தமிழக அரசியலில் கட்சி மாறி பயணித்துவரும் முக்கிய பேச்சாளர்களில் ஒருவரான நாஞ்சில் சம்பத், மீண்டும் திமுக பக்கம் செல்லப் போவதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தவெகவில் இணைந்து அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக பொறுப்பேற்ற நாஞ்சில் சம்பத், தற்போது கட்சித் தலைவர் விஜய் மற்றும் அவரைச் சுற்றியுள்ள அதிகார மையங்கள் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
தனக்கு வழங்கப்படும் என எதிர்பார்த்த பதவி வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டதால் ஏற்பட்ட அதிருப்தியே இதற்கு காரணம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல கட்சிகளில் பயணித்த நாஞ்சில் சம்பத்
நாஞ்சில் சம்பத் தனது அரசியல் பயணத்தை திமுகவில் தொடங்கியவர். பின்னர் வைகோவுடன் இணைந்து மதிமுக உருவான காலகட்டத்தில் அக்கட்சியின் முக்கிய பேச்சாளர்களில் ஒருவராக செயல்பட்டார். அதன்பின்னர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் 2012ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். அக்கட்சியில் கொள்கை பரப்புச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளையும் வகித்தார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக அணியில் செயல்பட்டார். பின்னர் அமமுகவில் இருந்து விலகிய அவர், சிறிது காலம் திமுக மேடைகளிலும் பேசிவந்தார். இந்நிலையில், கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்துக்கு, அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

எம்.எல்.ஏ சீட் எதிர்பார்ப்பு
தவெகவில் இணைந்த பிறகு, 2026 சட்டமன்றத் தேர்தலில் தென்மாவட்டங்களில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என நாஞ்சில் சம்பத் எதிர்பார்த்தார். ஆனால், அவருக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அப்போது விஜயை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தபோது, தேர்தலில் சீட் கிடைக்காதது குறித்து வருத்தப்பட வேண்டாம் என்றும், ஆட்சிக்கு வந்த பிறகு உரிய பதவிகள் வழங்கப்படும் என்றும் விஜய் கூறி சமாதானப்படுத்தியுள்ளார்.
இந்த வாக்குறுதி நாஞ்சில் சம்பத்தின் மனதில் ஆழமாக பதிந்ததாகவும், ஆட்சி அமைந்த பிறகு தனக்கு முக்கியமான பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் அவர் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இயல், இசை, நாடக மன்ற தலைவர் பதவி மீது ஆசை
தவெக ஆட்சியை கைப்பற்றி விஜய் முதலமைச்சரான பிறகு, சமீப நாட்களில் பல்வேறு வாரியங்கள் மற்றும் அமைப்புகளுக்கு பதவிகள் வழங்கப்பட்டன. அப்போது இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் பதவியை நாஞ்சில் சம்பத் எதிர்பார்த்தார்.
தனது விருப்பம் குறித்து முதலமைச்சரின் ஆலோசகர்களில் முக்கியமானவர்கள், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரிடமும் நாஞ்சில் சம்பத் தெரிவித்திருந்தார். ஆனால், அவரது எதிர்பார்ப்பு தொடர்பாக நீண்ட நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
புஷ்பவனம் குப்புசாமிக்கு பதவி
இந்த சூழலில், இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் பதவிக்கு நாட்டுப்புறக் கலைஞரும், பாடகருமான புஷ்பவனம் குப்புசாமியை முதலமைச்சர் விஜய் தேர்வு செய்தார். அவருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார். தான் எதிர்பார்த்த பதவி வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டதால் நாஞ்சில் சம்பத் அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து, முதலமைச்சர் விஜயையும் அவருடைய ஆலோசகர்களையும் தொடர்புகொண்டு நாஞ்சில் சம்பத் பேச அவர் முயற்சி செய்தார். ஆனால் அந்த முயற்சி வெற்றிபெறவில்லை. இதனால் ஏற்பட்ட அதிர்ச்சி, பின்னர் கடும் அதிருப்தியாக மாறியதாக கூறப்படுகிறது.

“என் வெளிச்சத்தை யாரும் அணைக்க முடியாது”
இந்த அதிருப்தியின் வெளிப்பாடாக, நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பல்வேறு கருத்துகளை பதிவிட்டார். “போனால் போகட்டும் போடா… இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா? என்னுடைய பகலை யாரும் இருட்டாக்க முடியாது. என்னுடைய வெளிச்சத்தை யாரும் அணைக்க முடியாது. என்னுடைய காற்றை யாராலும் வழிமறிக்க முடியாது” என அவர் பாடல் வரிகள் மூலம் தனது மனநிலையை வெளிப்படுத்தி இருந்தார். இந்த பதிவுகள் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.
கட்சி நிகழ்ச்சிகளுக்கும் அழைப்பு இல்லை
இதுமட்டுமின்றி, கட்சி சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் தன்னை அழைப்பதில்லை என்ற வருத்தமும் நாஞ்சில் சம்பத்துக்கு இருந்தது. நடைபெற்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கும் தன்னை யாரும் அழைக்கவில்லை என்ற அதிருப்தி அவரிடம் இருந்துள்ளது. இதனால், கட்சித் தலைமையின் மீதான அவரது அதிருப்தி மேலும் அதிகரித்துள்ளது.
மீண்டும் திமுக பக்கம்
இந்த நிலையில், இடைத்தேர்தல் முடிந்த பிறகு தவெக முக்கிய நிர்வாகிகள் நாஞ்சில் சம்பத்தை நேரில் சந்தித்து சமாதானப்படுத்தினால், அவர் தொடர்ந்து கட்சியில் இருக்கக்கூடும் என கூறப்படுகிறது. மாறாக, சமாதானப்படுத்தும் முயற்சிகள் தோல்வியடைந்தால், தவெகவில் இருந்து விலகி மீண்டும் திமுகவில் இணைவதற்கான வாய்ப்பும் இருப்பதாகமுணுமுணுக்கப்படுகிறது.
தனது அரசியல் பயணத்தை தொடங்கிய திமுகவுக்கே நாஞ்சில் சம்பத் மீண்டும் திரும்புவாரா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. எனினும், நாஞ்சில் சம்பத் தவெகவில் இருந்து விலகுவது அல்லது திமுகவில் இணைவது தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
