Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

சென்னை கோட்டூர்புரத்தில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனக் கூறி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள், தங்களுக்கு புதிதாக கட்டப்பட்ட குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்க வேண்டும் என நீண்டநாள்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தாங்கள் தற்போது வசிக்கும் பழைய குடியிருப்புகள் மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருப்பதாகவும், குடிநீர், வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லையெனவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

இதனைத் தொடர்ந்து நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்ட சுமார் 1800க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், சுமார் 195 வீடுகள் காலியாக உள்ள நிலையில், அவற்றை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில், இன்று காலை முதல் கோட்டூர்புரம் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

போராட்டக்காரர்களுடன் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், ஒரே நாளில் வீடுகள் ஒதுக்கீடு செய்ய முடியாது; துறைசார்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சரின் ஆலோசனைக்குப் பிறகே முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த பொதுமக்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்க காவல் துறையினர் அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் பின்னர் அருகிலுள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கோட்டூர்புரம் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளில் தங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை. தற்போது சுமார் 195 வீடுகள் காலியாக உள்ள நிலையில், அவற்றை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

கடந்த ஆட்சி காலத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த வீடுகள் அவர்களுக்கு ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், வேறு பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ள நிலையில், பொதுமக்கள் உடனடி தீர்வு கோரியதால் இந்த சாலை மறியல் ஏற்பட்டது. பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.”

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், தாங்கள் வசிக்கும் வீடுகள் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பழுதடைந்த நிலையில் இருப்பதாகவும், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளதாகவும் குற்றம்சாட்டினர்.

பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் தீர்வு கிடைக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தால் கோட்டூர்புரம் பகுதியில் பரபரப்பு நிலவியது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago