. எந்தக் கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தமிழக வெற்றி கழகம் ஆதரவு கட்சிகளின் துணையுடன் ஆட்சியை அமைத்தது.

திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதரவுடன் தமிழக வெற்றி கழகம் ஆட்சியை அமைத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திண்டிவனம் தொகுதியில் வெற்றி பெற்ற வன்னிய அரசு, தமிழக வெற்றி கழக அமைச்சரவையில் அமைச்சராக இடம்பெற்றுள்ளார். இருப்பினும், விசிக தலைவர் தொல். திருமாவளவன், “நாங்கள் தொடர்ந்து திமுக கூட்டணியில்தான் உள்ளோம்” என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில், விசிக துணைப் பொதுச்செயலாளராக இருந்த பனையூர் மு. பாபு, கட்சியிலிருந்து விலகுவதாக ஆறு பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “சமீப காலங்களில் கட்சித் தலைமையின் செயல்பாடுகளும் அரசியல் நிலைப்பாடுகளும் எனக்கு பெரும் வியப்பையும் வேதனையையும் அளிக்கின்றன. தெளிவான நிலைப்பாடு இன்றி அடிக்கடி மாறுபட்ட கருத்துகள் வெளியிடப்படுகின்றன.

நேற்று ஒரு நிலைபாடு, இன்று தொலைக்காட்சி நேர்காணலில் வேறு நிலைபாடு, நாளை செய்தியாளர் சந்திப்பில் மற்றொரு நிலைபாடு, பின்னர் சமூக வலைதளங்களில் முரண்பட்ட கருத்துகள் என தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “நேற்று வரை ஒரு நடிகரை ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் ஆதரவாளர் என கடுமையாக விமர்சித்தவர், இன்று அவரையே ஆதரிப்பது போன்ற நிலைப்பாடு எடுப்பது, இதுவரை சமரசமின்றி முன்னெடுத்துக் காட்டப்பட்ட கொள்கைகளிலும் கருத்தியலிலும் தடுமாற்றம் ஏற்பட்டுவிட்டதை காட்டுகிறது” என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, “கொள்கையிலும் அரசியல் நிலைப்பாட்டிலும் உறுதியாக இல்லாமல், அடிக்கடி கருத்து மாறி செயல்படும் தலைமையின் கீழ் இனி என்னால் பயணிக்க முடியாது. எனது மனசாட்சி அதனை ஏற்கவில்லை.

எனவே, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் முழுமையாக விலகுகிறேன்” என பனையூர் மு. பாபு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 days ago at 2 days ago