செங்கல்பட்டு மாவட்டம் பெரியநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி இந்துஜா (28). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாகிறது. வெங்கடேசன் தனது தாய் பெருந்தேவியுடன் (61) ஒரே வீட்டில் வசித்து வந்தனர். கல்யாணமான முதல் நாளில் இருந்து மாமியார் மருமகளுக்கு ஏழாம் பொருத்தமாக இருந்து வந்துள்ளது. மேலும் கணவன் மனைவி இடையே வரும் சண்டைகளுக்கும் மாமியாரே காரணம் என்று நினைத்ததால் அவர் மீது இந்துஜா கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் பெருந்தேவி பாத்ரூம் சென்றபோது எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்துள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மருமகள் இந்துஜா மாமியார் என்று கூட பாராமல் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். ஆனால் ஏதுவும் தெரியாதது போல் மாமியார் பாத்ரூமில் விழுந்து மயங்கிவிட்டதாகக் கூறி, அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர் பெருந்தேவியின் உடல் பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது பெருந்தேவியின் கழுத்து எலும்பு முறியக்கப்பட்டும், அவர் மூச்சு திணறல் ஏற்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கொலை வழக்காக பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். சந்தேகத்தின் பேரில் மருமகள் இந்துஜாவிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இறுதியில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இந்துஜாவை கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மாமியாரைக் கொலை செய்தால் சந்தோஷமாக வாழ முடியும் என்பதால் தான் கொலை செய்தேன் வாக்குமூலம் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
